கடிதங்கள்
ஜனவரி மாத இதழில் நயன்ஜோத் லாஹிரி நேர்காணலில் மருதனின் கேள்விகள் ஆக்கப்பூர்வமாகவும், சிறந்த பதில்களைப் பேட்டியாளரிடமிருந்து பெறும் வண்ணமாகவும் அமைந்திருந்தன. நேர்காணல் செய்பவர் தான் சந்திக்கும் ஆளுமையை ஆழ்ந்து வாசித்துப் புரிந்துகொண்டால்தான் இத்தகைய கேள்விகளைக் கேட்க முடியும்.
வரலாற்றைச் சுவைபட எழுத முடிந்த ஆய்வாளரிடமிருந்து ஒரு நேர்காணலையும் சுவைபடக் கொணர முடிந்திருக்கிறது. கொஞ்சம் வறட்டுத்தனமான பொருண்மையைத் திறமையாகக் கையாண்டு, இவ்வளவு நெடிய நேர்காணலைப் படிக்க மிக இலகுவான மொழியில் தந்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஜா.மு. திருவள்ளுவனார்,
திருச்செங்கோடு.
மருதனின் வினாக்களுக்கு வரலாற்றாசிரியர் நயன்ஜோத் லாஹிரி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் பதில்கள் அளித்திருக்கிறார்.
நானும் வரலாறு படித்தவன் என்ற வகையில் வரலாற்றாசிரியர் கூறிய அனைத்துப் பதில்களும் என் மனதில் நான் நினைத்ததை அவர் சொன்னது போல் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியது. உதாரணமாக வரலாறு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் குறிப்பிட்டதுபோல் வகுப்பறையோடு நிற்காமல் வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றால் மனத்தில் ஆழமாகப் பதிவுறும். வரலாற்றின் முக்கியத்துவம் தெரியும்.
அதிலும் வரலாற்றுக் காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டு, உதாரணமாக நிகழ்கால அரசியல் நடப்புகளை எடுத்துக்காட்டுடன் கூறியது பாராட்டுக்குரியது. இதுபோல எல்லோரும் பயனடையும் வகையில் நிறைய நேர்காணல்களை வாசகர்களுக்கு வழங்க காலச்சுவடு ஆசிரியருக்கு எனது பணிவான வேண்டுகோள்.
ஜி. சிவகுமார்,
வேளச்சேரி.
மு. இராமநாதனின் ‘என்று வடியும் இந்தப் பெருமழை வெள்ளம்?’ கட்டுரையில், சமூக ஊடகங்களில் டிசம்பர் 2023 பெருமழை வெள்ளத்தைப் பற்றி வெளியான இரு விவாதங்கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். டிசம்பர் பெருமழை வெள்ளத்திற்கும், 2015 பெருமழை வெள்ளத்திற்குமான விமர்சனம் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளார்.
ரூ.4000 கோடி கணக்கு என்ற தலைப்பில் கொடுத்த விளக்கத்தின் இறுதியில், இந்த விவாதம் பெரிதானபோது அமைச்சர் கே.என். நேரு அளித்த விளக்கத்தைக் கூறி, “சமூக ஊடக விவாதங்கள் பல பக்கச் சார்புடையனவாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார். என்னைப் போன்றவர்களும் எழுப்பிய, 4000 கோடி செலவினம் குறித்த விவாதம் எப்படி எழுந்தது என்பதைக் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.
பெருமழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் வந்ததும் அரசுத் தரப்பில் இருந்து முதல்வர், அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் உட்பட அனைவரும் அறிக்கையிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியது என்ன? முதல்வர் 4000 கோடி செலவில் பணிகள் நடந்துள்ளன என்றார். அமைச்சர் நேரு 97% பணிகள் முடிந்து விட்டன என்றார். இவர்கள் சொன்னதெல்லாம், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், சென்னையில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தேங்கி நிற்காது என்றுதான். அதனால்தான் மழைநீர் தேங்கிய போது (அதுவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்) விமர்சனம் செய்ய நேர்ந்தது.
விமர்சனம் அதிகரித்த பின்னர்தான் அமைச்சர் நேரு, மதிப்பீடு ரூ.5166 கோடி என்றும், இதுவரை ரூ.2191 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் கூறினார் என்பதை ஆசிரியர் கண்டுகொள்ளாதது பக்கச் சார்புடையதாகும்.
மாலனின் எதிர்வினைக் கட்டுரையில், ராஜாஜி குறித்து எழுதும்போது, “படேல் மறைவுக்குப் பின் நேருவின் அழைப்பின் பேரில்தான் மத்தியில் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்” என்கிறார். இது தகவல் பிழையாகும்.
ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து விலகிவந்த பின்னர் நேரு, படேலுடன் ஆலோசனை செய்து, ராஜாஜியை அமைச்சரவையில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, ராஜாஜி இலாகா இல்லாத அமைச்சராக 1950, ஜூலை 15 அன்று பதவியேற்றார். படேலின் மரணத்திற்குப் பின் உள்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார் என்பதே நடந்த வரலாறு ஆகும்.
சீ. இளங்கோவன்,
சேலம்.