குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை
பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்காளாகும் நிகழ்வுகள் குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளன.
2017 செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராமிலுள்ள ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான். இதையடுத்துப் பள்ளிப் பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆட்படுத்த நடத்துநர் முயன்றபோது குழந்தை எதிர்த்ததால் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக்கூட வளாகத்தில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததும் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ளாததும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு கூறுவதை நடைமுறைப்படுத்த மாநில அரசு தவறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகர்ப்புறப் பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குத் தொடர்ந்து ஆளாகிவரும் நிகழ்வுகளில் மிகச் சமீபத்தியது குருகிராம் நிகழ்வு. இவ்வாறு பாலியல் வன்முறை சிறுமிகள், சிறுவர்கள் இருவருக்குமே ஏற்படுகிறது என்பது முக்கியமான விஷயம். குழந்தைகளைப் பாலின ரீதியாகப் பாகுபடுத்திக் காவல் காப்பதைவிட அமைப்புரீதியாக இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 2014இல் 8904ஆக இருந்தது. 2015இல் 14,913ஆக அதிகரித்திருக்கிறது. மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும் 53.22% குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய 2007ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. 12,000 குழந்தைகளில் 50% தங்களது பள்ளிகளில்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். 13 மாநிலங்களில் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளான குழந்தைகள் 69%, இவர்களில் 54.68% பேர் சிறுவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இவற்றை யாரிடமும் சொல்வதில்லை என்று ஆய்வு கூறுகிறது. 2015 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அறிக்கை மிக மோசமான இந்த நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
குழந்தைகளை உண்மையான ஆபத்திலிருந்து அல்லது ஆபத்து என்று தோன்றக் கூடியதிலிருந்து அல்லது அவர்களது உயிருக்கோ குழந்தைத்தன்மைக்கோ ஆபத்து வருவதிலிருந்து காப்பாற்றுவது குறித்து ‘பெண்கள் - குழந்தைகள் வளர்ச்சி அமைச்சக’த்தின் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டமானது பேசுகிறது. குழந்தைப் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் பொறுப்பு. சமூகம், அரசாங்கம், குடிமைச் சமூகம் ஆகியவற்றின் ஆதரவு இதற்குத் தேவை. இந்த ஆதரவு வலைப்பின்னலின் ஆக முக்கியமான பகுதி பள்ளிக்கூடங்கள். தங்களது நாளின் (குழந்தைப் பருவத்தின்) பாதியைப் பள்ளிக்கூடங்களில் கழித்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் நிறுவனங்கள் என்ற வகையில் பள்ளிக்கூடங்கள் உண்மையில் பொறுப்பாளிகளாக்கப்பட வில்லை.
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பள்ளிக்கூடத்தின் பங்கு பற்றிச் சட்டத்தில் நிலவும் குழப்பம் முக்கியமான பிரச்சனை. இலவசக் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைகள் சட்டத்தில் சிறந்த பாடத்திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனவே தவிர பாலியல் வன்முறைக்குக் குழந்தைகள் ஆளாகும் யதார்த்தம் பற்றியும் அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது பற்றியும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசப்படவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் பள்ளிக்கூடங்களையோ அவற்றின் நிர்வாகத்தையோ பேசவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிப் பேசும்போது உடல், உணர்வு, அறிவுரீதியாக குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பொதுவாகக் குறிப்பிடுவதோடு நின்றுவிடுகிறது. சிறார் நீதிமுறை (குழந்தைகளுக்கான கவனிப்பு, பாதுகாப்பு) சட்டம் அநாதை, தொலைந்துபோன, கைவிடப்பட்ட பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனத்திற்கொண்டு இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் மிக மோசமான வன்முறை அல்லது இழப்புகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியது. குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது பள்ளிக்கூடங்களின் பொறுப்பு என்பதை இது குறிப்பிடத் தவறிவிட்டது.
வெகுகாலமாக நடத்தப்படாதிருந்த குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உரையாடல்களை ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் விவகாரம் விரைவுபடுத்தியிருக்கும் வேளையில் இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் இயக்குநரின் அறிக்கையைப் பார்க்கும்போது குழந்தைகள் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவது பற்றியும் அவற்றைப் பள்ளிக்கூடங்களில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அதற்குண்டான பாடங்களை அறிமுகப்படுத்துவது பற்றியும் யோசனை இருப்பது தெரியவருகிறது. குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பாரத யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் அமைதிக்கான நோபெல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தி. பணியாளர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறை சரிபார்ப்பது என்பது ஹரியானாவில் இனி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும்; குழந்தைகளின் பாதுகாப்பிற்கான குழுக்கள் அமைக்கப்படும்; பள்ளிக்கூட வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்; குழந்தைகளுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும். இவை முதல்கட்ட நடவடிக்கைகள்; ஆனால் போதுமானவை அல்ல. நல்ல கண்காணிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்களின் பொறுப்பை வற்புறுத்தும் சட்டங்கள் தேவை.
இறுதியாகப் பார்க்குமிடத்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதியையும் கல்வியையும் தவிர்த்து வேறு விஷயங்களும் தேவைப்படுகின்றன. எல்லாக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாளராகயிருந்து அரசாங்கம் தனது பங்கை ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை (குறிப்பாக தனியார் பள்ளிக்கூடங்களில்) அதிகரித்துவரும் வேளையில், பள்ளிக்கூடங்களைத் தொடங்குவது என்பது நல்ல வர்த்தகமாகியுள்ள சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பொறுப்புகள் பற்றிக் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் தெளிவான விதிகள் இருப்பது மிகவும் அவசியம். எந்த வகுப்பில் படிக்கிறார்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்களா அல்லது நகரத்தைச் சேர்ந்தவர்களா என்றெல்லாம் பாகுபாடில்லாமல் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, வன்முறையற்ற, கற்பதற்கான சூழல் பள்ளிக்கூடங்களில், வீட்டில், போக்குவரத்தில் தேவை.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 23, 2017