தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும்
எவருமே யூகித்திராத முடிவுகளைத் தமிழக சட்டமன்றத் தேர்தல் தந்துவிட்டது. தங்களின் கணிப்புகள் பலிக்காத நிலையில் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் முடிவுகள் கிடைத்த விதம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். அணிகளின் பலம், மக்களின் மனநிலை என்றெல்லாம் நீளும் அக் கணிப்புகளில் ஒன்று “சாதிக்கட்சிகள் தோற்றுவிட்டன” என்பது. தினமணி தலையங்கம் (மே 14,2011) தொடங்கி தேமுதிக. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வரை இக்கருத்து வெளிப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போன்ற கட்சிகளின் தோல்வியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கூற்றுகளை உண்மை என்று கொள்வதைக்காட்டிலும் ‘சாதி’க்கட்சிகளுக்கு எதிரான கருத்துக்கொண்டோரின் கூற்றுகள் எனக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
திமுக ஆட்சிக்கு எதிரான வாக்காளர்களின் கோபம் அதிமுகவை எதிர்பாராத வெற்றியை நோக்கி இட்டுச்சென்றிருக்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் வெற்றியையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தோல்வியையும் பெற்றமையானது கூட்டணி அலையைச் சார்ந்ததேயாகும். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் இடது சாரிகளைத் தவிர மற்றெவரும் கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்தளங்களிலோ திமுக ஆட்சிக்கு எதிராகவோ முடுக்கிவிட்ட போராட்டங்கள் என எவற்றையும் பெரிதாகக் கூற முடியாது. ஆனால் இக்கட்சிகளில் சில அதிமுக கூட்டணியில் இடம்பிடித்ததாலேயே வெற்றியைப் பங்கிட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் அதிமுக சாதியைக் கடந்ததென்றோ கூட்டணியிலிருந்த கட்சிகள் சாதிக்கட்சிகள் இல்லையென்றோ கூற முடியாது. புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வார்டு பிளாக் போன்றவை சாதிசார்ந்து செயற்படும் அமைப்புகளே. எனவே திமுக கூட்டணிக் கட்சிகள் தோற்றிருப்பதாலேயே சாதிக்கட்சிகள் புறக் கணிக்கப்பட்டன எனச் சொல்வது பொருத்தமான கருத்தல்ல. தேர்தலைப் பொறுத்தவரை வெளிப்படையாக மக்களின் மனநிலை செயலாற்றினாலும் உள்ளீடாகச் சாதி, பணம், சினிமா உள்ளிட்ட கவர்ச்சியும் உணர்ச்சியும் சார்ந்த அம்சங்கள் செயல்படுகின்றன, மிகவும் அரிதான சமயங்கள் தவிர மற்றெல்லா வேளைகளிலும் ‘மக்களின் மனநிலை’யைக் கட்டமைப்பதாகவோ கட்டுப்படுத்தக் கூடியதாகவோ இந்த அம்சங்களே இருந்துள்ளன. இப்போதைய தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலை தேர்தல் முடிவை மாற்ற பங்கு வகித்தாலும் அவையும் இந்த அம்சங்களோடு ஒத்திசைந்து போய்விடுகின்றன. இதில் பணம் போன்ற வெளிப்படைப் பிரச்சினைகளே விவாதிக்கப்படுகின்றன. பேசுபொருளாகக்கூடக் கருதப்படாத அளவிற்கு சாதியென்பது இயல்பாகிவிட்டது. அதே வேளையில் பெரும்கலவரங்களை, பெருத்த உயிர்ச்சேதங்களை மட்டுமே சாதிப் பிரச்சினையாகக் கருதும் பொதுமனநிலையில் அத்தகைய ‘முக்கியத்துவத்தை’ இத்தேர்தலில் சாதி பெறவில்லை. மொத்தத்தில் நேரடியான சாதிமுரண் என்பது அழுத்தம் பெறவில்லை. எனில் இத் தேர்தலில் சாதியின் இடமும் வகுப்புரீதியாகத் திரட்டப்பட்ட வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளின் பங்கும் என்னவாயின என்பது ஆராயப்பட வேண்டியதாகிறது.
ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரின் தலைமையிலான பாமகவும் விசிகவும் கருணாநிதியோடு கூட்டணி அமைத்ததால் இக்கூட்டு அரசியல் தளத்திலும் ‘சமூகநீதி’ என்னும் பெயரில் சமூகத் தளத்திலும் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்து எதிர்பார்க்கப்பட்டன. இத்தகைய சாத்தியம் ஏற்படவிருப்பதாக மூன்று தலைவர்களுமே வெவ்வேறு வார்த்தைகளில் பேசினர். இந்தவகை எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது குறித்த வியப்பை எழுத்தாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய முகச்சுவடியில் (திணீநீமீ ஙிஷீஷீளீ) வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இக்கூட்டணி தோல்வியைத் தழுவியதோடு இவர்களால் எதிர்க்கப்பட்ட விஜயகாந்தின் இருப்பு வடமாவட்டத்திலேயே உறுதிப்பட்டுள்ளது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் ஆகிய மூவரை முன்வைத்து, சாதிசார்ந்த வாக்குகளில் நடந்துள்ள மாற்றங்களை அணுகுவது அவசியம்.
முரண்கொண்ட இருவேறு வகுப்புகளின் நலன்களைப் பிரதிபலிப்பவையாகப் பிறந்தவை பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும். அரசாங்கத்திற்கு எதிரான வன்னியர்களின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது அச்சாதியினரின் கோபத்தைக் கூர்மைப்படுத்த தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துதல் போன்ற ‘சபால்டன் உத்திகள்’ கையாளப்பட்டன. தொடர்ந்து தங்களால் ஒடுக்கப்பட்ட தலித்துகளை எதிர்கொள்ளுவதன் வழியாகவே பாமகவின் வளர்ச்சி சாத்தியமானது. பாமகவின் அரசியல் எழுச்சியால் அச்சுறுத்தப்பட்டிருந்த தலித்துகள் தங்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அமைப்பொன்றிற்காகக் காத்திருந்தபோது தெற்கேயிருந்து ஆவேசம் மிக்கப் பேச்சாற்றல் கொண்ட திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பரவியபோது தலித்துகள் அக்கட்சியில் திரண்டனர். சாதிமுரணையும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தையும் பிரதிபலித்ததன் மூலம் இப் பகுதியில் விசிகவின் வளர்ச்சி சாத்தியப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறை மூலமே அதிகாரம் என்ற நிலையில் தத்தம் சாதிகளின் எண்ணிக்கையால் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்தபோது இக்கட்சிகளுக்கு அரசியல் கூட்டு தவிர்க்க முடியாததாகிவிட்டது. தத்தம் சாதிகளை ஓட்டுவங்கிகளாகத் திரட்டிவிட்டதாகக் கருதிய இக்கட்சிகள் இவ்விரண்டு சாதிகளின் எண்ணிக்கையைக் கூட்டும் பெரும்பான்மைவாதத்தின் மூலம் அரசியலில் முன்னகர விரும்பின. ஒடுக்கும் சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் சமமான அதிகாரப் பங்கீடு என்னும் வாதம் ஒப்பீட்டு அளவில் ஒடுக்கப்பட்டோருக்கு அதிக உழைப்பையும் குறைந்த பலனையும்தான் தரும். மேலும் இதுபோன்ற போலியான தோற்றத்தின் மூலம் சாதிரீதியான நியாயங்கள் கிடைத்ததில்லை என்பதே இந்திய எதார்த்தங்கள் காட்டும் உண்மை. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது எண்ணிக்கை பெரும்பான்மைவாத பெரியாரின் இடஒதுக்கீட்டுப் பார்வையோடு தொடர்புகொண்டது. இடஒதுக்கீட்டுக் குரல், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவையெல்லாம் ராமதாஸ் உருவாக்க விரும்பிய தமிழ் அடையாளத்திற்கு உதவிபுரிந்தன. தன்னுடைய சாதிமுகத்தை மறைக்க விரும்பும்போது மட்டுமே அவரால் தமிழ் அடையாளம் கையாளப்பட்டது.
ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரின் கூட்டணி உருவாக்கப்பட்டபோது இருவரும் தங்களின் சாதி அடையாளத்தை மறைக்கத் தமிழ் அடையாளத்தைத்தான் பயன்படுத்தினர். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், ஈழத் தமிழர் போராட்டம் என்று சிலகாலம் பயணிக்க முடிந்த இவர்களால் அடுத்த தேர்தலில் அன்புமணிக்குச் சீட்டு என்னும் ‘அதிதீவிர சமூகநீதி’ கோரிக்கையை நோக்கி மட்டுமே பயணித்த ராமதாஸின் துணையுடன் ஓர் அரசியல் கூட்டணியை அமைக்க முடியவில்லை. வட்டார அளவில் நெருங்கிவாழும் ஆதிக்கச் சாதியினரால் ஒடுக்கப்படும் தலித் மக்களின் விருப்பத்தைப் புறந்தள்ளி, திருமாவளவன் ஆரம்பகாலம் முதலே தன்னை ஈர்த்துவந்த தமிழ்வழி அரசியல் என்ற சுயவிருப்பத்திலிருந்து இந்தத் தமிழ் அடையாளத்தைத் தலித் மக்களின் விடுதலை அரசியலாக வலிந்துகூறி பாமகவோடு கூட்டு அமைத்தார். முரண்படும் இருவேறு சாதிகளை மொழியின் வழியாக இணைக்க முடியும் எனும் கருத்தை இக்கூட்டு முன் வைத்தது. ஆனால் சாதிமுரண்களைக் களைவதற்கு மாறாக அதை மறைப்பதற்குத்தான் இந்தத் தமிழ் அடையாளம் பயன்பட்டது. இக்கட்சிகள் பங்கெடுத்த தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திமுக வழிப்பட்ட பெயரளவிலான தமிழ்ப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்தன. சாதிமுரண்களைக் கடப்பதற்கான வெளிப்படையான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஒருவகையில் சாதிமுரண்களை அப்படியே காப்பாற்றி வைத்திருப்பதன் மூலமே தங்கள் கட்சிகளின் ஆயுளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று கருதி சாதிகளின் எண்ணிக்கைகளை மட்டுமே ஒருங்கிணைத்துத் தேர்தல் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள அவை விரும்பியிருக்கக் கூடும்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தோற்றத்திற்குப் பின்பு ராமதாஸோடு அரசியல் கூட்டணி தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் திருமாவளவன் தன்னைத் தீவிரத் தமிழ் அடையாளப் போராளியாகவே முன்வைத்து வந்தார். தினசரி வாழ்வில் சாதிய அழுத்தத்தைச் சந்திக்க நேரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரைக் கொண்ட அக்கட்சியை ஈழத் தமிழர் உள்ளிட்ட தமிழ்சார்ந்த சிக்கல்களுக்காகவே உருவான கட்சி என்றும் சொல்லிக்கொள்ள அவர் தவறவில்லை. இத்தகைய தமிழ் அடையாளத்திற்காகச் சாதிய முரண்களைப் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டு முரண்களே இல்லாமல் இருந்தது என்று விளக்க முனைந்த திருமாவளவன் கடந்த சில ஆண்டுகளாகத் தலித் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை விடுத்துத் தமிழ் அடையாளப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்துச் சென்றதையும் பார்க்கலாம். இந்த நிலையில் திமுக தன் கூட்டணியில் இருவருக்கும் இடமளித்ததன் மூலம் இருவரின் ஒருங்கிணைவும் சாத்தியமானது. இவ்வாறு இரண்டு கட்சிகளின் முரணை மறைத்துத் தமிழ் அடையாளத்தைக் கட்டும்போது அதற்கொரு எதிரி தேவைப்பட்டார். அவர்தான் விஜயகாந்த்.
தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜயகாந்தின் வருகை விநோதமானது. சமூகத் தேவைகளோ மக்களின் விருப்பங்களோ இல்லாமல் உருவாக்கப்பட்டது அவரது கட்சி. பிரதானக் கட்சியொன்றிலிருந்து விலக்கப்பட்டதால் தனக்கெனக் கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டிய எம்.ஜி.ஆரின் நெருக்கடிகூட விஜயகாந்திற்கு இருந்ததில்லை. சினிமாவில் பேசிய ஊழல் எதிர்ப்பு போன்ற மேலோட்டமான பிரச்சினைகளையே கட்சியின் கொள்கையாக முன்வைத்தார். அவர் பேசிய இந்த விசயங்களுக்காகப் போராடி மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல் சினிமாக் கவர்ச்சியை முதலீடாக்கிச் சொற்ப நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். தமிழ் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து விஜயகாந்தை முதலில் எதிர்கொண்டதன் விளைவாகப் பாமகவைத் தொடர்ந்து எதிர்த்துச் செயலாற்றி வருகிறார் விஜயகாந்த். தங்களின் தமிழ்ச்சாதி எனும் அடையாளத்தின் வழியாக விஜயகாந்தின் சினிமாக் கவர்ச்சியை மட்டுமல்ல அவரது தமிழர் அல்லாத அடையாளத்தையும் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரின் கூட்டு சுட்டத் தவறவில்லை.
தமிழரல்லாத புதிய எதிரியைச் சுட்டுவதன் மூலம் தங்களின் தமிழ் அடையாளத்திற்கு மொழி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளச் சாத்தியமுண்டாகிறது. ஆனால் இத் தமிழ் அடையாளத்தின் ஊடாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சாதிய முரண்தான் விஜயகாந்தின் தேர்தல் வெற்றிக்கு ஒருவகையில் காரண மாகிவிட்டது. ஏனெனில் இத்தமிழ் அடையாளம் சாதிய முரண்பாட்டைக் களைந்தோ களைவதற்கான முயற்சிகளிலோ உருவானவையாக இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்துக்கொள்ளும் பாவனையிலிருந்து பிறந்தது. இது சாதிய முரண்பாட்டை அப்படியே தக்கவைத்துக்கொண்டது.
விஜயகாந்த் சாதியமுறைக்கு எதிரான எந்தப் பார்வையையும் கொண்டிராதவர். அதைக் குறித்துப் பேசாமலிருந்தாலே அதை எதிர்ப்பதாகிவிடும் என்று நம்புகிறவர். அதே வேளையில் சாதியைத் தீர்க்கமான வரையறைகளோடு பயன்படுத்தியவராகவும் சொல்ல முடியாது. இச்சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி எந்தப் புரிதலோ அதை மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ அவரிடம் கிடையாது. இதில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளுக்காகப் போராடிய ராமதாஸையோ ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிய திருமாவளவனையோ அவருடன் ஒப்பிட முடியாது. ஆனால் இவர்களைத்தான் விஜயகாந்த் தேர்தலில் வெற்றிகொள்கிறார். சாதி வாக்குகள் மூலமாக விஜயகாந்தை எதிர்கொள்ள நினைக்கும்போது அதுசார்ந்த போலித்தனத்தால் ராமதாஸும் திருமாவளவனும் அவரிடம் தோற்றுப்போகிறார்கள் என்பதே உண்மை. இச்சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியின் 41 வேட்பாளர்களில் சுயசாதியினர் குறைவு. அதோடு தெலுங்கு பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மதுரைக்குத் தெற்குப்பகுதியில் அவர் போட்டியிட்ட இடங்கள் நான்கு தான். நால்வரும்கூட சுயசாதியினர் இல்லை. ஆனால் பாமகவும் விசிகவும் அடர்த்தியாக உள்ள வடமாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது. சாதியரீதியான ஓட்டுகளை நோக்கி அவரது பிரச்சாரம் அமையவில்லை. எனவே அவருக்குக் கிடைத்த ஓட்டுகளும் அதனடிப்படையில் அமையவில்லை. ஆனால் தமிழ் அடையாளம் பற்றிப் பேசிய ராமதாஸால் தேர்தலுக்காகச் சாதியைப் பற்றிப் பேசாமலிருக்கவோ சொந்த சாதி வேட்பாளர்களை மட்டும் நிறுத்தாமலிருக்கவோ முடியவில்லை. கண்ணுக்குப் புலப்படும் குறிப்பான சாதியடையாளத்தை சினிமா நடிகர் என்னும் கவர்ச்சி வாதத்தால் பின்னுக்குத்தள்ள முடிந்திருக்கிறது. உள்ளீடற்ற சாதிக்கூட்டணியை சினிமா என்னும் கவர்ச்சிவாதம் வீழ்த்திவிட்டது. சினிமாவைக் காட்டிலும் ஆபத்தானது சாதி.
பாமகவைப் பலவீனப்படுத்தியதில் விஜயகாந்தின் பங்கு முக்கியமானது. 2006 சட்டமன்றத் தேர்தலிலேயே அவர் பாமக செல்வாக்குப் பெற்றிருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறார். விஜயகாந்திற்கு வன்னியர்களின் வாக்குகள் மட்டுமல்ல தலித்துகளின் வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. பாமகவின் அரசியல் பலம் குறைவதென்பது அப்பகுதியில் வாழும் தலித்துகளுக்குச் சாதகமானதுதான். ஆனால் தமிழ் அடையாளத்தின் பெயரால் சாதியால் பயன்பெறுவோருக்காக மீண்டுமொருமுறை தலித் அரசியல் பலியிடப்பட்டிருக்கிறது. விஜயகாந்தோடு தலித் அரசியல் கைகோக்க வேண்டுமென்பது இத்தகைய வாதத்தின் நோக்கமல்ல. மாறாகச் சாதி அடையாளத்தைக் கரைப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டிராத தமிழ் அடையாளம் மட்டுமல்ல வேறெந்த அடையாளமும் தலித்துகளுக்கே இழப்பைக் கொண்டுவந்து சேர்க்கும். எனவே பாமகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியென்பது தான் இயல்பானது எனக் கூறிக்கொள்வதில் எந்த நியாயமும் இல்லை.
பாமக மூன்று இடங்களிலும் பாமகவும் விசிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள பகுதிகளில் திமுக 10 இடங்களிலும் வென்றுள்ளன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனக்குரிய 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. திமுக ஆட்சிமீதான வெறுப்பும் விஜயகாந்த் வருகையும் மட்டுமல்ல திருமாவளவன் பெரிதும் நம்பிய தமிழ்ச்சாதி கூட்டணியும் அவரைக் கைவிட்டுள்ளது. இக்கட்சி பத்துத் தொகுதிகளிலும் ஐந்து லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. இதன் மூலம் வன்னியர் சாதி ஓட்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பரிமாற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் வீசிய திமுக எதிர்ப்பலையில் வீழ்ந்த கட்சியாக இருப்பினும் அக் கட்சிக்கென்று தனித்த வாக்கு வங்கியைக் கொண்ட காட்டு மன்னார்கோவில், மங்களூராக இருந்து தொகுதி மறுசீரமைப்பில் பெயர் மாறிய திட்டக்குடி ஆகிய தொகுதிகளைக்கூட அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்முதலாக 1999ஆம் ஆண்டு மூப்பனாரின் தமாகாவோடு கூட்டணி அமைத்து சிதம்பரம் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்நாடாளுமன்றத் தொகுதிக்கு அடங்கிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மங்களூர் சட்ட மன்றத் தொகுதியில்தான் அதிக ஓட்டுகளைப் பெற்றிருந்தது. அடுத்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் எட்டு இடங்களைப் பெற்றுப் போட்டியிட்டபோது அதிக வாக்குகளை வாங்கிய தொகுதி என்னும் முறையில் இந்த மங்களூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்து வென்றார் திருமாவளவன். மீண்டும் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டபோது தலித் மக்களின் ஓட்டுகளனைத்தையும் திருமாவளவன் பெற்றிருந்தார். இத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றதை வைத்து 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டு வென்றது.
திருமாவளவன் இரண்டுமுறை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோதும் வன்னியர்களால் தலித்மக்கள்மீது கடும் வன்முறைகள் ஏவப்பட்டன. அதை எதிர்கொள்வதற்காகவே தலித் மக்களில் பெரும்பான்மையோர் தன்னெழுச்சியாகத் திருமாவளவனுக்கு ஓட்டுப்போட்டனர். தலித் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திருமாவளவன் தோற்றார். தலித் மக்களிடம் பெரும் எழுச்சி இருந்தது. பாமக பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னியர்களால் ஒடுக்கப்படும் அனுபவத்திலிருந்து தங்களுக்கான அரசியல் அடையாளமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தலித் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினர் என்பதே இதன் பொருள். இதே மனநிலையோடுதான் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் செல்வப்பெருந்தகையும் ரவிக்குமாரும் போட்டியிட்ட போது அம்மக்கள் வரவேற்றனர். இக்கட்சி தனித்துப் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு வேறெந்தவொரு கட்சியின் சிறிய அளவு ஓட்டுகள் சேர்ந்தாலும் வெற்றிபெற்றுவிடும் நிலைமைதான் இருந்தது. எந்தக் கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வாக்குக்குரிய தொகுதிகளாகவே இவ்விரண்டும் இருந்தன. ஆனால் 2006இல் காட்டுமன்னார் கோவிலில் 13,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இக்கட்சி இத்தேர்தலில் 31,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. அது போலவே மங்களூரில் 6,900 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுத் தற்போது 15,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலையால் மட்டுமே அத்தோல்வி அமையவில்லையென்பதை இந்த வாக்கு வித்தியாசம் காட்டுகிறது. முன்பு திருவிழாக் கோலத்தோடு வரவேற்ற கிராமங்களில் இப்போது எம். எல். ஏவே வரக் கூடாது என்று எதிர்ப்பு காட்டப்பட்டது. மங்களூரில் வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை இக்கட்சியிலிருந்து இடையிலேயே விலகிச் சென்றுவிட்டார். இரண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் கடந்த ஐந்தாண்டுக் காலச் செயற்பாடுகளும் தலித் மக்களுக்கு எந்தவிதமான உபகாரத்தையும் செய்து தரவில்லை. தலித் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான தனித்துவமான காரணங்களைத் தங்களின் மோசமான செயற்பாடுகளால் அழித்துவிட்டிருந்தனர். இந்நிலையில் இக்கட்சிக்குத் தலித் மக்களிடமே செல்வாக்குக் குறைந்திருப்பதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்க முடிகிறது. ஒன்று இத்தொகுதி பிரதிநிதிகளின் மோசமான செயற்பாடுகள், மற்றொன்று அக்கட்சி பாமகவோடு ஏற்படுத்திய அரசியல் கூட்டணிக்காகத் தலித் மக்கள் பிரச்சினையில் ஏற்படுத்திக்கொண்ட மோசமான சமரசங்கள், சாதிய முரண்களைக் குறித்த மௌனம் ஆகியவற்றைக் கூறலாம். மேலும் கூட்டணிக் கட்சி என்னும் வரையறையை அழித்துவிட்டு, திமுகவின் கிளையைப் போல் இயங்கி, தலித் மக்கள் நோக்கிலிருந்து எந்தவித அழுத்தத்தையும் தராமல் போனதால் இக்கூட்டணி குறித்த நம்பிக்கையைத் தலித் மக்கள் கைவிட்டிருக்கிறார்கள் எனலாம்.
தமிழ் அடையாளத்தின் வழியிலான சாதிக் கூட்டணி என்னும் நம்பிக்கையை இரண்டு சாதிகளுமே நம்பவில்லை என்பதையே இக்கூட்டணியின் தோல்வி காட்டுகிறது. அத்தகைய நம்பிக்கையைத் துலக்கமாக எடுத்துவைக்கும்படியான பணிகள் எவையும் பரஸ்பரம் இக்கட்சிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் சாதிகளை ஆதரித்தே ஆக வேண்டுமென்ற சமூக நிர்ப்பந்தங்கள் இல்லாமலாக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழகம் தழுவிய திமுக எதிர்ப்பு அலையையோ விஜயகாந்த் போன்று சாதியடையாளத்தை வெளிப்படையாகப் பேசாத ஒருவரையோ உள்வாங்கிக்கொள்வதில் இம்மக்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. தேர்தலில் எல்லாவற்றையும் போல் தமிழ் அடையாளமும்கூடச் சந்தர்ப்பவாத நோக்கத்திற்குரியவையாய் மாறிவிட்டது. பொது அடையாளத்தைப் பேசினாலும் ஒடுக்கப்பட்டவனுக்கு அதிகாரம் தர மறுக்கிறது ஆதிக்கச் சாதி மனம். தன்னை ஒடுக்கியவனின் அரவணைப்பைச் சந்தேகத்தோடு பார்க்கிறது ஒடுக்கப்பட்டவனின் அனுபவம். இங்கு எல்லாவற்றைக் காட்டிலும் வலியது சாதி. இந்த வலிமைக்கு முன்பு தமிழின அடையாளம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா? என்ன?