செப்டம்பர் 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட் 2022
    • கட்டுரை
      ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்...’
      கோவிட்-19 நெருக்கடி மருத்துவப் பராமரிப்புப் பணிகள்
      வ.ரா.வின் மகாகவி பாரதியாரும் வ.ரா.வும்
      சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல்
      காலச்சுவடும் நானும்
      பதக்கங்கள், பரிசுகள், பகிர்தல்கள்
      March to Madras (1982) (நாளும் கொலையாவோர் நெடும்பயணம்)
      சட்டவியல் நோக்கில் மொழி
      முதல் பெண்ணியப் போராளிகள்
    • கதை
      ப்ரீத்தோ
      இஸ்மாயிலின் தேவதை
    • பாரதியியல்
      இறந்த நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இரங்கல் உரை
    • சிறப்புத் தலையங்கம்
      திமுக அரசின் நூறு நாள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முனைப்பு
    • திரை
      தமிழ் சினிமாவும் பா. ரஞ்சித்தும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2021 கட்டுரை காலச்சுவடும் நானும்

காலச்சுவடும் நானும்

கட்டுரை
தியோடர் பாஸ்கரன்

காலச்சுவடும் நானும்

சு.கி. ஜெயகரன், சு.ரா, தியடோர் பாஸ்கரன்
2003இல் கோவையில் ஒரு இரவு விருந்தில்

காலச்சுவடுடன் எனது தொடர்பு 1975இலேயே ஆரம்பித்து விட்டது. அந்த ஆண்டுதான் முதன்முதலாக சுந்தர ராமசாமியை க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் சந்தித்தேன். பின்னர் அவர் சென்னை வரும்போதெல்லாம் தவறாமல் பார்த்துப் பேசுவதுண்டு.

பல ஆண்டுகள் கழித்துக் காலச்சுவடு இதழ் ஆரம்பித்த பின் அதில் எழுதத் தொடங்கினேன். சினிமாவைப்பற்றி எழுத சுரா ஊக்குவித்தார். புனே திரைப்படக் கல்லூரிப் பேராசிரியர் சதீஷ் பகதூர் 1977இல் சென்னையில் நடத்திய சினிமா ரசனை வகுப்புகளில் பங்கெடுத்து, திரையைப்பற்றிய ஒரு கூருணர்வை வளர்த்திருந்தார். அவர் ஒரு கட்டுரையில் எழுதியது நினைவிற்கு வருகின்றது, “நல்ல சினிமா, வாழ்க்கையைப்பற்றிய அலசலையோ அல்லது விமர்சனத்தையோ, அவ்வாழ்க்கையை மேலும் நாம் புரிந்துகொள்ளும்வகையில், காட்சி வடிவங்களில், கலைப்பாங்காக முன் வைக்கிறது.”

முதலில் நான் எழுதத் தயங்கினேன். காரணம், கட்டுரை இலக்கியம் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் அதிகக் கவனம் பெறுவதில்லை. எழுத்தாளர் என்றால் பொதுவாகப் புனைவிலக்கியக் கர்த்தாக்கள், கவிஞர்கள் இவர்களைப் பற்றித்தான் பேச்சு. கட்டுரைகளில் இருக்கும் விவரங்களுக்கு இலக்கிய உலகில் அவ்வளவு வரவேற்பு இருந்ததில்லை. நாவலாசிரியர் பீட்டர் மத்தீசன் கூறினார். “கட்டுரை இலக்கியம் எழுதுவது ஓர் அலமாரியைச் செய்வதுபோல, அது ஒருபோதும் சிற்பமாகாது. அது எழிலார்ந்து இருக்கலாம். ஆனால் சிற்பமாகாது. விவரங்களிலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பிலும் அடைபட்டுக் கிடப்பதால் அது பறக்காது.” ஆனால் காலச்சுவடு கட்டுரைகளை வரவேற்றது.

கலைச்சொற்களைப் பயன்படுத்தி சினிமா பற்றி நான் எழுதிய கட்டுரைகளுக்கு எதிர்வினை எதுவும் முதலில் வரவில்லை. எனக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. கலைச்சொற்கள் இல்லாமல் சினிமாவின் நுண்ணியல்புகளை வாசகர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துவது? நேரில் பார்த்துப் பேசிய நண்பர் ஒருவர் ஏன் புரியாதபடி எழுதுகிறீர்கள் என்றார். இன்னொருவர் ‘இவரின் எழுத்துக்கள் கோளாறானவை’ என்று எழுதினார். சினிமா பற்றிய எழுத்துக்கள் என்றால் அது நடிகர்களைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்புத்தியில் ஊறியிருந்தது. அதுமட்டுமல்ல சினிமா என்றால் அது பொழுது போக்குத்தான் என்பது பலரின் நிலைப்பாடாகவும் இருந்தது. இன்றும் அப்படித்தான்; என்றாலும் சினிமா சார்ந்த சில கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட காலச்சுவடு நல்ல தளமாக அமைந்தது.

2000இல் காலச்சுவடு நடத்திய தமிழினி நிகழ்வில் கலந்துகொண்டது ஒரு நல்ல அனுபவம். பல எழுத்தாளர்களைச் சந்திக்க முடிந்தது. ஆனால் அதில் நான் கட்டுரை எதையும் சமர்ப்பிக்கவில்லை. சினிமா பற்றிய கருத்துகளுக்கு வரவேற்பிருக்காது என்று நினைத்தது ஒரு காரணம். 2006இல் கோயம்புத்தூரில் காலச்சுவடு நடத்திய ‘பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுரா 75’ கருத்தரங்கில் கலந்துகொண்டு ஒரு கட்டுரையையும் படித்தேன். அதற்குக் கிடைத்த எதிர்வினை எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காலச்சுவடின் இத்தகைய கூடுகைகளில் பங்கேற்பது மிகவும் உற்சாகமாயிருந்தது. பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த படைப்பாளிகளைச் சந்தித்து, உடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களுடன் பேசி அறிந்து கொள்வது நல்ல அனுபவம். எம். சிவசுப்ரமணியன், சுகிர்தராணி, சல்மா,பெருமாள் முருகன் இவர்களை நான் முதன்முதலில் சந்தித்தது கோவைக் கருத்தரங்கில்தான். இவர்களுடைய அறிமுகம், நட்பு என் வாழ்க்கையைச் செறிவாக்கியுள்ளது.

2011இல் கன்னியாகுமரியில் நடந்த ‘சுரா 80’ என் நினைவிலிருக்கும் இனிமையான நிகழ்ச்சி. முதல் நாள் என்னைச் சந்திக்கவந்த ஜெயமோகன் மதிய உணவில் கலந்து சிறிது சலசலப்பை உண்டாக்கினார். எனது நெடுநாள் நண்பர் அம்பையைப் பார்த்துப் பேச முடிந்தது. மாலதி மைத்ரியும் வந்திருந்தார். ‘பரீக்ஷா’ ஞாநி தன் குழுவினருடன் அங்கிருந்தார். சில புதிய நட்புகளும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் உருவாவது உண்டு. அப்படி கிடைத்த அறிமுகம், போர்விமானங்கள் பற்றி எழுதும் அறிவியலாளர் டில்லி பாபு.  மாலையில் ‘பரமார்த்த குரு’ நாடகத்தைத் திறந்தவெளி அரங்கில் பார்த்தது நினைவில் நிற்கின்றது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர், தியடோர் பாஸ்கரன் திலகா, ஜீவானந்தம், தேவிபாரதி

சக எழுத்தாளர்களுடன் உறவாட கன்னியாகுமரி நிகழ்வு அமைந்ததுபோல எழுத்தாளர்கள்-வாசகர்கள் ஊடாட்டத்தை ஊக்குவிக்கக் காலச்சுவடு நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்வுகள் முக்கியமானவை. நான் கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதில் கோவை ஞானி தலைமை தாங்கிப் பேசியதை ஒரு பேறாகவே கருதினேன். பின்னர் மதுரையிலும் இதுபோன்ற நிகழ்வில் பங்கெடுத்தேன். என் இனிய நண்பர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுகம் கிடைத்தது.

எனது எட்டு நூல்களை இதுவரை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதன்முதலில் ‘சித்திரம் பேசுதடி’ சினிமா சார்ந்த கட்டுரைத் தொகுப்பை காலச்சுவடு 2004இல் வெளிக்கொண்டு வந்தபோது சில எழுத்தாளர்கள் நல்ல வார்த்தைகள் சொன்னார்கள். ஆனால் பொதுவாக சினிமா பற்றிய விழிப்பு குறைவாகவே இருந்தது. நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் அந்த நூலைப்படித்துவிட்டு, “என் எஸ் கிருஷ்ணனைப்பற்றி எழுதும்போது நீங்கள் கலைவாணர் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லையே” என்றார். கொங்கு நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமென்றால், “எனக்கு மண்ட காஞ்சு போச்சு.”

காலச்சுவடு அருமையான நூல்களைத் தெரிந்தெடுத்து வெளியிடுவதைக் கவனிக்கின்றேன். தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி இவர்களின் சிறுகதைத் தொகுப்புகளைக் குறிப்பிட வேண்டும். அதேபோல செல்லப்பாவின் வாடிவாசல், ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ போன்ற மீள் பதிப்புகள் பொறுப்பான ஒரு பதிப்பகத்தின் அக்கறைகள் எப்படி இருக்க வேண்டுமென்று காட்டுகின்றன.அது மட்டுமல்ல. இவற்றில் இடம்பெறும் முன்னுரைகள், இந்தப் பதிப்புகளைச் செறிவாக்குகின்றன. ஜானகிராமனின் கதைத்தொகுப்பிற்கு சுகுமாரன் எழுதியிருக்கும் தீர்க்கமான முன்னுரை ஓர் எடுத்துக்காட்டு. ஸ்ரீதரன் மதுசூதன் எழுதி, 2012இல் காலச்சுவடு வெளியிட்ட ‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் பிரமாதமான ஒரு படைப்பு. புதிய இலக்கியப் பரப்பைக் காட்டும் ஒரு சாளரம்.

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுக்குக் காலச்சுவடு ஊக்கம் கொடுத்தது. எம்.ஏ. நுஃமான் எழுதிய தமிழின் தொன்மை பற்றிய ஆழமான கட்டுரை ஒன்று என் நினைவிலிருக்கின்றது. கன்னியாகுமரி இலக்கியக் கருத்தரங்கில் மு. தளையசிங்கம் அரங்கம் இருந்ததும் ஞாபகம் வருகின்றது.

சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் செல்வதும், அங்கு காலச்சுவடு அரங்குக்குப் போவதும் இனிய அனுபவம். அரங்கில் அமர்ந்து எனது நூல்களை வாங்கியோருக்குக் கையெழுத்திட்டுத் தருவது சுகமான வேலை. நான் மாணவனாக இருந்தபோது எழுத்தாளராக ஆக வேண்டும் என்பது எனக்கு ஒரு கனவாக இருந்தது. ஆனால் அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை. எனக்கிருந்த கனவுகளில் அதுவும் ஒன்று. (ஏறக்குறைய நான் கொண்டிருந்த எல்லாக் கனவுகளுமே நிறைவேறி விட்டன. சிவில் சர்வீசுக்குள் நுழைய வேண்டும் என்பது அதில் ஒன்று. ஒரு நாயை வளர்த்து, போட்டியில் அதைப் பரிசுபெற வைக்க வேண்டும் என்பதும் ஒன்று. நான் சிறுவனாகக் கோவையில் ஒரு நாய்க் கண்காட்சியைப் பார்த்த பிறகு உருவான கனவு. பல ஆண்டுகளுக்குப் பின்னர், என் நாய் அல்லி, சென்னை நாய்க் கண்காட்சியில் பல பரிசுகள் பெற்றாள்.) தமிழ் உலகில் எழுத்தாளன் என்று அறியப்பட வேண்டும் என விரும்பினேன். முதன்முதலில் என்னைப் பத்திரிகையாளர் ஒருவர் தன் கட்டுரை ஒன்றில் ‘எழுத்தாளர்’ என்று குறிப்பிட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

சிறுகதை எழுதுதல், ஒரு நூலைச் செப்பனிடுதல் போன்ற இலக்கியத் திறன்களை வளர்க்க எழுத்தாளர்களுக்குக் காலச்சுவடு நடத்திய பட்டறைகள் தற்காலத் தமிழ் இலக்கியப் பெருவெளியில் முக்கியமான நிகழ்வுகள். ஒரு நூலைச் செப்பனிடுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பலர் உணர்ந்தனர். இதில் நண்பர் நஞ்சுண்டனின் பங்களிப்பை நினைவுகூர்கின்றேன்; மொழி பற்றிய நுண்ணுணர்வுடன் செப்பனிடுவதில் இவர் திறமைசாலி. இவரது மறைவு ஒரு பேரிழப்பு.

ஒரு நூலை உருவாக்கும் வேளையில் காலச்சுவடு நிறுவனத்தில் பணிபுரிவோருடன் வேலை செய்வது மிகவும் எளிதாக இருக்கின்றது; சந்தேகங்கள் உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன. மின்னஞ்சல்களுக்குப் பதில் சீக்கிரமே வருகின்றது. தொலைபேசியில் நாம் பேச வேண்டுவோர் கிடைக்காவிட்டால், அவர்களே, நம்மைக் கூப்பிடுவார்கள். கலா, ஜெபா, நாகம் இவர்கள் கனிவுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கிறார்கள். ஒவ்வொரு நூலுக்கும் எழுத்தாளருடன் ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. சில புத்தகங்களை அவர்களே கிண்டிலில் ஏற்றிவிடுவதுடன், வெளி மாநில நூலகங்களுக்கும் அவற்றை அனுப்பிவைக்கின்றார்கள். இந்தியாவில் இயங்கும் பல பெயர்பெற்ற ஆங்கில நூல் வெளியீட்டாளர்களுக்குக் காலச்சுவடு மேல் இருக்கும் மதிப்பை நான் அறிவேன்.

தமிழ்நாட்டில் நூல் வெளியீட்டில் சில கசப்பான அனுபவங்கள் எனக்கு உள்ளன. நூலைப் பதிப்பிக்கின்றோம் என்று கேட்டு வாங்கிக்கொண்டபின்தான் தெரியும் அந்த நிறுவனத்திற்கு ஓர் அலுவலகம்கூடக் கிடையாது என்பதும் இது ஒரு குடிசைத்தொழில் போல் சிலரால் நடத்தப்படுகின்றது என்பதும். தட்டச்சு செய்பவர் உளுந்தூர்பேட்டையில் இருப்பார், வடிவமைப்பவர் கும்மிடிப்பூண்டியில் இருப்பார், வெளியீட்டாளர் வேறு எங்கோ இருப்பார். நூலைப்பற்றி ஒன்றும் தகவல் இல்லையே என்று தொலைபேசியில் கூப்பிட்டால் பதிலளிக்கமாட்டார்கள். கைப்பேசியில் கூப்பிடுகிறவர் யார் என்றறியும் வசதி இருக்கின்றதே; நிறுத்தக் குறிகள், ஒரு நூலின் அங்கங்கள் இவைபற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. புத்தக வெளியீடு ஒரு பகுதிநேர வியாபாரம். நூலை வெளியிட்டு விற்பதும், சூளையில் செங்கல் செய்து விற்பதும் இவர்களுக்கு ஒன்றுதான். திருத்திய பிரதியைத் திருப்பி அனுப்பாமல் காலம் தாழ்த்திய ஒருவரை இரண்டாவது முறை தொலைபேசியில் கூப்பிட்டபோது குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்துவிட்டார். இம்மாதிரியான இரண்டு மூன்று வெளியீட்டாளர்களிடம் அகப்பட்டுக்கொண்டு நான் திண்டாடியதுண்டு.

ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கண்ணனுடன், கோபமின்றி, மனவருத்தம் ஏதும் இன்றிப் பேசித் தீர்க்க முடிகின்றது. என்னுடைய அனுமதியை நாடாமல் நான் எழுதிய கட்டுரை ஒன்றைக் காலச்சுவடு ஒரு தொகுப்பில் 2005இல் வெளியிட்டது. இதைப்பற்றி நான் அவருடன் பேசிக் கடந்துபோக முடிந்தது. கருத்து வேறுபாடு கோபத்திலோ, மனக்கசப்பிலோ முடியவேண்டியதில்லையே. ஜோப் தாமஸ் எழுதிய Chola Bronzes என்ற நூலைச் ‘சோழர்கால செப்புப் படிமங்கள்’ என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிடும்வகையில் மொழிபெயர்த்திருந்தேன். அந்தப் பிரதியைத் தான் செப்பனிட்டுத் தருவதாக க்ரியா ராமகிருஷ்ணன் கூறினார். அவர்களுக்கிடையே நல்ல உறவு இல்லையென்று அறிந்திருந்தபோதிலும், நான் கேட்டபோது கண்ணன் அதற்குத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். நான் தொலைபேசியில் பேசும்போது சில புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்களை, அறிமுகப்படுத்தும்போது, சிக்கனமாக ஓரிரு வாக்கியங்களில் அவர்களை விவரிப்பார்; கச்சிதமாக இருக்கும்.

மற்ற நிறுவனங்களுடன் இணைந்து இயங்கும் திறனை அவர் வளர்த்துள்ளார். நான் தொகுப்பாசிரியராக வெளியிட்ட மா. கிருஷ்ணனின் ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்ற நூலைப் பள்ளி மாணவர்களுக்காக நான்கு பாகங்களாகக் காலச்சுவடு வெளியிட UNICEF இல் இருந்து ஒரு நல்கை பெற்றார். தங்கள் எழுத்தாளர்களின் நலனை மனத்தில் கொண்டு கண்ணன் இயங்குவதைக் கவனித்திருக்கிறேன். வெளிநாட்டில் நடக்கும் சில இலக்கியப் பட்டறைகளுக்குப் பயணநல்கை வாங்கி எழுத்தாளர்களை அனுப்பியிருக்கிறார்.

இத்தகைய கரிசனத்தைக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்வு ‘மாதொருபாகன்’ நாவலை எழுதிவிட்டு பெருமாள்முருகன் பட்ட பாடும் கண்ணன் அவருக்கு உறுதுணையாக நின்றதும். அந்த பிரச்சினை உயர்நீதிமன்றத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்புடன் முடிந்தது. இத்தீர்ப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் மட்டுமல்ல, இந்திய இலக்கிய வெளியில் இது முக்கியமான ஒரு தீர்ப்பாக விளங்கும். இந்த நிகழ்விற்குப்பிறகு இந்த வழக்கு மட்டுமல்ல, பெருமாள் முருகனின் படைப்புகளும் பன்னாட்டளவில் கவனிக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். New York Times ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டது. நம் நாட்டில் வருங்காலத்தில் இத்தீர்ப்பு எழுத்தாளர்களுக்கு ஒரு கேடயம்போல் செயல்படும்.

                  மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.