என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்
சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில் வாரச் சந்தை கூடும் நாள். சந்தையைத் தாண்டித்தான் சவவண்டி நகர்ந்துபோனது. சிகாமணி இறப்பதற்கு முன், அவனாகவே யாரிடமோ சொல்வதுபோலத் தான் இறந்ததும் கார்க்கோடனும் இறந்துபோவான் என்று சொன்னான்.
தேனி வாரச் சந்தை முடிந்ததும் அன்று இரவு, கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் தேடி எடுப்பவனாக இருந்தான் சிகாமணி. காக்கி நிறத்தில் அரை டவுசரும் சிவப்பு நிறத்தில் அரைக்கை பனியனும் போட்டியிருந்தான் சிகாமணி. சந்தைக்கு வருபவர்கள் கைதவறிவிடும் நாணயங்களைப் பொறுக்கி எடுப்பதற்காக வந்தபோது அவனைத் தவிரக் கார்க்கோடனும் இருந்தான். தவறிவிழுந்து தேடி எடுக்க முடியாத நாணயங்களையும்