சர்வதேச அமைப்பின் ஜனநாயக மறுப்பும் இரட்டை வேடமும்
ஈழம்: சிங்கத்தின் நகங்கள் நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் காலச்சுவடு நண்பர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றியும் வாழ்த்துகளும். மிக நீண்டகாலமாகவே ஈழப்போராட்டம் பற்றியும் ஈழ நிலைமைகள் பற்றியும் அறிவார்ந்த முறையிலும் உணர்வொருமைப்பாடு (solidarity) என்னும் தளத்திலும் தீவிர அக்கறையோடு செயல்பட்டுவருகிறது காலச்சுவடு என்பதை நான் இங்கு குறிப்பிடுவது சம்பிர தாயத்துக்காக அன்று. ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் நியமித்த குழுவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகிய பிற்பாடு தமிழகத்தில் சில முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன. வைகோ, நெடுமாறன் போன்றோர் கண்டனக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். கணினித் துறை சார்ந்த தொழில் வாண்மையாளர்கள் பலர் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் தமிழர் பாதுகாப்பு அமைப்பினர் (Safe Tamils) எதிர்ப்புக் கூட்டம் நிகழ்த்தியிருக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகத் தோழமை மையம் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கிறது. இவையனைத்தும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சிகள். தமிழகத்திலும் இந்தியாவிலும் போர்க்குற்றங்கள் பற்றிய கவன ஈர்ப்பை வலியுறுத்துவதில் இந்த நிகழ்வுகள் சிறப்பான இடம்ப