கடந்த பருவங்களுக்கான கனவில் தோய்ந்தவள்
வழக்கம்போல உறங்கிக் காலையில் எழும் அலுவலக ஊழியன் ஒருவன் கட்டிலில் கரப்பான்பூச்சியாகத்தான் உருமாற்றம் அடைந்திரு ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவதாக "காஃப்காவின் உருமாற்றம்" தொடங்குகிறது. அக்கணத்தில் வாசகராகிய நமக்குள்ள சாத்தியங்கள் இரண்டு. முதலாவது, ஆரம்பமே இப்படி முழக்கணக்கில் காதில் பூச்சுற்றுகிற அதீதக் கற்பனையாக இருக்கிறதே, அதற்குத் துணைபோவதா என்று நினைத்துப் புத்தகத்தை மூடிவிட்டு வேறு வேலைகளைப் பார்ப்பது. இரண்டாவது, பரவாயில் லையே வித்தியாசமான ஆரம்பமாக இருக்கிறதே என்று நினைத்து அதன் வசீகரப் புனைவுத் தன்மையில் மனத்தைப் பறிகொடு த்து மேலே வாசிப்பினைத் தொடர்வது. மூன்றாவதானதொரு வாசக மனநிலையுண்டு. இன்னார் இன்னாரெல்லாம் சிபாரிசு செய்தி ருக்கிறார்களே, அப்படி என்னதான் இருக்கிறது என்கிற நினைப்புடன், இறுதிப் பக்கம்வரை தாமரை இலைத் தண்ணீராகவே வாசித்து முடித்து எழுந்திருப்பது. துராஸ் வாசகர்களைப் பொறுத்தவரை மூன்றாவது பிரிவினருக்கு வாய்ப்பே இல்லை. அவர்களை, வாசித் துப் பரவசம்கொள்கிறவர்கள் அல்லது வாசித்து அருவருப்புடன் முகத்தைச் சுளிக்கிறவர்கள் என்று இரண்டே இரண்டு பிரி வுக்குள் அடக்கிவிடலாம். பொதுவாக மிகப் பெரிய படைப்பாளிகளுக்குள்ள குணம், அனைவரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தவோ தம்மைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும்படியான ஆக்கதாரிகளாக அவதரிக்கவோ அவர்களால் இயலாதது. தமது புகழ்பெற்ற படைப்பான காதலன் (L'Amant) பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த குறுகிய காலத்திலேயே, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்த தருணம், பிரான்சு நாட்டின் ஜனாதிபதியும் எழுத்தாளரின் நண்பருமான பிரான்சுவா மித்தரானுடன்1 பாரீஸில் புகழ்பெற்ற உணவு விடுதியன்றில் துராஸ் உரையாடிக்கொண்டிருக்கிறார், பேச்சு நடுவே, "பிரான்சுவா, என்னைச் சாதாரணமா நினைச்சுடாதே, உன் னைக்காட்டிலும் நான் பெரியவளாக்கும், கொஞ்ச நாட்களாக உலகமெங்கும் நன்கு அறிஞ்சவளா மாறிக்கொண்டுவரேன், உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?" என்று கேட்க, பிரெஞ்சு ஜனாதிபதி, "துராஸ், இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பலரும் அறிந்த உண்மைதானே?" எனத் தம் பங்குக்கு துராஸ§டைய பெருமிதத்தை உறுதிப்படுத்துகிறார். பிரெஞ்சு ஜனாதிபதி மாத்திரம ல்ல, சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள், அவரது காதலனை (L'Amant) ஆர்வத்துடன் உலக மொழிகள் பலவற்றுள்ளும் வாசித்த, வாசித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வாசகர்களும் சேர்ந்தே அறிவார்கள்.
துராஸ் உயிரோடிருந்தவரை, இடர்ப்பாடுகளிடையே சிக்கித் தவித்தபோதும், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியபோதும் படைப்பு - படைப்புலகம் என்றில்லாமல், நாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில், அது அரசியலாகட்டும், வேறு பிரச்சினைகளாகட் டும், ஒதுங்கியிருந்தவரல்ல. பிரான்சு ஜெர்மானிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளானபோது தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு நாஜிப்படைக்கு எதிராக இயங்கியது தொடங்கி, புகழ்பெற்ற மே 68 மாணவர் போராட்டம், அல்ஜீரிய நாட்டின் விடுதலைக்கு ஆதர வு, தீவிரப் பெண்ணியம் என்று அப்பட்டியலை நீட்ட முடியும். கீழைத் தேயத்தைச் சுவாசித்த பெண்மணி. அவரது இலக்கியப் பாதை மீகாங், கங்கை, சாடக், லாவோஸ், பர்மா, கல்கத்தாவெனப் பூமிப்பந்திற்குக் கிழக்கில் பயணிக்கிறது.
உலகெங்கும் அநேகப் பல்கலைக்கழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் துராஸ் படைப்புகளுள்ளன. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, அவரது ஆளுமைமிக்க எழுத்துக்கள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. 1984இல் பிரசுரமான அவருடைய காதலன்' (L'Amant- ஜிலீமீ லிஷீஸ்மீக்ஷீ) என்ற நாவலுக்குப் பிரான்சின் மிகப் பெரிய இலக்கியப் பரிசான கொன்க்கூர் (லிமீ றிக்ஷீவீஜ் நிஷீஸீநீஷீuக்ஷீt) கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே சுய வரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அவற்றைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும் அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும் நாம் இதுவரை அறிந்திராத சொப்பன உலகத்திற்கான கதவுகளைத் திறப்பவை. கதவுக்குப் பின்புறம் ஒளிந்து நாம் பாராதபோது வெட்டித் தெறிக்கிற பெண்ணுக்குண்டான பார்வைக்கும் பருவச் செயல்பாடுகளுக்கும் உரிமைகோரிக் கால மயக்கத்தில் தத்தளிப்பவை; பின்னோக்கி நடந்து மீள்பவை; நினைவுகளைக் கீறி வலி பொறுப்பவை. பெருவாரியான நேரங்களில் பாத்யதையற்ற வெளிகளில் அவரது சிருஷ்டிகள் அநாதைகளை ஒத்துக் கனவுலகில் சஞ்சரிப்பதைப் பார்க்கிறோம். அவர்களை ஆரோக்கியமான உருவாக்கங்களாகக் கொள்வதற்கில்லை, மாறாக உளுத்துப்போன உத்திரங்களாகத் தங்களுக்கும் தங்கள் தாங்குபொருளுக்கும் சரிவூட்டக்கூடியவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கனவுகளைச் சுவாசிப்பவர்கள், நீர்த்த கற்பனைகளில் மிதப்பவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள், அசலா நகலா என்கிற தருக்கப் பொருளுக்குரியவர்கள். திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட வழிபோக்கனுக்கு நேரும் அத்தனை அச்சுறுத்தும் அனுபவங்களும் வாசகனுக்கு உத்தரவாதம். சில நேரங்களில் உண்மையைச்(?) சொற்களில் கட்டமைக்க அவர் மிகவும் சிரமப்படுகிறார் அல்லது அதுபோல நாடகமாடுகிறார். அவ்வாறான நேரங்களில், பிரதான சொல்லில் துளையிட்டுப் பல சொற்களை அதிலடக்கியுள்ளதாகச் சொல்கிறார். "எதிர்காலத்தில் எழுத் தென்பது எழுதப்படாததாக இருக்கக்கூடும், ஆம். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை. மிகச் சுருக்கமாக, இலக்கணமின்றி, சொற்களை மட்டும் நம்பி எழுதப்படும் அவ்வெழுத்து இலக்கணம் மறுத்து, அலைக்கழிக்கும் சாத்தியங்களுடன் இருக்கு மென்று" தனது ணிநீக்ஷீவீக்ஷீமீ (எழுதுதல்) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
உண்மைக்கு அண்மையில் நிறுத்தப்படும் எழுத்துக்கள் அனைத்துமே வெற்றியை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை துராஸ் படைப்புகள் நிரூபித்திருக்கின்றன. நாவல்கள் என்றில்லை அவரது பத்திகள், நாடகங்கள் திரைப்படங்கள்கூட உண்மையால் பின்னப்பட்டவை. யதார்த்தங்களால் நெய்யப்பட்டவை. பிரெஞ்சு இதழ்களில் பத்தி எழுதும் வழக்கத்தை துராஸ் கொண்டிருந்தார். அதில் காத்திரமான அவரது மனத்தின் வெளிப்பாடுகள், சுற்றியிருந்த அரசு அமைப்புகளைக் கடுமையாக விமர்சி த்தன. நாட்டில் நிலவும் ஏற்றதாழ்வுகளுக்கும் அவலங்களுக்கும் நீதித்துறையும் சட்டமும் அரசு நிர்வாகமுமே பொறுப்பென்று எழு தினார். பொதுவாக மேற்கத்திய எழுத்தாளர்கள் தங்கள் மனத்திற்கு விசுவாசமாக இருப்பவர்கள். சுயநலன்களுக்கு உத்தரவாதத்தினைத் தேடிச் சமரசம் செய்துகொள்ளும் வழக்கமற்றவர்கள். துராஸ் குருதியிலும் அக்குணம் விரவிக்கிடந்தது. ஆனால், பத்தி எ ழுதுகிறபோதும்கூட எதற்காக எழுதுகிறோம் என்பதைத் தீர்மானித்த பிறகே எழுதியிருக்க வேண்டும். அவற்றிலும்கூடத் தேர்ந் ததொரு கதை சொல்லியாகப் பார்க்கிறோமேயன்றிப் பத்தியாளராகவல்ல. உதாரணம்: ணிtமீ 80 (கோடை'80) 2 மாஸ்கோவில் ஒலிம்பிக் போட்டியைத் தொடங்கி வைக்கும் பிரஸ்னேவ், மன்னர் ஷாவுடைய இறுதி அடக்கத்தினைத் தொடர்ந்து இஸ்லாமிய மதவாதிகளின் கைக்குள்வரும் ஈரான் நாட்டின் தலைவிதி, இத்தாலியின் நகரமான பொலோஜ்ன் இரயில் நிலையத்தில் இடதுசாரித் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி களின் உயிரிழப்பு, உகாண்டா நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் என எழுதிச்செல்லும்போதுகூட ஒரு இளவயதுத் தாய்க்கும் அவள் மகனுக்கும் இடையேயான அன்பினை நேர்த்தியான மொழியில் அவரால் கட்டமைக்க முடிகிறது. 1957இல் பிரான் சில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம், மருத்துவரொருவர், மனைவியைக் கொல்லத் தன்மீது பித்தாக இருந்த காதலியைக் கரு வியாகப் பயன்படுத்தி வெற்றியும் பெறுகிறார். அச்சம்பவத்தை 'விடிந்தால் சனிக்கிழமை, வெள்ளி இரவு, நடுத்தர வயதைக் கடந் தவள், துர்தேவதை, விபச்சாரிகளுக்கேயுரிய ஆடை, கறுப்புநிறத்தில் நிர்வாணத்தை மறைக்கும் ஒரு மேலங்கி, இரு கைகளிலும் கையுறைகள், பிச்சுவாவைப் பிடித்தபடி, குற்றத்தைத் தனது காதலுக்குக் கடைசி அத்தியாயத்தை எழுதவி ரும்பும் ஆர்வத்துடன். . . மிகக் கொடூரமான, மிருகத்தனமான குற்றத்தைச் செய்ய, காதல்வயப்பட்ட இளம்பெண்ணொருத்தி முதன் முதலாகத் தனது காதலனைச் சந்திக்கின்ற ஆர்வத்துடன் புறப்பட்டுவிட்டாள்3 என்றெழுதுகிறபோது ஒரு நாவலைப் படிக்கிற அனுபவத்தினையே சந்திக்க நேரிடுகிறது.
எவ்வாறு ஓர் உண்மைச் சம்பவம், துராஸ் கைவன்மையில் நாடக வடிவம் பெற ஏதுவாகிறது என்பதற்கு நல்ல உதாரணம் லிமீs க்ஷிவீணீபீuநீs பீமீ றீணீ ஷிமீவீஸீமீ-மீt ளிவீsமீ (1960) ஏழாண்டுகளுக்குப் பிறகு, அக்கருவே L'Amantமீ ணீஸீரீறீணீவீsமீ என்ற நாவலாகவும் வெளிவந்தது. 1954இல் சவிஞ்னி சுய்ர் ஓர்ழ் என்ற நகரில் பிரெஞ்சு இரயில்வே குழுமத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு தம்பதியினர், பிறப்பிலி ருந்தே முடமாக இருந்த தங்கள் உறவுக்கார ஜெர்மானியப் பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டிச் சரக்கு இரயிலொன்றில் போட்டிருக்க, புலன் விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுகின்றனர். எனினும், கொலைக்கான காரணம் புரியாத புதிர். துராஸ் குற்றவாளிகள், கொலையுண்ட பெண், குற்றம் நடந்த இடம் என அனைத்தையும் மாற்றி எழுதிக் கொலைக்கான காரணமென்று அவர் வழியில் தீர்வு காண்கிறார். குற்றவியல் கதைகளில் ஆர்வம் காட்டும் சராசரி ரசிகர்களுக்கென்று மேடையேற்றப்பட்ட நாடகமாகவோ அல்லது விற்பனையில் சாதனை செய்யும் நோக்குடன் எழுதப்ப ட்ட பரபரப்பு நாவலாகவோ மேற்கண்ட படைப்பைக் கொள்வதற்கில்லை. அவரது இதர படைப்புகளில் உள்ள உளவியல் பார்வையை இதனுள்ளும் பார்க்கிறோம். துராஸ் படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள் பெரும்பாலும் பைத்தியக்கார மனநிலையில் இருக்கின்றனர். துராஸ் அவர்கள்மீது ஒருவிதக் கரிசனமும் பரிவும் கொண்டவராக எழுதுகிறார்.
"வென்லொங்கின் நீண்ட விதிகளிலொன்று, மீகாங் நதிக்கரையில் முடிந்திருந்தது. இரவு வேளைகளில் வெறிச் சோடிக் கிடக்கும் சாலைகளில் அதுவுமொன்று. அன்றிரவும் வழக்கம்போல, மின்சாரம் தடைபட்டு, வீதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எல்லாவற்றுக்கும் அதுதான் ஆரம்பம். கேட் பின்புறம் மூடிக்கொள்ள சாலையில் கால்களை வைக்கிறேன், விளக்குகள் அணைகின்றன. ஓடுகிறேன், இருளென்றால் எனக்கு அப்படியரு பயம். அதனால் ஓடுகிறேன். ஓட்டத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அப்போதுதான் அதை உணர்கிறேன், யாரோ என் பின்னால் ஓடிவருகிறார்கள். ஆமாம், என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். யாரோ ஒருவர், நான் ஓடிவந்த பாதையிலிருந்து விலகாமல் என் பின்னால் ஓடிவருகிறார். நிற்கப் பயந்து, ஓடியபடி திரும்புகிறேன், பார்க்கிறேன். நல்ல உயரமான நடுத்தரவயதுப் பெண்மணி. ஆனால், அநியாயத்திற்கு மெலிந்திருந்தாள். ஏதோ பிணத்தைப் பார்ப்பதுபோல இருக்கிற து. வெற்றுக்கால்கள். என்னை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்பதுபோல ஓடிவருகிறாள். அவள் யாரென்று புரிந்து கொண்டேன். எங்கள் முகாம் பக்கம் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். வேன்லொங்கைச் சேர்ந்த பைத்தியக்காரி. அவள் பேசக் கேட்டதில்லை, இதுதான் முதல்முறை. இரவு நேரங்களில் மட்டுமே அவள் பேசுவாள் என்று கேள்வி. பகல்நேரங்களில் வீதியிலேயே உறங்கிக்கிடப்பாள். அதோ அந்தத் தோட்டத்துக்கு எதிரில் உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியாத மொழியன்றில் கூச்சலிட்டபடி ஓடிவருகிறாள். உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமா என்றால், அதற்கும் துணிச்சலில்லை. அவளது பேய்ச்சிரிப்பும் சந்தோஷக் கூச்சலும் காதில் ஒலிக்கின்றன, சந்தேகமில்லை, அவற்றுக்கு நான்தான் காரணம். எனது பயமும் ஓ ட்டமும் அவளுக்கு விளையாட்டாய்த் தெரிகின்றன. அச்சமே பிரதானமாக இருப்பதுபோல நினைவு. எனது புரிதல், எனது பலம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட நினைவென்று சொல்வதுகூட முழுமையானதாகாது. அப்பெண்மணி என்னை இலேசாகத் தொட் டிருந்தாலும்கூட, ஒரு பிணத்தைப் போல என் பங்கிற்குப் பைத்தியக்காரத் தனமாய் அவளைத் தொட்டு விளையாடியிருப்பேனென்று உறுதியாகச் சொல்ல முடியும். அந்தவகையில், இன்றைக்கும் அந்நினைவு சிதைவுறாமல் முழுமையாக என்னிடத்தில் இருக்கிறது . . ." காதலன் (L'Amant) என்ற நூலில் பைத்தியக்காரி ஒருத்தியைச் சித்தரிக்கும் காட்சி.
உளப்பிணி கொண்டவர்கள்மீது அவருக்குள்ள அக்கறையை அவர் மறுப்பதில்லை. "பைத்தியக்கார மனநிலைமீது எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. மனிதனின் வளர்ச்சியென்பது இன்றைக்கு மனச் சிதைவு நிலை. பொறுப்புணர்வு, குற்ற உணர்வு, நல்லது கெட்டதெ ன்கிற இருமைப் பண்புகளெல்லாம் காலாவதியாகிவிட்டன. நவீன உலகம் பைத்தியக்காரர்களாலானது, அறிவாளிகளுக்கோ முட் டாள்களுக்கோ இங்கே இடமில்லை", என்கிறார். மதுவுக்கு அடிமையாக இருந்ததும் அதிகப்படியான மன உளைச்சலில் வாழ்ந் ததும்கூடப் பைத்தியக்கார மன நிலைமீது அவர்கொண்ட பொதுவான நாட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
துராஸ் ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, திறமை வாய்ந்த நாடக ஆசிரியர், தொழில்நுட்பமறிந்த திரைப்பட இயக்குநர், கச்சிதமாய்ச் சொல்லத் தெரிந்த திரைக்கதை ஆசிரியர். அவரது எழுத்திற்கு இயல்பாகவே ஒரு மேடைத்தன்மை கிடைத் துவிடுகிறது. உடல்மொழிக்கான ஆக்கமென்றே கருதத் தோன்றுகிறது. அவ்வாறான திட்டமிடலுடனேயே அவர் எழுதியிருக்க வே ண்டும் என்கிறார்கள்.
வாழ்க்கையின் இறுதி நாள்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்ட புள்ளியில் துராஸ் தன்னை நிறுத்தி, குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளானவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புக் கோரலாகவும் கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறியிருக்கிறார். அவரது அம்மாவும் இரு சகோதரர்களும் தொடர்ந்து பல படைப்புகளில் எழுதுபொருளாக இருந்திருக்கிறார்கள். அவரது படைப்புலகம் என்பது சொந்த வாழ்க்கையின் மறுபதிப்பு என்று பெரிதும் நம்பப்பட்டது. வாசிக்கிற எவருக்கும் அவரது சுயவரலாறு இலக்கிய வடிவம் பெற்றதாகத்தான் நினைப்பு. ஆனால், அவரது சுயவரலாற்றை எழுதிய ழான் வல்லியே (யிமீணீஸீ க்ஷிணீறீறீவீமீக்ஷீ) உண்மை என்ற பேரில் துராஸ் நமது நம்பிக்கைகளுக்கு மாறாக நிறையக் கட்டுக்கதைகளைச் சேர்த்திருப்பதாகப் பிரெஞ்சு இலக்கியத் திங்களிதழொன்றுக்கு அளி த்த செவ்வியில் கூறியிருக்கிறார்.
1914ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனியாகவிருந்த வியட் நாமில் பிறந்த மார்கெரித் தொன்னாதியே, தந்தைவழி பூர்வீகக் கிராமத்தின் பெயரைத் தனது பெயருடன் இணைத்து மார்கெரித் துராஸ் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். முதல் நாவல் 'மினீஜீuபீமீஸீts' 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. பிற்காலத்தில் பல படைப்புகளுக்குப் பின்புலமாக அமைந்த வியட்நாமில் மழலைப்பருவமும் பதின்பருவமும் கழிந் தன. புகழ்பெற்ற சொர்போன் பல்கலைக்கழகத்தில் சட்டமும் அரசியல் அறிவியலும் பயின்றவர். நாஜிப்படை ஆக்கிரமிப்பின்கீழ் பிரான்சு இருந்தபோது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் தன் கணவரைப் போலவே பங்கேற்றவர். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். பிற்காலத்தில் வெளிவந்த ஞிஷீuறீமீuக்ஷீ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களே ஆதாரம். ளிதீsமீக்ஷீஸ்ணீtமீuக்ஷீ என்ற இதழில் பத்திரிகையாளராக இருந்த அனுபவமும் துராஸ§க்கு உண்டு. 1950இல் வெளிவந்த ஹிஸீ ஙிணீக்ஷீக்ஷீணீரீமீ சிஷீஸீtக்ஷீமீ றீமீ றிணீநீவீயீவீஹீuமீ, அவரது குடும்பத்தை மையப்பொருளாகக்கொண்டு பின்னர் வரிசையாக வெளிவந்த நாவல்களில் முதலாவது எனலாம். இந்தோ சீனாவில் குடியேறிய ஒரு ஏழைப் பிரெஞ்சுக் குடும்பத்தைப் பற்றிய கதை அது. எனினும் துராஸை ழிஷீuஸ்மீணீu ஸிஷீனீணீஸீ (புது நாவல்) வரிசை எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ் சேர்த்த பெருமை லிமீ விணீக்ஷீவீஸீ பீமீ நிவீதீக்ஷீணீறீtணீக்ஷீ(1952), லிமீ ஷிஹீuணீக்ஷீமீ போன்ற படைப்புகளைச் சாரும். முன்மாதிரி (கிஸ்ணீஸீt-நிணீக்ஷீபீமீ) எழுத் தாளர்களைப் போல4 அடையாள இலக்கியக் (றீவீttமீக்ஷீணீவீக்ஷீமீs ணீதீstக்ஷீணீவீts) கோட்பாடுகளில் நம்பிக்கைகொண்டவரல்ல, சொற்களில் நம்பிக்கைகொண்டவர். உணர்வு, நினைவு, மீள்பார்வை, அந் நியம் முதலான சொல் வெளியில் மனம்போலத் திரிந்தவர். இருவேறு இனத்தைச் சேர்ந்த ஆண் பெண்ணுக்கிடையேயான காதலைச் சொல்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்: உ.ம். பிவீக்ஷீஷீsலீவீனீணீ னீஷீஸீ ணீனீஷீuக்ஷீ திரைப்படம் பிரெஞ்சு நடிகையருத்திக்கும் ஜப்பானியக் க ட்டடக்கலை வல்லுநருக்கும் இடையேயான காதலைப் பற்றிப் பேசுகிறது. சிறந்த திரைக்கதைக்கான பரிசை இத் திரைப்படம் வென்றிருக்கிறது. அவ்வாறே 1973ஆம் ஆண்டு நாடக வடிவிலும் 1975ஆம் ஆண்டு திரைப்படமாகவும் மார்கெரித் துராஸ§க்குப் புகழ் சேர்த்தது மிஸீபீவீணீ ஷிஷீஸீரீ. மார்கெரித் துராஸ§டைய புகழ்பெற்ற படைப்பான காதலன் நாவலும் 1992ஆம் ஆண்டு திரைவடிவம் பெற்றதென்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நாற்பத்தெட்டு நாவல்கள், பதினான்கு நாடகங்கள், இருபது திரைப்படங்கள் இன்றைக்கு அவருக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.
துராஸின் புகழ்பெற்ற காதலன் நாவலைப் பற்றி அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இளம்வயதுப் பெண்ணொருத்திக்கு அவளைவிட இருமடங்கு வயதுள்ள பணக்காரச் சீன இளைஞன் ஒருவனோடு ஏற்பட்ட காதலை இந்நூல் தேவையான இடங்களில் அளவான எரோட்டிக் மொழியில் வித்தியாசமான உத்தியில் நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் பயணித்து உரையாடுகிறது. அவளுக்கு அவன் முதற் காதலன். அவனுக்கு அது உண்மையான முதற்காதல். இருவருக்குமான காதல் கைகூடாதென்பதை ஆரம்பத்திலேயே இரு வரும் அறிந்தே பழகுகிறார்கள் (அவளுக்கு அவள் பிறரால் கவனிக்கப்பட வேண்டும், பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறாளா எ ன்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு உடல் நிறைய நகை பூட்டிய, பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த, கற்போடு கூடிய பெண்ணொருத்தியைக் கிழவனான தந்தை பார்த்துவைத்திருக்கிறான்).
கட்டுரையின் ஆரம்பத்தில், உலக அளவில் இந்நாவல் பெற்ற வெற்றியை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். முதலாவதாகக் கதை ஏற்படுத்தும் நம்பகத்தன்மை, மென்மையான கவிதை போன்ற நூலின் தொடக்கம்:
"ஒரு நாள், வளர்ந்து பெரியவளாக இருந்த காலம். பொது இடத்தில், மண்டபமொன்றில் நின்றுகொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பின், "வெகு நாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளம்வயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள், எனக்கென்னவோ இப்பொழுதுதான் உங்கள் முகம் அழகாகயிருக் கிறது, அதைச் சொல் லவே வந்தேன். உங்கள் இளம்வயது முகத்திலும் பார்க்க, சோபையற்றிருக்கும் இப்போதைய முகத்தை விரும்புகிறேன்" என்றான்.
"மிக ரகசியமாகப் பாதுகாத்த, எனக்கு மட்டுமே சொந்தமான அக்காட்சியைத் தனிமையில் இருக்கிற போதெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். அன்று கண்டதுபோலவே அதே மௌனத்துடன், பிரம்மித்தவளாக நிற்கிறாள், அவளைச் சுற்றிலும் என் னை மகிழ்விக்கக்கூடிய அத்தனை தனிமங்களும் இருக்கின்றன, அதாவது என்னை நினைவுபடுத்தும், என்னைக் குதூகலத்தில் ஆழ்த்தும் பண்புகளோடு. . ."
". . . பதினைந்து வயது ஆறுமாதங்கள். நதியன்றினைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. மறுபடியும் சைகோனுக்கு வந்து கொண்டிருக்கிறேன், பிரயாணத்திலிருக்கிறேன், அதிலும் குறிப்பாகப் பேருந்து எடுக்கும் வேளை. அன்றைய தினம் காலை எனது தாயின் நிர்வாகத்தில் இயங்குகிற பெண்கள் பாடசாலையுள்ள சாடெக் என்ற ஊரில் பேருந்தினை எடுத்திருந்தேன். கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைக்காலம் முடிவுக்கு வந்திருந்தது, எந்த விடுமுறை என்பது நினைவிலில்லை. அம்மாவுக்கென அரசாங்கம் ஒதுக்கியிருந்த சிறிய வீட்டில் விடுமுறையைக் கழிப்பதென்று புறப்பட்டுப் போயிருந்தேன். விடுமுறை முடிந்து சைகோனில் உள்ள எனது விடுதிக்குத் திரும்புகிறேன். உள்ளூர்வாசிகளுக்கான அந்தப் பேருந்து, சாடெக் நகரத்தில் சந்தை கூடும் இடத்திலிருந்து புறப்பட்டது. முன்னதாக எப்போதும் போல அம்மா சந்தைவரை உடன்வந்து, பேருந்து ஓட்டு நரிடம் என்னைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். சாலை விபத்து, தீ விபத்து, வன்புணர்ச்சி, எதிர்பாராமல் குறுக்கி டும் கொள்ளையர் கும்பல், நதியைக் கடக்கும் படகுக்கு ஏற்படுகிற ஆபத்தான கோளாறுகளென அவள் அச்சங்கொள்ள காரணங்கள் இருந்ததால், பேருந்து ஓட்டுநர்களின் பொறுப்பில் என்னை விட்டுச் செல்வாள். வழக்கம்போல ஓட்டுநர், ஐரோப்பியப் பயணிகளுக் கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் முன் இருக்கையில், அவர் அருகிலேயே இடம் தந்தார். . ."
நம் கண்முன்னே கலைவடிவம் பெறும் கடந்த காலத்தில், கதைசொல்லியின் இளம்தோற்றம் மாத்திரம் மௌனத்துடன் பிரமித்து நிற்பதில்லை. நிகழ்கால வினைச்சொற்களைக் கையாண்டு தத்ரூபமாகக் காட்சியை நம்முன்னே நிறுத்துவதால் நாமும் பிரமிக்கிறோம். நாவல் முழுக்க இறந்த காலத்திற்கு உயிரூட்டத் தீர்மானித்தவர்போல, கதைசொல்லியின் மனப்பதிவு நிகழ்காலத்தில் விரிகிறது.
தமது பதின்பருவத்தில் ஆசிரியரின் மனத்தில் மடித்துவைத்திருக்கிற அகம் மற்றும் புறவயப்பட்ட காட்சிகளை நிதானமாகவே விரித்துப்போட்டுச் சுருக்கங்களை அக்கறையுடன் நீவிவிட இமைத்தலின்றி, அவரது பால்யவயது பங்குதாரர்களான தாய், சகோதரர்கள், தோழி, காதலனாக ஏதோ நாம்தான் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அவரது சமகால ஞாபகங்களையும் ஏக்கங்க¬ ளயும் அனுபவிப்பது போன்ற உணர்வு. 'தன்மை' நிலையில் சொல்லப்படும் கதையில், தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அன்பு, சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் இடையிலான அன்பு, காதலன் காதலிக்கும் இடையிலான அன்பென, அன்பின் பன்முகத் தன் மையை ஆசிரியர் தமக்கே உரிய மொழியில் எழுதியிருப்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம்.
"அம்மாவுக்கு எதிர்காலம் முக்கியம். தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் அதன் பொருட்டு ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் இறங்குகையில், இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் சோர்ந்திடாமல், புதிதாக ஒன்றைத் தொடங்குவாள், எதிர்காலம் என்பது நமது கைகளில் இருக்கிறதென்று நினைப்பவள்."
"இதிலாவது அம்மாவை நான் முந்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அவளிடமிருந்து பிரியத்திற் குகந்த அவளது பொருளை- மகனைப் பிரித்து - அவன்மீது கொண்டிருந்த மோசமான பாசத்தினைத் தண்டிக்க வேண்டும். எனது சிறிய சகோதரனைக் காப்பாற்ற அதைச் செய்தாக வேண்டும். என் இளைய சகோதரன்; எனக்குக் குழந்தைபோல, அப்படித்தான் அவனை நடத் தினேன். . ."
". . . எனது சிறுவயது அனுபவங்களைச் சொல்லும் புத்தகங்களில், சட்டென்று எதைச் சொன்னேன், எதைச் சொல்லாமல் தவிர் த்தேன் என்று நினைவில்லை. அம்மாவிடம் எங்களிடத்திலிருந்த அன்பினை எழுதியிருந்தேனேயழிய, எங்கள் குடும்பத்தின் அழிவு, இழப்பு என்கிற பொதுவான கதைக்குக் காரணமாக இருந்த, அம்மாமீதான எங்கள் கசப்பினையும் எங்களுக் கிடையேயான அன் பினையும் பேதங்களையும் அவற்றில் பேசினேனா என்றும் ஞாபகமில்லை, பரஸ்பர அன்பினைப் போலவே, எங்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும் விழிகள் மூடிப் பிரசவித்த சிசுபோல, எனது தேடுதலுக்குத் தப்பித்து, இன்றைக்கும் எனது உட லுக்குள் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது. . ."
". . . மெல்ல அவள் அருகில் வந்து, 'உன்னை வெறித் தனமாக நேசிக்கிறேன்', என முணுமுணுத்தவன் மீண்டும் அமைதியாய் இ ருக்கிறான். இவளிடத்தில் அதற்கான பதிலில்லை. 'உன்னிடத்தில் எனக்கு அப்படியன்றும் பிரியமில்லை' எனச் சொல்லி இருக்கலாம், இல் லை, சொல்லவில்லை . . ."
நாவலில் கவனிக்க வேண்டிய மற்றொரு சிறப்பு அம்சம் சொல்லாடலும் மொழியும் முதலில் படிக்கிற சராசரி வாசகருக்கு அலு ப்பூட்டக்கூடும், கதை சொல்லலில் வழக்கமாக இருக்க வேண்டிய சீரான தொடர்ச்சி இல்லை. ஒரு தகவல் மற்றொன்றோடு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு தாமரைக்கொடிபோலப் பின்னிப் படர்ந்திருக்க, நாம் அவற்றில் வசமாய்ச் சிக்கிக்கொண்ட துபோல உணருகிறோம். இணையதளங்களில் ஒரு வலைதளத்திலிருந்து மற்றொன்றுக்கு ஈர்க்கப்படுவதைப்போல, வாசிப்பு நம்மை மேலே மேலே என்று அழைக்க இறுதிக் கட்டம்வரை தலைதெறிக்க ஓடுகிறோம். அவ்வாறே கதை மூன்று காலங்களிலும் கலந்து ஒலிக்கிறது. சுதந்திரமாக நினைத்த நேரத்தில் நினைத்தபடி இடம்மாறிக்கொள்கிறது. ஒவ்வொரு பத் தியிலும் ஒரு கதை இருக்கிறது, விவரணை இருக்கிறது, வேறுபட்ட மாந்தர்கள் வந்துபோகிறார்கள். கதைமாந் தர்களுக்கிடையேயான உறவில் - அது அன்பென்று சித்தரிக்கப்பட்ட போதும்கூட - போலித் தன்மையதாய் - உள்ளன்று வை த்துப் புறமொன்று பேசும் அசலான உலக மாந்தரைப் பார்க்கிறோம். அவசியம் படிக்க வேண்டிய நாவல். விற்பனையில், இலக்கிய வரிசையில் கொண்டாடப்படுகிற நாவல்கள் உலகில் அரிதாகவே சாதனைகள் புரிந்திருக்கின்றன. அவற்றுள் காதலன் ஒன்று.
தற்கொலை மனநிலையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவே எழுத்தை நாடியதாகச் சொல்லிக்கொண்ட மார்கெரித் துராஸ், "எழுதும் வாய்ப்பு அமையுமானால் நாம் எதை எழுத நினைக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியே எழுத்து" எ ன்றும் கூறியிருக்கிறார்.
1. பிரான்சுவா மித்தரான் (Francois Mitterrand) பிரெஞ்சு ஜனாதிபதி 1981-1995.
2. Liberation இதழில் தொடராக வெளிவந்து பின்னர் புத்தக வடிவம் பெற்ற நூல்.
3. Horreur a Choisy -le-Roi- France Observateur. 1957/1958 Cd. Le Magazine
Litteraire Avril 2006.
4. La litterature Avant-Garde-Le Cubisme, Dadaisme, l'Expressionnisme, le
Futurisme etc. . .