பாதக மலம்
கடவுளின் பாதக மலம் என்று மெய் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்; சாமியார்களுக்குப் பாதபூஜை செய்து வணங்குகிறார்கள்; அவர்களின் பாதங்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்; ஆனால் பிரம்மாவின் பாதத்தில் பிறந்தவர்கள் என சொல்லப்படுபவர்களை மட்டும் பாதகர்களாகப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. நாட்டையும் வீட்டையும் சுத்தமாக்கி, சுகாதாரமானதாக்கி, அருஞ்சேவை செய்பவர்களைப் பாதக மலமாகப் பார்ப்பது, நடத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?
உலகிலேயே உன்னதமான பண்பாடு, கலாச்சாரம் நம்முடையது என்று வாய்கிழியப் பேசுகிறார்கள் சிலர். இந்தியா தத்துவங்களின் தாயகம், தர்க்கங்களின் வாழ்விடம், மதங்களின் பிறப்பிடம், மறுமையின் நுழைவாயில், எங்களிடம் இல்லாதது எதுவுமில்லை என்றெல்லாம் மார்தட்டிக்கொள்கிறார்கள். வேதங்களும் உபநிடதங்களும் இதிகாசங்களும் சமற்கிருதமும் கலந்து விரவி, இந்த ஆரியவர்த்தா அகில உலகத்துக்கும் காரியகர்த்தாவாக இருந்தது என்று புளகாங்கிதமடைகின்றனர். பாங்கான சமையல் முதல் பாலியல் நலம் வரை நாங்கள் அறியாத கலைகள் இல்லை, புரியாத வித்தைகள் இல்லை என்றெல்லாம் இறுமாப்புக் கொள்கிறார்கள். ஆனால், மனிதக் கழிவுகளை ம