சிக்கல்களின் பெருமுடிச்சி
மீண்டும் தமிழக மீனவர்கள் இருவர் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இம்முறை கடற்புலிகளால். தமிழக மீனவர்மீதான ஒருதரப்புத் தாக்குதலில் 13.07.2008இல் இலங்கை அரசு வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடியிருக்கிறது என்று சொல்ல லாம். இலங்கை அரசு 1983இல் இதே நாளில் தனது முதல் தோட்டாவைத் தமிழக மீனவனின் உடலில் செலுத்தி வெள்ளோட்டம் பார்த்தது.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இருவர் 11.07.2008இல் இந்தியக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; மற்றுமொருவர் படுகாயப் படுத்தப்பட்டார். 13.07.08இல் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புஷ்பவனம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டுப் படகு - வலைகள் சேதப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர். ஜூலை 11 நிகழ்வு சேதுக்கால்வாய் தோண்டிக்கொண்டிருக்கும் பகுதியில்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழக மீனவர்கள் ஒட்டுமொத்தமாக எல்லை தாண்டிச் சென்று பிறிதொரு நாட்டுக்குத் தொல்லை கொடுப்பவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். உண்மை என்னவென்றால் இலங்கை - இந்திய அரசுகள் இரண்டுமே எல்லைமீறிப் போகின்றன. இலங்கை தனது எல்லையைத் தாண்டிவந்து இந்திய மீனவர்களைச் சுடுகிறது, வன்கொடுமை செய்கிறது, விரட்டியடிக்கிறது; நிலம் சார்ந்த எல்லை விடயங்களில் கர்மசிரத்தையாக இயங்கும் இந்திய அரசு கடல் எல்லை விடயத்தில் 'எல்லை மீறிய பொறுமை' காக்கிறது. இந்த எல்லையற்ற 'பொறுமை'க்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆட்சி அரசியல் கணக்குகளை நோக்கர்கள் விளங்கிக்கொள்வார்கள்.
2007 மார்ச் 29இல் சின்னத்துறை மீனவர்கள் கடல் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத் தலைநகர் அதிரும் அளவுக்கு 2007 ஏப்ரல் 4, 5 தியதிகளில் ஆர்ப்பாட்டம், அனைத்துக் கட்சி பந்த் என்று களேபரப்படுத்தினார்கள். நாகை மீனவர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் கட்சியினர் 20.07.2008இல் மாநிலம் தழுவிய பட்டினிப் போராட்டத்தை 'வெற்றிகரமாக' நடத்தி முடித்திருக்கிறார்கள். உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கான கருணைத் தொகை ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் கடல்போல் கொந்தளிப்பார்கள், மறுகணமே காயல்போல் வடிந்துவிடுவார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டே அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்துகின்றன என்று கடந்த வருடம் காலச்சுவடு இதழில் எழுதியிருந்தேன். பிரச்சினையின் அடிவேரைத் தேடியறுக்க வேண்டுவதுதான் உண்மையான தீர்வு.
நடுக்கடலில் தமிழர் படுகொலைத் தொடர் நிகழ்வுகளின் வேர் எது? 'எல்லை தாண்டுதல்', 'அத்துமீறுதல்' என்று இலங்கை அரசுத் தரப்பும் இந்திய அதிகாரிகள் தரப்பும் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பதன் பின்னணி என்ன?
முதலில், கொள்கை வகுக்கும் குடிமை அதிகாரிகளுக்கே கடல் வாழ்க்கையின் எதார்த்தங்களும் கடலின் இயல்பும் புதிர்களாய் இருக்கின்றன; இந்தப் புதிர்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குக் கிஞ்சித்தும் அக்கறையும் இல்லை என்பது வேறுவிஷயம். 'எல்லை' என்னுமொரு சொல்லையே வாளாகப் பிரயோகித்து இந்தப் பிரச்சினையை வேரோடு வெட்டிச் சாய்த்துவிடலாம் என்று இந்த அதிகாரிகள் நம்புகிறார்கள், நம்பச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் 1,076 கிலோமீட்டர் கடற்கரையில் ரோந்துவரும் கடலோரக் காவல் படையின் கப்பலில் பிரதேச மொழி தெரிந்தவர் ஒருவராவது இருந்தால் மீனவர்களுக்குப் புரிகிற மொழியில் தகவல் பரிமாற்றம் செய்யலாமே என்று ஒரு சபையில் நான் குறிப்பிட்டபோது கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார். "பிரதேச மொழி தெரிந்தவர் இருக்கக் கூடாது என்பதுதான் காவல் படையின் நோக்கமே! தமிழர்களைத் தேசிய உணர்வு கொண்டவர்களாக இந்தியப்படை கருதுகிறதா என்பதே கேள்விக்குரியது!" என்றார் அவர். நாம் இன்னொரு உலகத்தில் இருக்கிறோம். மீனவர்களுடைய எதிரி யார் என்று குறிப்பிட முடிகிறது; அவர்களுக்கு நம்பிக்கையான உதவிக்கரம் எது என்றுதான் சொல்ல முடியவில்லை. மீனவர்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கும் சக்தி பொருந்திய உண்மை இது.
1974இல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை அப்போது ஆண்டவர்கள் இதற்கு எதிராக வலுவாய்க் குரல் எழுப்பவில்லை என்ற குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும். நாட்டுடனிருந்த ஒரு நிலப்பகுதியை மற்றொரு நாட்டிற்குத் தானம் செய்யும்படி நடுவண் அரசுக்கு அன்று ஏற்பட்ட நிர்ப்பந்தம் தான் என்ன? அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார் இதற்கு எந்த வெளிப்படையான காரணமும் கூறவில்லை. 35 ஆண்டுகளாக இந்திய - இலங்கை - பன்னாட்டுக் கடல்பகுதியில் தொடரும் இந்த எல்லை தாண்டும் பிரச்சினையை முன்வைத்து இதுவரை 360 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்; 8,000 முறை இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளது; இதில் 1,000 மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளனர்; நூற்றுக்கு மேற்பட்ட இந்தியப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது மூழ்கடிக்கப்பட்டன. காணாமல் போன 95 கன்னியா குமரி மீனவரில் பலர் இலங்கைச் சிறையில் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
1989இல் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார்; 1991இல் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் வதைத்துக் கொல்லப்பட்டார். இலங்கையுடனான உறவு மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த அணுகுமுறையில் இந்திய அரசு 1991க்கு முன்னரும் பின்னரும் முரண் நிலைகளை எடுத்து நின்றிருக்கிறது. இந்தச் சீர்நிலையற்ற அணுகுமுறை தென் தமிழக மீனவர்களின் துயரத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தியக் கடலோரக் காவல்படையும் இலங்கைக் கடற்படையும் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையும் கெடுபிடிகளும் ஒருபுறம் இருக்க எல்டிடிஇ கடற்புலிகளும் தமிழக மீனவர்களைப் பிடித்துச் செல்கிறார்கள். தொலைவுக் கடலிலிருந்து ஆயுதங்கள் கடத்துவதற்குக் கடற்புலிகள் தமிழக மீனவர் படகுகளைப் பறிமுதல் செய்வதும் துப்பாக்கி முனையில் இவர்கள்மீது வன்முறை நிகழ்த்துவதும் 2007இல் மீண்டுவந்த 12 கோடிமுனை மீனவர்களிடமிருந்து அறியப்பெறும் செய்தி. ஒருபுறம் இலங்கைக் கடற்படையின் ஊடுருவல் - தாக்குதல்; மறுபுறம் கடல்புலிகள் நிகழ்த்தும் வன்முறைகள்; இன்னொருபுறம் இந்தியக் கடலோரக் காவற்படை நிகழ்த்தும் வன்முறையும் நடுவண் அரசின் பாராமுகமும். வெந்த புண்ணில் வேல் எறிந்த கதையாக நமது அரசு அதிகாரிகள் விடும் அறிக்கைகள் அமைந்துவிடுகின்றன.
"மீனவர்கள் பேராசையினால் எல்லை தாண்டிச் செல்வதுதான் இந்த விபரீதங்களுக்குக் காரணம்" என்பது நாளிதழ்களில் இந்த அதிகாரிகள் விடுக்கும் வழக்கமான அறிக்கை. இதன் பின்னணியில் இருக்கும் வேதனை மிகுந்த உண்மை ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
1974 வரை தமிழக மீனவர்கள் கச்சத்தீவை எந்த இடையூறுமின்றிச் சுதந்திரமாகப் பயன்படுத்திவந்தனர். கச்சத்தீவு வலை உலர்த்துவதற்கும் மீனவர் ஓய்வெடுப்பதற்குமான வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. பன்னாட்டுக் கடல் எல்லை வரையறை முறைமைகளின்படி அருகருகே அமைந்திருக்கும் கடலோர நாடுகள் கடற்பரப்பைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். தமிழகத் தாய் நிலத்திலிருந்து கச்சத்தீவுக்கு 12 கல் தொலைவு; கச்சத் தீவிலிருந்து இலங்கைக் கடற்கரைக்கு 16 கல் தொலைவு. கச்சத்தீவு இந்தியாவின் முற்றுரிமைப் பகுதியாக இருந்த காலம்வரை கச்சத்தீவிலிருந்து 8 கல் தொலைவுவரையில் இந்தியக் கடல் எல்லை விரிந்து கிடந்தது. தமிழகக் கடற்கரையிலிருந்து (12+8) 20 கற்கள் தொலைவுவரை சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருந்தது. 1974இல் கச்சத்தீவு இலங்கையின் ஒருபகுதியாக மாறிவிட்ட நிலையில் அந்த எல்லை தமிழகக் கடற்கரைக்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட தூரமாகிய 12 கற்களில் பாதியாகக் (வெறும் 6 கல்) குறைந்துவிட்டது! இதுமட்டுமல்ல, பன்னாட்டுக் கடற் பரப்பில்கூடத் தமிழக மீனவர்கள் சென்று மீன்பிடிக்க முடியாத நிலைமையை இந்தியப் படையும் இலங்கைப் படையும் கடற்புலிகளும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை எல்லாக் கடலோர நாடுகளுக்கும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால், அங்கெல்லாம் இதைக் காரணம்காட்டி நிராயுதபாணியான மீனவர்களின் நெஞ்சில் மற்றொரு இராணுவம் தோட்டாவைப் பாய்ச்சுவதில்லை. கட்ச் (குஜராத்) பகுதியில் இந்திய - பாகிஸ்தான் மீனவர்கள் மாற்று அரசுப் படைகளால் சிறைபிடிக்கப்படுவதுண்டு, ஆனால், காக்காய் குருவிகள்போல் சுட்டுத் தள்ளப்பட்டதில்லை. இப்படிச் சிறைப்படும் மீனவர்கள் காலக்கிரமத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலம் விடுதலை செய்யப்படுவது முண்டு. எல்லைதாண்டி இந்தியக் கடலுக்குள் நுழையும் இலங்கை மீனவர்களை இந்தியப் படை சுட்டு வீழ்த்துகிறதா? இல்லையே. இந்தியா கடைபிடிக்கும் இந்த மென்மையான நியாயமான அணுகு முறைக்குப் பொருத்தமான போக்கு இலங்கையிடம் இல்லாமல் போனது ஏன்?
தமிழகத்தை ஆளும் கட்சியினர் தமிழக மீனவர் படு கொலையைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் 19.07.08இல் பட்டினிப்போர் நடத்தினர். இதில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி 'மீனவர்களை எங்கள், உடன்பிறப்புகளாகக் கருதுகிறோம்' என்றார். இராஜ்யசபா எம். பி. கனிமொழியோ 'சேது சமுத்திரக் கால்வாய் நிறுவப்பட்டால் நமது மீனவர்களுக்குப் பாதுகாப்பு உறுதியாகும்' என்று பேசியிருக்கிறார். 'மீனவ உடன் பிறப்புகள் தங்கள் கடல் தொழிலை விட்டோடி வீடுகளில் முடங்கிவிடுவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது' என்று சொல்ல வருகிறாரா கனிமொழி? சேதுக்கால்வாய் தோண்டிக் கொண்டிருக்கும் பகுதியில்தான் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 11.07.08இல் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. முதலுக்கே மோசம் விளைவிக்கும் கருத்து கனிமொழியினுடையது.
மக்கள் பிரச்சினைகள்மீது நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கரிசனமான அரசுகளல்ல நம்முடையவை. டெல்லியிலும் சென்னையிலும் கோலோச்சும் அதிகாரிகளுக்குக் கடல் அறிவியல், கடல்சார் வாழ்க்கையின் யதார்த்தங்கள் விளங்கவில்லை. ஒருகோடி மீனவர்கள் இந்தியாவின் 8,000 கல் கடற்கரைகளில் வாழ்கிறார்கள். இது தவிர உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடித்தும் மீன்வளர்த்தும் வாழ்க்கை நடத்துவோர் பல இலட்சம்பேர். ஆண்டுதோறும் இந்தியாவின் கடலோர மீனவர்கள் மீன் அறுவடைமூலம் தந்துவரும் பங்களிப்பு 32,000 கோடி ரூபாய்; அன்னியச் செலவாணி மட்டும் 8,000 கோடி ரூபாய். ஒரு ஜம்போ ஜெட் விமானத்தை நிரப்பும் அளவுக்கு விசாலமான நடுவண் அமைச்சரவையில் மீன்வளத்துக்கென்றும் மீனவர் நலனுக்கென்றும் ஒரு இருக்கையை ஒதுக்கும் தெளிவு நடுவண் அரசுக்கு இல்லாமற்போனது.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க்கின் மீது (SAARC) நமது கவனம் திரும்பாமலில்லை. 'செயல்படாதிருப்பதும் செயல்பாடுதான்' என்ற நரசிம்மராவ் சித்தாந்தத்தைச் சிரமேற்கொண்டவர்கள்! புலம்பெயரும் மீனவர் சிக்கல்கள், 'எல்லைக் கடல் படுகொலை' முதலிய பிரச்சினைகளில் தெற்காசியக் கடலோர நாடுகள் இன்றுவரை என்ன நிலைப்பாடு எடுத்திருக்கின்றன. இவற்றுள் மிக நீண்ட கடற்கரைக்குச் சொந்தக்கார நாடான இந்தியா மீனவர் பிரச்சினை குறித்து சார்க் மாநாடுகளில் வாய் திறப்பதில்லை. நாடுகளின் உள்முக அரசியல் திட்டங்களை முன்வைத்து எல்லாக் கடலோர நாடுகளும் இதில் மௌனம் காக்கின்றனவோ என்னவோ. வெளிப்படையாகப் பேசாமல் எந்தப் பிரச்சினைக்கும் நீடித்த தீர்வு கிடைக்காது. மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் சில வருடங்களாக அரசியல் தலைவர்கள் சிலர் பேசிவருகிறார்கள். துப்பாக்கியைச் சாப்பிட முடியாது. நமது மீனவர்கள் சுதந்திரமாய¢ மீன்பிடிக்க நமது கடற்பரப்பைப் பாது காப்பாக்கிக்கொள்ள வேண்டுவது ஆளும் அரசுகளின் தனிப்பெருங் கடமை. பட்டினிப் போர்களோ அரசியல் அறிக்கைகளோ தீர்வுகளைத் தராது. இந்தியக் கடலோரத்தில் பாராளுமன்றத் தொகுதிகள் மட்டும் 82 உள்ளன. இதில் குஜராத்தில் கட்ச் பகுதியும் தமிழ்நாட்டின் 5 தென்மாவட்டப் பகுதிகளும் தீவிரப் பிரச்சினைகளைச் சந்தித்து வருபவை. இந்தப் பகுதியிலுள்ள பிரதிநிதிகள் மக்களுடனான தொடர் அமர்வுகளின் வழியாகவும் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க முடியும். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் கடலோரம் சார்ந்த சட்டமன்றப் பிரதிநிதிகளும் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல்களைக் கேட்டறிந்து ஆளும் அவையில் பிரதிபலிக்க வேண்டும்.
இறுதியாக, சிக்கல்களின் பெருமுடிச்சாக உருவெடுத்திருக்கும் கச்சத்தீவுப் பிரச்சினை: 'கச்சத்தீவை மீட்டெடுக்கவும் வலியுறுத்தத் தயங்கமாட்டோம்.' என்று இப்போதாவது தமிழக முதல்வர் பேசியிருக்கிறார் (1974இல் கச்சத்தீவு இலங்கைக்குக் கைமாறியபோதும் இவர்தான் முதல்வராயிருந்தார்.) கச்சத்தீவு அதன் உண்மையான உரிமைதாரரான இந்தியாவுக்குக் கைமாற வேண்டுவது இந்திய இறையாண்மைக்கும் நமது மீனவர்களின் பாதுகாப்புக்கும் இன்றியமையாதது. இதற்கான முயற்சியை முடுக்கிவிட வேண்டும். பன்னாட்டு அரசியல் விளையாட்டுகளில் நம்நாட்டு மீனவர்களின் வாழ்வு பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
காலின் ஏதோவொரு பகுதியில் நாட்பட்ட காயமிருந்தால் இடுப்புக்குக் கீழே நெறிகட்டிக்கொள்வது போல இலங்கை இனப்பிரச்சினை தென் தமிழக மீனவர்களைப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பை எந்த நிலைவரை அனு மதிக்கலாம்? புலம்பெயரும் மீனவர் பிரச்சினை, எல்லை தாண்டும் பிரச்சினை இரண்டுமே நாட்பட்ட காயங்கள், ஊடக உலகின் கவனக் குவிப்பிற்குத் தகுதியானவை. துறை வல்லுநர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அழைத்து மீனவப் பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கேற்ற திறந்த வெளியை உருவாக்குவது தேவை. பன்னாட்டு மனித உரிமை சாசனங்கள் மற்றும் கடல் சட்டங்களின் சட்டகத்துக்குள் நின்றுகொண்டு இதற்கான தீர்வுகளைத் தேட முடியும்.