நிகழ்
நிகழ்
ஒவ்வொரு நாளும்
இரவு கவிகையில்
‘அவர்கள்’ வருவர்.
ஒழுங்கை முகப்பில்
நாய்கள்குரைக்கையில்
‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம்
விளக்கை அணைத்து
வாசலைப் பார்த்து
மௌனமாயிருப்போம்
வேலியோரத்தில்
நிற்பதும் நடப்பதுமாய்
அவர்களின் பவனி தொடரும்
புரியாத மொழியில் பேசிய போதும்
அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்:
பெண்
நகை
புலி.
ஒலியடங்கிய சற்று நேரத்தில்
எங்காவது
வீரிட்ட அழுகையோ
வேட்டொலியோ
கேட்டபடி
தூங்கிப் போவோம்
விடியும் வரையும்
நிம்மதி மறந்து
உறங்குவதே போல்
வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம்.
- எஸ்.கே. விக்னேஸ்வரன்
1987