படிவார்ப்புகள் சிதைந்த கதை
தொலைக்காட்சிச் செய்திகளின் முடிவில் வரும் வானிலை அறிவிப்புகளில் நான் அதிகம் மெனக்கெடுவதில்லை. செய்திகள் முடிந்தவுடன் தொலைக்காட்சியை அணைத்துவிடுவேன். வானிலை அறிக்கையையும் வெற்றிலையில் மைபோட்டு அறியும் தகவலையும் ஒரே நிலையில் வைத்திருப்பேன். என்னைப் பொறுத்த அளவில் இரண்டுமே குருட்டு ஊகங்கள். அன்று இரவு பலமான காற்றும் மழையும் வரும் என்று சொன்னதை நான் அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் காலையில் யன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன். எங்கள் தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சிறிய மரம் முந்தைய நாள் இரவு அடித்த புயலில் சரிந்து அடுத்த வீட்டு வேலிமேல் சாய்ந்துகிடந்தது. தோட்டம் என்றால் ஏதோ உயர்ந்த மரங்களும் வண்ணப் பூக்களும் நிறைந்த பங்களூரு லால் பாக் அல்லது கண்டி பேரதேனியா மாதிரி பூந்தோட்டம் அல்ல. இரண்டு டென்னிஸ் மேசைகள் போடக்கூட இடம் இருக்காது. நிலம் முழுக்கப் பச்சைப் புல். நடுவிலே இந்த மரம்.
மரத்தின் பெயரைக் கேட்காதீர்கள். எனக்கு எல்லா மரங்களும் ஒன்றுதான். இந்த மரம் லாவகமாக வேலிமீது சாய்ந்திருந்தது. அந்த வேலியும் சிறிதாக ஆடிக்கொண்டிருந்தது. எப்போது சாயுமோ தெரியாது. இரு