அன்னியப்படுத்தும் சகிப்பின்மை
ஈழப்பிரச்சினை 1980களில் தீவிரமடைந்த காலத்திலிருந்தே தமிழகத்தில் ஆதரவான பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. இன்றுவரை ஆகத் தீவிரமாக இப்பிரச்சினையைப் பல்வேறு காலங்களில் பல்வேறு குழுக்கள் கவனப்படுத்தி வருகின்றன. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிந்தைய காலகட்டங்களில் இத்தகைய தீவிரமான குழுக்கள் இல்லாதிருந்தால் இக்கவனத்தின் சுடர் இங்கு அழிந்திருக்கக் கூடும். துவக்கத்தில் மக்கள் சார்பாக நின்ற இந்தக் கரிசனம் பின்னர் பல்வேறு இயக்கங்களின் சார்பாக மாறி இன்று தனிமனித வழிபாட்டில் நிற்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவை விடுதலை இயக்கங்களையும் அதன் தலைமையையும் விமர்சிக்காமல் புரிந்துகொள்வதும் மறுபரிசீலனை செய்வதும் சாத்தியமல்ல. அத்தகைய பரிசீலனையை வசைகள் மூலம் தடைசெய்ய முயல்வது, நிச்சயம் ஈழத் தமிழர்களுக்குச் சாதகமானது அல்ல. பிரச்சினைகளின் பல்வேறு பரிமாணங்களை விவாதிப்பதும் புரிந்துகொள்வதுமே நம்மை வலுப்படுத்தும். இப்பிரச்சினையில் இனமுரண்பாடு முக்கியக்கூறு எனினும் அதன் சகல பரிமாணங்களையும் இந்த எதிர்வுகளுக்குள் அடைக்க முயல்வது பிழை. நான் நம்பும் இயக்கத்தை நீயும் நம்பு, நான் வழிபடும் தலைவரை நீய