ஒரு கெட்ட நிமித்தம்
கடந்த ஐந்தாண்டுக் காலத் திமுக அரசின் மீதான மக்களின் கோபம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 200க்கும் அதிகமான இடங்களைப் பெற்றுத் திகைக்கவைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜெயலலிதா தான் சூளுரைத்தபடி கருணாநிதி அரசால் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இன்னும் முழுமைபெறாத புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் புதுப்பித்து அதைப் புதிய தலைமைச் செயலகமாக அறிவித்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைவிட வரலாற்றின் சுவர்களில் தன் அடையாளங்களைச் செதுக்குவதற்கே அதிக முக்கியத்துவமளித்தார் கருணாநிதி. நவீன காலத்தின் தேவையை எதிர்கொள்வதற்காகத் தலைமைச் செயலகத்துக்கு ஒரு புதிய கட்டடத்தைக் கட்டுவது ஓர் அரசின் இயல்பான பணிகளில் ஒன்று. ஆனால் கருணாநிதி அதைத் தன் வரலாற்றுச் சாதனையாகக் கட்டமைக்க விரும்பினார். கருணாநிதியின் 50 ஆண்டுக் கால சட்டமன்ற ‘சேவை’யை முன்னிட்ட