தோழமை என்றொரு சொல்
"எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள்.
புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள்,
தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள்.
வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற
காற்றில்
கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின்
மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள்.
இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .”
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை வரிகள் மகேஷ் முனசிங்ஹ எனும் சிங்களக் கவிஞருடையவை. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். அறச் சீற்றம் பொங்கும் குரலில் தமது கவிதைகளையும் பிற எழுத்துக்களையும் படைத்திருக்கும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிங்களக் கவிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்களின் படைப்புகளிலிருந்த ஒரு சிலவற்றை இந்தச் சிறப்புப் பகுதியில் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவாகத் தொகுத்திருக்கிறோம். கவிஞர் மகேஷும் இந்தச் சிறப்பு இதழுக்கு நேர்முகம் தந்திருக்கும் பாஷண அபேவர்த்தனவும் குறிப்பிடுவதுபோல முற்போக்கு எண்ணமும் அறக் கடப்பாடும் கொண்ட சிறு எண்ணிக்கையிலான சிங்கள மக்களுடையதே இந்தப் படுகொலைகளை எதிர்த்து வெளிப்பட்ட அரசியல், கலைக்குரல்கள். எனினும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை இத்தகைய குரல்களுக்கு அளவிடற்கரிய மதிப்பும் தார்மீகம் நிறைந்த உணர்வுத் தோழமையும் உள்ளன. நடுக்கடலில் திசையறியாப் படகுகளைப் போல அலைய நேர்ந்தவர்களுக்குத் தோழமை என்றவர் சொல்லிய சொல் பல்லாயிரம் மக்களின் வலிமையைச் சேர்க்கிறது.
இந்தச் சிறப்பிதழில் எழுதியிருக்கும் சிங்கள எழுத்தாளர்களில் வெகுசிலரைத் தவிர ஏனையோர் நாடுகடத்தப்பட்டுவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் போலவே கனடாவிலும் ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் ஸ்விட்சர்லாந்திலும் தஞ்சம் புகுந்திருந்திருக்கிறார்கள். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் அறம் பிழைத்தவர்களுக்குத்தான் அரசியல் தஞ்சமாக மாறிப்போய்விட்ட இக்காலத்தில் அலைவும் உலைவும் படுகொலையும் அன்றி வேறெதைப் பெறப்போகிறோம்?
உணர்வுத் தோழமை (solidarity) என்னும் நெகிழ்விலும் அறக் கடப்பாடு என்னும் வீச்சிலும் உரம்பெற்ற படைப்புகளை இந்தச் சிறப்புப் பகுதியில் பார்க்கலாம்.
சானல் 4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ (Srilanka’s Killing Fields) நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஈழத் தமிழர்களின் இனவழிப்புப் பற்றிய பெருங்கவனத்தை ஏற்படுத்தியது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy is Sri Lanka - JDs, www.jdslanka.org) என்னும் புலம்பெயர்ந்த சிங்கள/ தமிழ்/ முஸ்லிம் பத்திரிகையாளர்களின் பணி இல்லாவிட்டால் சானல் 4இன் ஆவணப்படம் சாத்தியமாகி இருக்காது. அந்த வகையில் உலகின் அத்தனை தமிழ்ச் சமூகங்களும் இந்த அமைப்புக்குத் தலைதாழ்த்த வேண்டும். இந்த அமைப்பின் உருவாக்கத்துக்கும் இயக்கத்துக்கும் பணிபுரிந்தவர்கள் பாஷண அபேவர்த்தன, பொட்டால ஜயந்த, அநுருத்த லொக்கஹப்பு ஆராய்ச்சி, அஜித் ஹேரத், மஞ்சுள வெடிவர்த்தன, அதுல விதானஹே, இந்தி விதானஹே, கித்சிரி விஜேசிங், நிர்மானுஹல் பாலசுந்தரம் போன்றோர். இந்தப் பட்டியலில் உள்ள ஏனைய சிங்கள, தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அவர்களுடைய பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாதுள்ளது. இந்தச் சிறப்புப் பகுதியில் இவர்களில் பலருடைய படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். இப்பகுதியின் உருவாக்கத்துக்கும் சிங்களக் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்க்கவும் எனக்கு உதவியவர்கள் கிருஷான் ராஜபக்ஷ (கொழும்பு), மஞ்சுள வெடிவர்த்தன (பிரான்ஸ்), பாஷண அபேவர்த்தன (ஜெர்மனி), விமல் சாமிநாதன் (யாழ்ப்பாணம்), நா. முருகதாஸ் (கனடா) ஆகியோர். சில ஆக்கங்களைப் பெற்றுக்கொள்ள உதவியவர் சுனந்த தேசப்பிரிய. இவர்கள் அனைவருக்கும் காலச்சுவடு சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றி.
பொன்னி அரசு தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுவதுபோல நமக்கு இப்போது ‘ஆடம்பரச் சூளுரைகள்’ தேவையல்ல. ‘தீயாலும் வலியாலும்’ எழுதப்படுகிற எங்களது வாழ்வின் மீள் எழுச்சிக்கு நமக்குத் தேவையானவை உணர்வின் தோழமையும் அறிவின் பலமும் எழுத்தின் வீச்சும்.