ஜல்லிக்கட்டு: தக்கவைத்தலும் மாற்றங்களை ஏற்றலும்
கடந்த சில ஆண்டுகளாகத் தைப்பொங்கல் காலங்களில் விவாதத்திற்கு உள்ளாகிவந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தீவிரப் போராட்டமாக விரிவடைந்திருக்கிறது. எந்தவொன்றையும் தேவை எழும் காலங்களில் மட்டும் பேசிவிட்டு மற்றக் காலங்களில் பாராமல் விட்டுவிடும் நம்முடைய வழக்கமான அணுகுமுறையே இதிலும் தொடர்ந்தது. தேவைப்படுகிற அளவிற்கு இதில் தொடர்ச்சி இல்லை என்பது முக்கிய குறைபாடு. விழாக்கால நெருக்கத்தில் மட்டுமே அதைப்பற்றிய பேச்சு எழுந்தது. கட்சிகளும் பேசத் தொடங்கின. இவ்வாறான அழுத்தங்கள் எழுந்தபிறகே மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆணை பிறப்பித்தது. நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. பிறகு ஜல்லிக்கட்டு நடக்கும் வட்டாரங்களில் மக்களின் போராட்டம் எழுந்தது. அவ்வப்போதைய உணர்ச்சி போராட்டம் என்பவற்றோடு நின்றுவிடாமல் நிதானமாகவும் எச்சரிக்கையோடும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பவற்றையே இவை காட்டுகின்றன.
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஆதரிப்போர், எதிர்ப்போர் என்கிற இரண்டு தரப்பிலிருந்தும் முழக்க பாணி உணர்ச்சிகரப் பேச்சுகள் சிலவற்றைத் தவிர்த்துப் பல்வேறு ஆரோக்கியமான கருத்துகளும் தரவுகளும் வெளிப்பட்டன. இவற்றின் மூலம் ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை புலப்படாத சில புரிதல்கள் கிடைத்தன. ஜல்லிக்கட்டை வரலாற்று ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் புரிந்துகொண்டு செயல்படுவதற்கான கூறுகள் இவற்றில் தென்பட்டன. அதாவது ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. அது காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப மாறிவந்திருக்கிறது. இப்பண்புகளுக்கேற்பவே அவற்றின் இன்றைய இயங்குமுறை அமைந்திருக்கிறது.
சங்க இலக்கியத்தில் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் மாடுபிடி விளையாட்டு பதிவாகியுள்ளது. ஆனால் அது அதே தன்மையிலிருந்து பிற்காலத்தில் மாறியிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலித்தொகையில் இயல்பான விளையாட்டாகக் காட்டப்பட்ட இவ்விளையாட்டு பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அதிகாரம் சார்ந்த விளையாட்டாக மாற்றம் பெற்றிருக்கிறது. இவ்விளையாட்டில் ஏறிவிட்ட அதிகாரம் சார்ந்த நுட்பத்தையே தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றான பி.ஆர். ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திர’த்தில் காணுகிறோம். ஜல்லிக்கட்டில் காளையை விடுதல் ஜமீன்தாரின் அதிகாரமாகவும் அக்காளையை அடக்குதல் அவரின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகவும் மாறுகிறது என்கிற அம்சத்தைத் தமிழ்வாழ்வின் அசலான நாவல்களில் ஒன்றான சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாச’லில் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு பற்றிய இன்றைய ஆதரவு - எதிர்ப்புச் சொல்லாடல்களில் எடுத்துரைக்க முடியாத நுட்பமான தருணங்களை இந்த இலக்கியப் பிரதிகள் காட்டுகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு பற்றிய ஆரோக்கியமான விவாதத்திற்கு அவற்றில் புலப்படுகிற அனுபவங்களைப் போலவே புலப்படாத இந்த அனுபவங்களும் தேவைப்படும்.
மிருக வதை எதிர்ப்பு என்கிற ஒற்றைப் பக்கத்தைத் தாண்டி இன்றைய ஜல்லிக்கட்டு விவாதங்களில் வெளிப்படும் மற்றுமொரு அம்சம் அவற்றில் வெளிப்படும் சாதியம் பற்றியது. ஜல்லிக்கட்டு ஆதரவு அரசியல்வாதிகளிடம் விலங்குநல ஆர்வலர்களுக்குப் பதிலளிக்கும் ஆவேசம் இக்குறிப்பிட்ட அம்சத்தை விவாதிப்பதில் வெளிப்படுவதில்லை. ஒன்று அதைப் பற்றியே பேசாமல் விடுகிறார்கள். மற்றொன்று அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையெழுந்துவிட்டால் அப்படியொன்றே இல்லை என்று மறுத்துவிடுகிறார்கள். சாதியப் புலப்பாடு இந்த விளையாட்டு நடக்கும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பிரதிபலிக்காத பட்சத்தில் சாதியை மட்டுமே காரணம் காட்டிப் பண்பாட்டு நிகழ்வொன்றை மதிப்பிட முடியாது; அதேவேளையில் அத்தகைய சிக்கலை மறுத்துவிட்டும் விளையாட்டைப் பற்றி பேசமுடியாது.
நெடுங்காலம் மக்களின் நினைவுகளில் நிலைகொண்டுவிட்ட பண்பாட்டு விழாக்களை நவீன அளவுகோல்களை மட்டுமே வைத்து உடனடியாக ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது. அதே வேளையில் மாறிவரும் வாழ்க்கைத் தேவைகள், கருத்துகள், நம்பிக்கைகள் சார்ந்து அவற்றில் மாற்றங்களைச் செய்வதும் அவற்றை ஏற்பதற்கான மனநிலை ஏற்படுவதும் அவசியம். பண்பாட்டு நம்பிக்கைகள் பலவற்றில் சீர்திருத்தங்கள் செய்து அவற்றை வேறுவடிவில் தக்கவைத்து வருவதற்கு நம்மிடம் முன்னுதாரணங்கள் உண்டு. கொண்டாட்டங்களும் நம்பிக்கைகளும் சமூகக் கூட்டுணர்வுக்கு அவசியம்.