கவிதையின் கவிதை
கவிதைக்கென்று தனி ஞாபகத் தொகுப்பு இருக்க முடியுமா என்ன! கவிதைக்குள் புழங்கும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த தனிநபர்களின் அனுபவம் மற்றும் செயல்பாட்டுக் கிடங்கே அதன் நினைவுப் பெட்டகமாக ஆகிறது. அவர்கள் வழியாகத் தன்னைப் பற்றிய மறுமதிப்பீட்டையும் தனது உத்தேசத்தையும் தனது வல்லமையையும் தன் இருப்பின் நியாயத்தையும் தானே எடுத்துரைக்கிறது கவிதை.
இதேவிதமாக, தன்னைப் பற்றித் தானே நிலையறிவிக்கவும் செய்கிறது!.
ஆமாம், கவிதை பற்றிய கவிதை எழுதப்படாத ஒரேயொரு மொழிச்சூழல் கூட இருக்காது. அநேகமாக, தனது கவிதைபற்றி வெளிப்படையான பிரகடனம் செய்யாத கவிஞனும் இல்லை. எந்த மொழியிலும் எந்தவிதமான வகைமையிலும் ஆரம்பநிலைக் கவிதைகளில் அநேகம் கவிதையின் தன்னிலையறிவிப்பாக இருப்பதில் ஆச்சரியமுமில்லை.
தமிழ் நவீன கவிதையும் விதிவிலக்கு கிடையாது. கல்யாண்ஜியின் கவிதை ஒன்று இப்படி