சதுரங்க ஆட்டங்களின் முடிவு
தேர்தல் முடிவுகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மறுதினம் காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினேன். வெளியே நிறைய வெள்ளையும் சொள்ளையும் தெரிந்தன. பிரகாசம், தூய்மை! பல தினசரிகள், இதழ்களை வாங்கிக்கொண்டு ஆட்டோ பிடிக்கும் படலத்தைத் தொடங்கினேன். நள்ளிரவில் பெட்ரோல் விலை பாய்ந்துவிட்டதை நான் அறிந்திருக்கவில்லை. (மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வீடு திரும்பியதுமே பெட்ரோல், டீசல் விலையைக் கூட்டி அவர்களைத் தண்டிப்பது மத்திய அரசின் புது வழக்கமாகவே உருவாகிவருகிறது.) வழக்கமான பேரங்கள், தர்க்கங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோவில் ஏறினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு,
“யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?”
“ரெட்டை இலைக்குத்தான் சார்.”
“பெரிய மெஜாரிட்டி போலிருக்கே!”
“ஆமாம், சார்”
“அம்மா ஆடிருவாங்களே”
“அந்தப் பயம் இருக்கத்தான் சார் செய்யுது”
“ஏன் ரெட்டை இலைக்குப் போட்டீங்க”
“இவங்க நிறைய தப்பு பண்ணிட்டாங்க சார்”
“அவங்க பண்ணாததா?”
“அவங்களும் முன்னே தப்பு பண்ணினவங்கதான் சார். ஆனா இவங்களுக்கு மறுபடியும் ஓட்டுப் போட்டா, தப்ப நாம ஏத்துக்கிட்ட மாதிரி ஆயுடும் சார். திரும்பையும் ஆட்சிக்கு வந்தா கட்டுப்படுத்த முடியாம போயிடும் சார். அதனால ஆட்சியை மாத்திவிட்டிருணும் சார்.”
தேர்தல் முடிவுக்கான நியாயங்களை இதைவிடத் தெளிவாக முன்வைக்க முடியுமா எனத் தெரியவில்லை.
o
கருணாநிதியின் குடும்பம் - இச்சொல்லின் மூலப் பொருளில் - ஒரு மாஃபியா. அதிகார அமைப்புகளை ஊடுருவிப் பணத்தையும் சட்டத்திற்குப் புறம்பான அதிகாரத்தையும் குவிப்பது மாஃபியா பாணி. ‘காட்பாதர்’ நாவலையும் திரைப்படங்களையும் அனுபவித்தவர்களுக்கு எண்ணற்ற ஒப்பீடுகள் தோன்றும். நீதித் துறையையும் போலீஸ் அமைப்பையும் ஊடுருவுவது, அரசியல்வாதிகளைக் குடும்பத் தொண்டர்களாக்குவது, போலீசாரையே குற்றங்களுக்கு உடந்தையாக்குவது, ஊடகங்களை ஊழலில் கரைத்துச் செய்திகளை வரவழைப்பது, சட்டம் அண்டிவரும்போது இடைப்பட்ட கண்ணிகளைத் தீர்த்துக்கட்டுவது, உதவி தேடிவருபவர்களை ‘நட்பு’க்கு அடிமையாக்குவது, குடும்பம் பல கிளைகளாகப் பிரிந்து பணத்தைச் சுருட்ட சினிமா, சூதாட்டம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் கைவைப்பது, பாதிரிகளைக் கைப்பாவைகளாக்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாகச் ‘சலவை’ செய்வது எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ‘காட்பாத’ரில் மாஃபியா குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களிடையே வெளிப்படும் அன்பும் பாசமும் கரிசனமும் உண்மையானது.
o
இந்தத் தேர்தல் திமுகவுக்கு முடிவுகட்டுமா? 1980ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் எம். ஜி. ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது கருணாநிதி மீண்டும் ஆட்சி ஏறிவிட்ட மிதப்போடு இருந்தார். சமீபத்தில் முகநூலில் அந்தத் தேர்தலில் எம். ஜி. ஆரின் பேச்சு ஒன்றின் வீடியோ பதிவைப் பார்த்தேன். எவ்வளவு தெளிவாகவும் எதிர்நிலையை மரியாதையுடன் விளித்தும் (கருணாநிதி அவர்கள், இந்திரா காந்தி அம்மையார்) பேசியுள்ளார் என்பது ஆச்சரியமளித்தது. எம். ஜி. ஆர். பற்றி சோவால் உருவாக்கப்பட்ட ‘கோமாளி’ பிம்பம் கலைந்தது. கருணாநிதி வெற்றி விழாவுக்கான பட்டாசுகள், போஸ்டர் சகிதம் தயாராக இருந்தபோது தேர்தலில் எம். ஜி. ஆர். அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் முன் பக்கத்தின் ‘Curtains on Karunanidhi’ என்று செய்தி வெளியிட்டது. (கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை முடிந்தது). இப்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது அரசியல் வாழ்க்கை நீண்டுகொண்டிருக்கிறது. தொண்டர் பலம் கொண்ட கட்சிகள் எளிதில் அழிவதில்லை. தேர்தல் தோல்விகள் அரசியல் கட்சிகளின் எதிர் காலத்திற்கு முடிவுகட்டுவது அரிது. அதே நேரம் திமுக இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடி அவசர நிலை, ராஜீவ் காந்தி கொலை போன்ற காலங்களில் சந்தித்த நெருக்கடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முந்தைய நெருக்கடிகள் திமுகவுக்குப் புறத்திலிருந்து சவாலாக எழுந்து திமுகவை வலுப்படுத்த உதவின. இப்போது திமுக அகநெருக்கடிகளால் பலவீனப்பட்டு சரிந்திருக்கிறது. கட்சியைக் கையிலெடுத்துச் சீர்படுத்திட ஸ்டாலினுக்கு அரிய வாய்ப்பொன்றை இந்தப் படுதோல்வி தந்திருக்கிறது. ஆனால் அதற்கான துணிவும் ஆற்றலும் அவரிடம் உண்டா?
o
தேர்தல் தினத்திற்கு முன்னர் தேசிய ஆங்கிலச் சேனலில் தமிழகத் தேர்தல் பற்றிய விவாதம். பேரா. அருட்தந்தை ஜோ அருணும் பேசினார். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் மானுடவியல் கற்றவர். தமிழகத்திலிருந்து தகுதியானவர்கள் தேசிய சேனல்களில் போதிய வாய்ப்புகளைப் பெறுவதில்லை என்ற குறை எனக்கு உண்டு என்பதால் ஆர்வத்துடன் கவனித்தேன். அருட்தந்தை கூறினார்: “ஊழல் பற்றிய கதையாடல் ஊடகங்களாலும் மத்திய தர வர்க்கத்தாலும் உருவாக்கப்பட்டது. அதை விளிம்புநிலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லோருமே ஊழல் செய்பவர்கள்தான் என்பதே அவர்கள் கருத்து. இப்போது, இங்கே உடனடியாக தமக்கு என்ன கிடைக்குமென்பதே அவர்களின் பார்வை. அந்த அடிப்படையிலேயே அவர்கள் ஏப்ரல் 13 அன்று வாக்களிப்பார்கள்.” அருட்தந்தை நிரம்பக் கற்றவர் என்பதால் Public Script, Private Script, Subaltern, discourse போன்ற கருத்துருவாக்கங்களை எல்லாம் பயன்படுத்திப் பேசியது பெருமையாக இருந்தது. ஆனால் அவரது மனச்சாய்வு சங்கடமளித்தது. திமுகவின் தேசியக் கொள்ளைக்கும் இலவசங்களின் தேர்தல் அறிக்கைக்கும் ஓட்டுக்கு காசு திட்டத்திற்கும் இதைவிடத் திறமையான வாதத்தை முன்வைப்பது கடினம். யேசுவின் பணியாளரின் வாக்கு பலிக்கவில்லை.
o
2ஜி வழக்கின் குற்றப்பத்திரிகையில் முதலில் ராசாவும் பின்னர் கனிமொழியும் இடம்பெற்றதிலிருந்து ஒரு அண்டப்புளுகை கனிமொழி கருணாநிதி வீராப்புடன் மீடியா முன்னர் கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறார். ‘வழக்கைச் சந்திப்போம். ஜெயலலிதா போல நீதிமன்றத்திடமிருந்து ஓடி ஒளியமாட்டோம்.’ கனிமொழி கருணாநிதியின் பெயிலுக்காக ராம்ஜெத்மலானி ஆ. ராசாவைக் காட்டிக்கொடுத்து நீதிமன்றத்தில் வாதாடிய பிறகு எந்தக் கடைநிலைக்கும் இவர்களும் போவார்கள் என்பது தெளிவுபட்டுவிட்டது. ஜெயலலிதாவின் மீதான வழக்குகள் வழமையான நிலையிலுள்ள வழக்குகள். சட்டச் சிக்கல்களையும் ஓட்டைகளையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி விசாரணையைத் தவிர்க்கவும் இழுத்தடிக்கவும் அவரால் முடிகிறது. ஆனால் 2ஜி வழக்கு தனித்துவமானது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடப்பது. இந்தியாவில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தொழிலதிபர்களும் என்ன தவறு செய்தாலும் தண்டிக்கப்படாமல் தப்பிவிடுவார்கள் என்ற மக்கள் கருத்தை மாற்ற வேண்டுமென்ற வேகத்துடன் நடத்தப்படுகிறது. அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணியாத நீதிபதிகளால் கண்காணிக்கப்படுகிறது. இவ்வழக்கில் இந்தியாவின் எந்த நீதிமன்றமும் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் வாய்ப்பே இவ்வழக்கில் திமுகவுக்கு இல்லை. ஒத்துழை அல்லது உடனடி நடவடிக்கை என்பதே யதார்த்த நிலை. 2ஜி வழக்கைச் சந்தித்தே ஆக வேண்டும். இது யாருடைய பெருந்தன்மையோ வீராப்போ அல்ல. காலத்தின் கட்டாயம்.
o
இலங்கைப் பிரச்சினையின் உச்சகட்டத்தில் திமுகவும் கருணாநிதியும் நடந்தவிதம் கடுமையான கோபதாபங்களை ஏற்படுத்தியிருப்பது இயல்பு. ரத்தக்கறை படிந்த பக்கங்கள் அவை. ஆனால் இன்று திமுகவுக்கு நடப்பவற்றை எல்லாம் அதை முன்னிட்டு மட்டுமே விளங்கிக்கொள்வது படு அபத்தம். திமுகவுக்கு எதிராக இன்று காலம் திரும்பியிருப்பதற்குப் பல பல காரணங்கள் உண்டு. இலங்கைப் பிரச்சினையை மட்டும் முன்னிலைப்படுத்தும் போது, சென்னை மாநகர தேர்தல் அராஜகம், மதுரை தினகரன் படுகொலை, திருமங்கலம், சென்னை நகரிலிருந்து லட்சக்கணக்கான அடித்தள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டது, ஊடகங்கள்மீதான நுட்பமான ஒடுக்குமுறைகள், குடும்ப அராஜகம், கண்காணிப்பின் அரசியல், தலைகுனியவைக்கும் தேசிய ஊழல் என்று தொடரும் நீண்ட பட்டியலை முக்கியமற்றதாக மாற்றிவிடுகிறது. இவை அனைத்தையும் நுணுக்கமாகப் பார்த்து விவாதிக்க வேண்டும். இத்தகைய விவாதம் ஏற்படுத்தும் விழிப்புணர்வின் வழியேதான் மக்களின் உணர்வுகளை முன்னெடுக்கும் தலைமை தமிழகத்திற்கு ஏற்படும். தமிழக மக்களிடம் ஆழமாக வேரூன்றிய தலைமைதான் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
o
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தன் மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல் அதிகாரத்தின் திளைப்புகளில் மயங்கிக்கிடந்த அதன் தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி ‘சமத்துவப் பெரியார்’ டாக்டர் ராமராசு ‘அம்பேத்கர் சுடர்’ என்றால் விடுதலைச் சிறுத்தைகள் என்று ஒரு கட்சி எதற்காக இருக்க வேண்டும்? ‘அத்துமீறு, அடங்க மறு’ என்று வசனம் பேசி, மீசை முறுக்கும் கட்அவுட்டுகள் வைத்துவிட்டு, ராஜபக்சேவுக்கு அன்பளிப்பும் கைகுலுக்கலும் கருணாநிதிக்குக் கூழைக் கும்பிடு - எப்படிச் சகித்துக்கொள்வார்கள் அவர் வாக்காளர்கள்? திருமாவளவனைத் திமுகவின் காலடியில் கிடத்தியதில் துரை ரவிக்குமாரின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. துரை ரவிக்குமார் வெறும் ரவிக்குமாராக இருந்தபோது திமுகவின், திராவிட இயக்கத்தின் ஆக முக்கியமான விமர்சகர். திமுகவைத் தமிழக தலித் மக்களின் முதல் எதிரியாகக் கணித்தவர். பாமகவைக் கடுமையாக விமர்சித்தவர். திருமாவளவனின் தமிழ் தேசியப் பார்வைமீது நம்பிக்கையற்றவர். பெரியாரை அவர் விமர்சித்தபோது திருமாவளவன் அந்த விமர்சனத்திலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டவர். இன்று திமுகவும் பாமகவும் குப்புற விழுந்துகிடக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீளாத துயரில் இருக்கிறது. சதிகளின் வெற்றியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் ஆழ்மனச் செயல்பாடுகளின் நுட்பங்களை எளிதில் அறிய முடியாது. இந்தத் தொடர்பில் முன்னர் திமுகவில் இணைய விரும்பாத, தன் சகோதரர்களை வெறுக்கும், தந்தையிடமிருந்து அன்னியப்பட்ட கனிமொழி இன்று திமுகவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பும் பார்க்கப்பட வேண்டும்.
o
இப்போது கனிமொழி கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இருண்டுவிட்டது எனக் கணிக்கப்படுகிறது. The rise and fall of Kanimozhi போன்ற தலைப்புகளில் செய்திகள். அரசியல்வாதிகளைக் குறைத்து மதிப்பிடுவது தவறு. தேர்தல் முடிவு வரும்வரை கனிமொழி கருணாநிதி நெருக்கிவந்த கைது நடவடிக்கையை எதிர்கொண்ட விதம் அவரது வருங்காலத் திட்டங்களுக்கு முன்னோட்டமாகவே இருந்தது. ஊடகங்களைத் தவிர்ப்பதற்குப் பதில் அவர்களைப் பலமுறை அவர் சந்தித்தார். தன்னைப் பற்றி தேசிய அளவில் சாதகமான பிம்பத்தை ஏற்படுத்த இந்த வாய்ப்பை இயன்றவரை முழுமையாகப் பயன்படுத்தினார். தான் ஒரு வலுவான தீர்க்கமான ஆளுமை என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயன்றார். ஆனால் தேர்தல் முடிவு வெளிவந்த மறுநாள் இந்தக் கனிமொழி கருணாநிதியைக் காணவில்லை. கடந்த பல ஆண்டுகளாக தொலைதூரக் கணவராக இருந்துவந்த ஜி. அரவிந்தனின் பின்னால் காமராக்களிடமிருந்து ஒளிந்துகொண்டார். அவர் முழுமையாக ஒளிந்துகொள்ள ஏற்ற ஆகிருதியுடன் வந்திருக்கிறார் அரவிந்தன். கனிமொழி கருணாநிதியை நிருபர்களிடமிருந்து காப்பாற்றுதல், காரில் ஏற்றிக் கதவடைத்தல், லிப்டில் ஏற்றிச் சரியான பொத்தானைப் பார்த்து அழுத்துதல் என அவர் சிறப்புறச் செயல்படுவதைப் பார்த்தபோதுதான் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற பழமொழியை முழுமையாகப் புரிந்துகொண்டேன்.
இந்த வழக்கின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பது நிச்சயமில்லை. தற்போது இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விரைவில் மாறிவிடுவார்கள். வழக்கில் கனிமொழி கருணாநிதியுடன் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரங்கள் சிக்கியுள்ளன. வழக்கை நீட்டியடிக்க, நீர்த்துப்போகவைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கனிமொழி கருணாநிதி போதுமான ஆதாரங்கள் இல்லையென விடுவிக்கப்பட்டால், திகார் விஜயம் வெஞ்சிறை சென்ற வீரவரலாறாக மாறக்கூடும். தாய், மகள், குழந்தை என்பது உருக்கமான மீடியா சூத்திரம். நேற்று கனிமொழி பற்றிய போலி பிம்பங்களைக் கைக்கூலி வாங்கிக்கொண்டு கட்டி எழுப்பிய ஊடகவியலாளர்கள்தான் இன்று அவரை உரித்து எடுக்கின்றனர். அது அன்றைய விற்பனைச் சூத்திரம். இன்று இது. நாளை மீண்டும் காட்சி மாறக்கூடும். If anyone thinks I am an easy target they are highly mistaken (என்னைக் குறிவைத்துத் தாக்குவது எளிது என நினைப்பவர்கள் கபர்தார்!) போன்ற கனிமொழியின் வாசகங்கள் அன்று புதிய பொருள் கொள்ளும். நான் பெண் என்பதற்காக எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்ற அவர் கூற்று, மறுநாள் அவர் வழக்கறிஞர் கனிமொழி கருணாநிதி ஒரு பெண், தாய் என்பதால் பெயில் கொடுங்கள் என இறைஞ்சியது மறக்கப்பட்டு, நெஞ்சுரத்தின் உதாரணமாகச் சுட்டப்படக்கூடும். அடுத்த 10, 15 ஆண்டுகளில் இன்று அவருக்குச் சவாலாக இருக்கும் சகோதரர்கள் அரசியல் அரங்கில் இருக்கப்போவது சந்தேகமே. அவர் பெயர் இன்று இந்தியா நெடுகிலும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் அறியப்பட்டுள்ளது. எதற்காக அறியப்பட்டது என்பதை மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள். திமுக போன்ற ஒரு குடும்பக் கட்சி அந்த அடிமைத்தனத்திலிருந்து எளிதில் விலகாது. எப்படி காங்கிரஸார் மீண்டும் நேரு குடும்பத்திடம் தஞ்சமடைந்தார்களோ அதேபோல் கட்சி கனிமொழி கருணாநிதியைத் தேடி வரும் காலம் வரக்கூடும். இன்று அவரிடம் அரசியல் நடத்த அவசியமான பொருளாதார வலு உள்ளது. ஊழல், சதி போன்ற குற்றச்சாட்டுகளைத் திமுகவினர் தலைமைக்குரிய திறமையான குணங்களாகவே பார்ப்பார்கள். அவருடைய காலம் மீண்டும் வரக்கூடும். காலச்சுவடு போல அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது!
o
இந்தத் தேர்தல் முடிவுகளின் உரத்த செய்தி அற்பக் கணக்குகளால் மக்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். மக்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் தேவைப்படும்போது அதை மீறும் பக்குவம் கொண்டவர்கள். பணத்திற்கு ஆசைப்படாதவர்கள் அல்ல, ஆனால் ஊழலில் பங்காளிகளாக மாற அவர்கள் விரும்பவில்லை. கட்சிக்கு விசுவாசமானவர்கள் தான், ஆனால் கூட்டணிக் கணக்கின் சதவிகிதங்களாக மாற அவர்கள் தயாரில்லை. பொதுவாக அவநம்பிக்கை கொண்டவர்கள் தான், ஆனால் தேர்தல் ஆணையம் போன்ற ஒளியின் ஒரு கீற்று தென்பட்டாலும் நம்பிக்கையுடன் ஆதரிக்கத் தயங்காதவர்கள். நம் ஜனநாயகத்திற்கு இது நற்செய்தி.