வெறும் கேள்விகள்
அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்த, மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றபோது வீட்டிலிருந்த ஒரு பெண் அவர் சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டதாயும் அந்தத் தகவல் அவனுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்ததாயும் சொன்னாள். அவன் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்விட்டான். காரணம் அவர் இறந்துவிட்டாரென்கிற செய்தியைவிட அதை அவன் மறந்துவிட்டானென்கிற மறைமுகமான குற்றச்சாட்டு அவனை அதிகமாகப் பாதித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே அவனும் மற்ற எல்லோரையும் போலவே, சாவுகளுடனும் சாவுச் செய்திகளுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வளர்ந்தவன். சாவுடனான அவனுடைய முதல் அனுபவம் நிகழ்ந்தபோது அவனுக்கு வயது மூன்று. சர்க்கரைப் பழத்தை விண்டு வாயில் போட்டுக்கொண்டிருந்த அவனுடைய எண்பத்துமூன்று வயதுப் பாட்டனார் திடீரென்று பிளந்திருந்த வாய்க்குப் பதிலாக அதை மூக்குத் துவாரத்தில் திணித்துக்கொண்டுவிட்டதாயும் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றிருப்பதாயும் வீட்டில் பெரியவர்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்ட