பதான்கோட் தாக்குதல்: சில முக்கியமான கேள்விகள்
பதான்கோட் தாக்குதலைப் பற்றிப் பல பத்திகள் எழுதப்பட்டுவிட்டன. தேசிய பாதுகாப்புக் காவலர்களுக்கு இந்தத் தாக்குதலை அதிகச் சேதம் இன்றி முறியடிக்கும் திறமை இருந்ததா அல்லது இராணுவத்தையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு என்ன நடந்தது என்பது முழுவதுமாகத் தெரியாதவரை பதில்கள் கிடைப்பது கடினம். தரைப்படையின் தலைமைத்தளபதி நடந்தவை அனைத்திற்கும் தனது ஒப்புதல் இருந்தது என்று கூறியிருக்கிறார். எனவே ஏழுபேர்களின் உயிர் இழப்பைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி, பயங்கரவாதம் நமது படைத்தளங்களையும் ராணுவத்தளவாடங்களையும் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பல பொதுக்கேள்விகள் எழுகின்றன.
பதான்கோட் விமானத்தளத்தில் நடந்த தாக்குதல் நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். ஆனால் இந்திய உளவுத்துறையும் ராணுவமும் தாக்குதலுக்குத் தயாராகவே இருந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் கடல்படையின் விமானத்தளம் தாக்கப்பட்டுப் பலவிமானங்கள் அழிக்கப்பட்டன. உடனேயே, அதில் இந்தியாவின் பங்கு இருந்தது என்று பாகிஸ்தான் சந்தேகப்பட்டது. 2014ஆம் ஆண்டிலும் கராச்சியில் கப்பல் கட்டுமானத்தளத்தில் தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டது. சமீபத்தில் முஷரஃப் தனது நேர்காணல் ஒன்றில் மிகத் தெளிவாக இந்தியாதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தது என்று சொன்னார். இந்திய உளவுத்துறைக்கும் பாகிஸ்தான் அவ்வாறு நினைத்துப் பதிலுக்குப்பதில் கொடுக்கும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆச்சரியம் என்னவென்றால், எங்கு நடக்கும் என்பதும் தெரிந்திருந்ததுதான். பாகிஸ்தான் இராணுவமே இந்தியாவுக்கு இந்தத் தகவலைக் கொடுத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உளவுத்தொழிலில் இத்தகைய தகவல் மாற்றுகள் நடைபெறக் கூடியவையே.
முதல் கேள்வி: தகவல் தெரிந்திருந்தும் பயங்கரவாதிகளை எல்லையிலேயே ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
காரணங்கள் இவையாக இருக்கலாம். முதலாவது, எல்லையைக் கடப்பது எங்கு நடை பெறும் என்பதுபற்றித் துல்லியமான தகவல் கிடைக்காதது. இரண்டாவது, பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள் கடத்தப்படுவது இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையில் இருக்கும் சிலரின் தயவோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தல்காரர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் நுழைந்திருக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்திய உளவுத்துறை கூட ‘உள்ளே வந்துவிட்டார்கள்’ என்ற முன்முடிவோடுதான் பிரச்சினையை அணுகியிருக்கிறது. எனவே பயங்கரவாதிகளுக்கு முதற்கட்ட உதவி நமது எல்லைப்பாதுகாப்புப் படையில் இருக்கும் சிலரால் கிடைத்திருக்கிறது என்ற சாத்தியக்கூறை ஒதுக்கித் தள்ள முடியாது.
எல்லையைத் தாண்டி வந்தவர்களுக்குச் செல்லவேண்டிய வழி நன்றாகத் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் இங்குள்ளவர்களின் உதவி இல்லாமல் பதான்கோட் வரை (எல்லையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம்) அவர்களால் பாதுகாப்பாகச் சென்றிருக்க முடியாது.
எனவே, இரண்டாவது கேள்வி: யார் உதவி செய்தார்கள்?
இங்குதான் கூத்தில் தோன்றும் கோமாளி போல குருதாஸ்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் நுழைகிறார். அவர் சொல்லும் கதை நிச்சயம் நம்பக்கூடியதாக இல்லை. அதேசமயம் பல நம்பமுடியாத கதைகள் உண்மைகளாக இருந்திருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவரது வாகனத்தைக் ‘கடத்தி’ச் சென்ற பயங்கரவாதிகள் விமானத்தளத்தில் எளிதாக நுழைய முடிந்திருக்கிறது. 11 அடிச் சுவரைத் தாண்டி ஒவ்வொருவரும் 25 கிலோ தளவாடங்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.
மூன்றாவது கேள்வி: எவ்வாறு நுழைய முடிந்தது?
தளத்திற்குள்ளேயே அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கலாம். தேசிய பாதுகாப்புக் காவலர்கள் வருவதற்கு முன்னாலேயே அவர்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள் என்று இப்போது கூறப்படுகிறது. ராணுவப்பொறியியல் சேவையைச் சார்ந்த பழைய கருவிகள் வைக்கப் பட்டிருக்கும் கிடங்கு ஒன்றின் கதவை உடைத்து அவர்கள் உள்ளே இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. கிடங்கு இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல் பயங்கரவாதிகள் ஒளிந்துகொண்டிருக்கும் இடங்களாகக் கருதப்படுபவற்றில் முதலாகத் தேடவேண்டிய இடங்களில் இந்தக்கிடங்கு ஒன்றாக இருந்திருக்க வேண்டும். எனவே நான்காவது கேள்வி, இங்கு ஏன் தேடுதல் நடைபெறவில்லை?
முக்கியமான எல்லா ராணுவத்தளங்களிலும் உட்காவலும் இருக்கும், வெளிக்காவலும் இருக்கும். இதுவரை இந்தக் கடமைகளை இராணுவப் பாதுகாப்புப் பிரிவு செய்து வருகிறது. 31,000 காவலர்களைக் கொண்ட இந்தப்பிரிவு முழுவதும் அனேகமாக ஓய்வுபெற்ற படைவீரர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இவர்களால் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகளை எதிர்கொள்ள முடியாது. எனவே அரசுக்கு இந்தப் பிரிவை மறுசீரமைக்கும் கட்டாயம் இருக்கிறது. இதைத் தவிர எல்லாத்தளங்களிலும் நவீன கண்காணிப்புச் சாதனங்களை உடனடியாகப் பொருத்தவேண்டிய கட்டாயம் அரசிற்கு இருக்கிறது. எனவே ஐந்தாவது கேள்வி: எவ்வளவு விரைவில் இந்தப் பிரிவு வலுப்படுத்தப்பட்டு, நவீன கண்காணிப்புச் சாதனங்கள் பொருத்தப்படும்?
இவற்றையெல்லாம் விட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு இந்தியாவைப் பயங்கரவாதிகள் மூலம் தாக்கலாம், ஏனென்றால் அதற்கு ஒருசிறிய போரைச் செய்யக்கூடிய வலுகூட இல்லை என்ற எண்ணம் எவ்வாறு வந்தது? இந்தக் கேள்விக்கு மட்டும் நம்மிடம் தெளிவான பதில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இருந்த பாதுகாப்பு மந்திரிகளில் திறமை என்பதே இல்லாத அமைச்சர் என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் ஏ.கே அந்தோணியைச் சொல்லலாம். ஒன்பது ஆண்டுகள் இவர் இருந்தகாலம் இந்திய இராணுவ வரலாற்றின் இருண்டகாலம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கேரளத்தின் இடதுசாரி அணி ஏ.கே. அந்தோணியின் இந்தக் கையாலாகாத்தனத்தைப் பிரச்சாரக் கூட்டங்களில் பகிரங்கமாக விமர்சிக்கவும் செய்தது. இராணுவம் வெளிச்சத்திற்கு வர இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை பாகிஸ்தான் இந்திய இராணுவத்தின்மீது அச்சம் கொள்ளும் வாய்ப்பே இல்லை. எனவே நமது தளங்களின் பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்திக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.