மகிழ்ச்சியான கணங்கள்

22.07.18 அன்று கோவை ஆர்த்ரா அரங்கில் குழுமியிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில் வயது பத்தொன்பதா, இருபதா என்ற ஐயத்திற்குத் தள்ளிவிடும் இளம் கருந்தலைகள் ஆங்காங்கே கணிசமாகத் தென்பட்டது ஆச்சர்யம். அது காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா.
ஜூலை 20லிருந்து 29வரை நடைபெற்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவையொட்டி, கடந்த ஜூலை 22ஆம் தேதி
ஞாயிறன்று நிகழ்ந்த வெளியீட்டில் ஆஸ்திரேலிய ஈழத்து எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவின் சிறுகதைத் தொகுப்பான ‘கள்ளக்கணக்கு’, கவிஞர் எழிலரசியின் ‘பெருஞ்சூறை’, இசையின் கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’, பெருமாள் முருகனின் திரையனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பான ‘நிலமும் நிழலும்’ ஆகிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
கவிஞரும் பாடகருமான ஜான்சுந்தர் குரலில் இளையராஜாவின் கீதாஞ்சலியிலிருந்து “கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்” ஒலிக்க நிகழ்வு தொடங்கியது. ஒருவர் வெளியிட மற்றொருவர் பெற்றுக் கொள்ளுதல் என்ற சடங்குகள் இல்லாமல், வெளியிடப்பட்ட புத்தகங்களிலிருந்து அந்தந்த ஆசிரியர்கள் சில பகுதிகளை வாசிக்க, அதைத் தொடர்ந்து அப்புத்தகங்கள் குறித்தான தங்கள் உரையைப் பிற எழுத்தாளர்கள் நிகழ்த்தினர்.
தன் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ‘பத்தோடு பதினொன்று’ சிறுகதையை ஆசி. கந்தராஜா வாசித்தார். கனத்த குரலில் அவர் முடித்தபோது அரங்கம் நிசப்தமாக இருந்தது. புத்தகத்தின் மேல் உரை நிகழ்த்திய க. மோகனரங்கன், கதைகளில் அறிவியல் தரவுகள் கலையாகி இருப்பதன் ஆச்சர்யத்தைச் சிலாகித்தபின், பல்வேறு நாடுகளிலிருந்து கிடைத்த வாழ்வனுபவங்களால் எழுதியுள்ள சிறுகதைகள் மூலம் அந்தந்த நாடுகளின் பண்பாட்டுப் பின்புலங்களைத் தமிழ் இலக்கியத்தில் சேர்த்திருப்பது ஆரோக்கியமானது என்றார்.
‘பெருஞ்சூறை’, கவிஞர் எழிலரசியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. தன் கவிதைகளில் சிலவற்றை அவர் வாசித்த பின், கவிஞரும் எழுத்தாளருமான சுகிர்தராணி உரையாற்றினார். ஆண் பெண் உறவினைப் புரிந்துகொள்வது குறித்தான கவிதைகளின் தன்மையை சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டார். படிமங்களின் வழி கவிதையைப் புனைவதைப் போலவே எளிய உரையாடல்களைக் கவிதையாக்குவதும் ஒரு யுக்தி என்றும் ‘பெருஞ்சூறை’யில் அது சரியாக நிகழ்ந்திருப்பதாகவும் பேசினார்.
‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ கவிதைத் தொகுப்பிலிருந்து இசை தன் கவிதைகளை வாசித்தார். சங்க இலக்கியங்களில் பெரும் நாட்டம் கொண்டிருப்பதால்தான் ‘பழைய யானைக்கடை’ போன்ற புத்தகத்தை இசையால் எழுத முடிகிறது. அதன் வீரியம் இசையின் கவிதைகளில் இருக்கிறது. லட்சக்கணக்கான கவிஞர்கள் கொண்ட தமிழ்ச்சூழலில் அடுத்த தலைமுறைக்குக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பத்து கவிஞர்களில் இசையைக் குறிப்பிட விரும்புவதாகவும் நாஞ்சில் நாடன் கூறினார்.
தன் ‘நிலமும் நிழலும்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து, 1975இல் வெளியான ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்தில் நிலவுகின்ற கொங்கு வட்டார வழக்குகள், கலாச்சாரக்கூறுகள் எத்தனை நேர்த்தி
யாகக் கையாளப்பட்டிருக்கின்றன என்பதைப் பேசும் ‘என்றா பல்லக் காட்ற?’ என்கிற கட்டுரையை பெருமாள் முருகன்வாசித்தார்.
புத்தகம் பற்றி உரை நிகழ்த்திய ஓவியர் ஜீவா, திரையனுபவங் களில் நிலவும் நகைச்சுவை உணர்வை, தரவுகள் ஏற்படுத்தும் ஆச்சர்யத்தை வியந்து பேசியதோடு நேர்மையாகவும் கறாராகவும் தமிழ் திரைப்படங்களை விமர்சித்திருந்ததைச் சிலாகித்துப் பேசினார்.
வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து ,வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பான உரையாடலை ஏற்படுத்துதல் ஆரோக்கியமான செயல்பாடு, அதை வரவேற்பதாக வந்திருந்த மாணவர்களும் தெரிவித்தனர்.
இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்களே, இத்தனை மகிழ்ச்சியை மனிதனால் தாங்கிக்கொள்ள முடியுமா?
ஒருவரை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொல்வதுதான் அவரைச் சுலபமாகக் கோபப்படுத்த எளிய வழி என்று நிகழ்வின் தொடக்கத்தில் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தது நிகழ்வின் இறுதியில் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போது ஒன்று உறுதியாகத் தோன்றியது. அக்கணம் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள்.