காவிய ராமன் x காவி ராமன்
அவதாரப் புருஷனாக வணங்கப்படும் ராமனுக்கு அவர் பிறந்ததாக நம்பப்படும் பூமியிலேயே ஆலயம் அமைத்து 2024 ஜனவரி 22ஆம் நாள் உலகம் வியக்கும் வண்ணம் பிராமண பிரதிஷ்டை சடங்கு நடத்தியதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரட்டைப் புகழ் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. (முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஆலயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமான குடமுழுக்குத் தேவையா? ஏன் இந்த அவசரம்?) அனுமன், வால்மீகி முதலான ராமபக்தர்களின் வரிசையில் மோடியும் சேர்கிறார்.முடிமன்னனுக்கு நிகராகப் புகழப்படுகிறார்; இது முதலாவது. இந்திய மக்கள் அனைவரும் ராம ராஜ்யத்தின் பிரஜைகள் என்ற கற்பனையை அவர்களின் மனங்களில் ஊன்றியிருக்கிறார். இது இரண்டாவது ‘பெருமை’. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த விவாதங்களுக்கும் மோதல்களுக்கும் காரணமாக இருந்த விவகாரம் 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதே பாபர் மசூதி என்ற உரிமைகோரலின் பேரில் மசூதித் தகர்ப்பு நடந்தேறியது. அதையொட்டி எழுந்த வாதப் பிரதிவாதங்களில் முதன்மையாக பாஜகவையும் விஸ்வ ஹிந்து பரிஷத்தையும் இதர இந்து அமைப்புகளையும் சேர்ந்த தலைவர்கள் சிலர் ஒரு கூற்றை முன்வைத்தனர். ‘மசூதி இடிப்பு திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல; தொண்டர்கள் பக்திப் பரவசத்தில் அந்தச் செயலில் ஈடுபட்டார்கள்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அந்தச் சமாதானம் பொய்யானது என்பதைப் பிந்தைய ஆண்டுகளில் நடந்த செயல்களும் வன்முறைப் போராட்டங்களும் நீதிமன்ற வழக்காடல்களும் நிரூபித்தன.
இருபத்தேழு ஆண்டுகள் நீண்ட நீதிமன்ற வழக்காடல்களுக்குப் பிறகு 2019 நவம்பர் 9 அன்று விவாதத்துக்கு உட்பட்ட பூமி, ராம் லல்லாவுக்கு – குழந்தை ராமருக்குப் - பாத்தியப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘ஐநூறு ஆண்டுத் தவம் பலித்தது’ என்று இந்துத்துவர்கள் பூரிப்படைந்தார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பே பாரபட்சமானது என்றும் விமர்சிக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களையோ அறிவியல் ஆதாரங்களையோ அடிப்படையாகக் கொள்ளாமல் பெரும்பான்மை இந்துக்கள் அவ்வாறு நம்புகிறார்கள்; அந்த நம்பிக்கையை ஏற்றே தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றமும் குறிப்பிட்டது. இது மத நல்லிணக்கத்துக்கு உதவுவதற்குப் பதிலாக மத அரசியலுக்கும் குறிப்பிட்ட பிரிவினரின் அதிகார நடவடிக்கைகளுக்கும் துணையானது. ராம ஜென்ம பூமியில் ராமனுக்கு ஆலயம் எழுப்புவது இறைப் பணி என்பதற்கு மாறாக இந்துக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அரசியல் திட்டமாக மாறியது. அதற்கான பரப்புரைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. கட்டட நிர்மாணப் பணிகள் வேகமெடுத்தன. ஒன்றிய அரசே அதற்கான முன்னெடுப்பையும் செய்தது. ஸ்ரீ ராம ஜென்ம தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையைத் தொடங்கியது. ஆலய நிர்மாணப் பொறுப்பை அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது.
அரசியல் அமைப்புச் சட்டப்படி மதச் சார்பற்ற அரசு தனிப்பட்ட மதத்தின் சார்பாக இந்தச் செயலில் ஈடுபட்டது அரசியல் சட்ட மரபுக்கு எதிரானது. ஆனால் பக்தியின் பெயரால் பரப்பப்பட்ட உணர்வு மக்களின் வாயை அடைத்தது. அறுதிப் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக அரசால் அதை மறைக்கவும் தனது செய்கைக்கு ஆதரவான கருத்தைத் திரட்டவும் பல்லாயிரம் கோடி செலவில் ஆலய நிர்மாணத்தை நடத்தி முடிக்கவும் முடிந்தது.
2020 ஆகஸ்ட் 5 அன்று ராமர் ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜையை மதச் சார்பற்ற இந்தியக் குடியரசின் பிரதமர் இந்து மதச் சடங்குகள் வழுவாமல் நடத்தினார். மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படைக் கட்டுமானங்களை நடைமுறைக்குக் கொண்டுவர நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பின்னணியில் மூன்றே ஆண்டுகளில் பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பியிருக்கும் வேகம் வியப்பளிப்பது. இதன் நோக்கம் ராமனின் அனுக்கிரகத்தைப் பெறுவது அல்ல, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் தொடர்வதும் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவதுமான அரசியல் திட்டமே காரணம். மத அரசியலின் பட்டவர்த்தனமான சான்று இது.
ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நிலவிவந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரத்தை ‘சுமுகமாகத் தீர்த்துவைத்த’ அவதார புருஷராகப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிருத்தப்படுகிறார். இதுவரை ஆட்சிசெய்த இந்தியப் பிரதமர்களில் எவரும் மதத்துடன் வெளிப்படையான பக்கச் சார்பைக் காட்டியதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது செயல்பாட்டின் வாயிலாகத் தானும் தனது அரசும் இந்துத்துவ அரசுதான் என்பதை மோடி உறுதிப்படுத்துகிறார். இந்து அல்லாதார் வாழ்வது இந்துக்களின் ‘தயவில்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். இது இந்துக்கள் அல்லாதவர்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாகக் கீழிறக்குகிறது.
இந்துக்களாக உள்ள அனைவரையும் இந்துத்துவர்களாக்கும் செயல்திட்டத்தின் சான்றுதான் ராமர் ஆலய நிர்மாணமும் குடமுழுக்கும் அதையொட்டிய களேபரங்களும்.
மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம், தேவை. அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவரும்போது அதற்கு ‘மதம்’ பிடித்துவிடுகிறது. ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை முன்னிட்டு இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்ட செயல்கள் பக்திக்கும் இறைப்பற்றுக்குமே களங்கம் கற்பிப்பவை.
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தாம் வழிபடும் கடவுளுக்கு ஆலயம் எழுப்புவதும் குடமுழுக்குச் செய்வதும் விழாக் கொண்டாடுவதும் இயல்பானதுதான். ஆனால் அதை எல்லார் மீதும் திணிப்பது முறையற்றது. ராமர் ஆலயக் குடமுழுக்கு ஒட்டுமொத்த இந்தியர்கள்மீது திணிக்கப்பட்ட ஒன்று. அயோத்தி பற்றியோ ராம் லல்லாவைப் பற்றியோ மாற்றுக் கருத்துகள் தெரிவிப்பவர்கள் தேச விரோதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அயோத்தியே இந்தத் தேசத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. இது இறைவுணர்வின் பிரதிபலிப்போ பக்தியின் விளைவோ அல்ல. இந்தியர்களை ஒற்றைப் பரிமாணம் உள்ளவர்களாக மாற்றும் அரசியல்மயப்படுத்தலின் நடவடிக்கை. ஏற்கெனவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என்று செயல்பட்டுவரும் வலதுசாரி இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி புதிய களம்; ராமன் புதிய கதாபாத்திரம்.
ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் இப்போது முதல் ராம் லல்லாவும் அயோத்தியும் இந்திய பண்பாட்டின் கூறுகளாக வலியுறுத்தப்படுகிறார்கள். எதிர்கால வரலாற்றின் யதார்த்தங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவை முதன்மையான சில கேள்விகளை முன்வைக்கின்றன. அவையாவன: மதச்சார்பற்ற அரசு என்பதன் பொருள் என்ன? ஒரே மதத்தை உயர்த்திப் பிடிப்பதும் அதன் சடங்கு, சம்பிரதாயங்களை அரசே பின்பற்றுவது பிற மதங்கள் உதாசீனப்படுத்தப்படுவதாகாதா? எல்லாரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற திட்டம் இந்து அல்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்காதா? அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யாதா? அனைத்துக்கும் மேலாக மக்களைக் கற்கால மரபுகளுக்கும் வழக்கொழிந்த சடங்குகளுக்கும் திரும்பக் கொண்டுசெல்வது முன்னேற்றத்திற்கு எதிரானது இல்லையா?
மேற்சொன்ன கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் தார்மீக உணர்வுடன் இந்த அரசும் இல்லை, அதன் ஆதரவாளர்களும் இல்லை. ஒருவேளை ராம் லல்லா பதில் அளிக்கக்கூடும்.