கட்டுரை: மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின்
மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது.
வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
“போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். முதலாவது தமிழ் மக்கள் இந்த நாட்டுக்குரியவர்கள் என்பதை சிறிலங்