அற்ற குளத்து அற்புத மீன்கள்
மே 16 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்ட ஓரிரு மணிநேரத்துக்குப் பின்னர் என் இலக்கிய நண்பரொருவருடன் புதிதாகக் கட்டப்பட்ட பழைய தலைமைச் செயலகக் கட்டடத்துக்குச் சென்றேன். கடந்த ஒரு வருடத்திய எனது பயணங்களில் கால்நடையாகவும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, பேருந்துகளிலும் அந்தக் கட்டடத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். கருணாநிதியின் கனவு மாளிகையாக வர்ணிக்கப்படும் மிகப் பிரும்மாண்டமான அக்கட்டடத்தைக் கடந்து செல்வது என்பது எப்போதுமே ஒரு அசௌகரியமான அனுபவமாகவே இருந்து வந்திருந்தது எனக்கு. அரசு உயர் அதிகாரிகள் கொலுகொண்டிருக்கும் பகட்டான அலுவலகங்கள் ஏற்படுத்தும் பதற்றம் தவிர தற்போது பழைய என்னும் அடைமொழியைப் பெற்றுவிட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் குறித்துப் பரப்பப