பாரதம் தந்த பரிசு
ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு.
1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. இணையத்தில் தேடுபவர்களுக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் ஆச்சரியம் தரும் வகையில் சொற்பமே. இந்தியப் படையினர் ஈழத்திலிருந்த காலத்தை அப்படியே மறைத்துவிடுகிற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தியாவில் வெளியாகும்