சு.ரா. கடிதங்கள்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
16.7.1990.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் தந்தி கிடைத்தது.
நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருந்த போது உங்கள் 13.07.90 இன்லண்டும், 14.7.90 கார்டும் கிடைத்தன. வருகிற ஞாயிற்றுக்கிழமை இங்கு இருக்கும்படி வாருங்கள். அதற்குள் ஒரு சில பக்கங்களை அச்சுக்கோத்து வைக்கச் சொல்கிறேன். அச்சுக்கோத்து நீண்ட நாட்கள் வைத்திருப்பது இடையூறு என்கிறார் பாக்கியம் பிள்ளை. புத்தகத்தின் அமைப்பு பற்றி உங்கள் யோசனை தேவை. என்னுடைய நூல் நிலையத்திலிருந்து நாம் விரும்பும் விதத்தில் ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்து அதை மாதிரியாகக் கொடுத்துவிட்டால் அதிகம் பிரச்சினை இராது. நீங்கள் வரும் தேதி உறுதிப்படுத்தி எழுதிவிட்டால் அந்தத் தேதியில் எம்.எஸ்.ஸையும் வரச் சொல்கிறேன். பந்த்நாளை தவிர்த்து நீங்கள் ஞாயிறு வருவதுதான் நல்லது என்று படுகிறது. சனிக்கிழமை கிளம்பி வர முடியும் என்றால் மிகவும் நல்லது. இன்று நான் பாக்கியம் பிள்ளையைத் தொடர்புகொண்டு வரும் ஞாயிறு நீங்கள் இங்கு உறுதியாக இருப்பீர்கள் என்றும் 16 பக்கங்கள் வரையிலும் அச்சுக்கோத்து வைக்க வேண்டும் என்றும் சொல்லிவிடுகிறேன். கடையில் சிறப்பு விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் மிகுந்த வேலை நெருக்கடி. கண்ணன் இங்கு இருக்கிறான். கடையைக் கவனித்துக்கொள்கிறான்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
2.11.1990.
அன்புள்ள சிவராமன்,
வணக்கம். காலச்சுவடு காலாண்டு இதழின் எட்டாவது எண் 1989 டிசம்பரில் வெளிவந்தது. தவிர்க்க இயலாத பல்வேறு இடையூறுகள் காரணமாக 1990இல் காலச்சுவடை இதுவரையிலும் கொண்டுவர முடியவில்லை.
இவ்வாண்டு வெளிவர வேண்டிய நான்கு இதழ்களையும் ஒரு மலராக டிசம்பர் இறுதிக்குள் கொண்டுவரத் திட்டம்.
மலரின் தரத்தை ஏற்றும் வகையில் தாங்கள் ஒரு கட்டுரை தந்து உதவ வேண்டும். அச்சில் ஏழெட்டு பக்கங்களுக்குள் இருந்தால் நல்லது.
படைப்பை டிசம்பர் 10ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு செய்தால் மிக்க உதவியாக இருக்கும்.
மலர் தரமானதாக அமைய தங்கள் யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
9.11.1990.
அன்புள்ள சிவராமன்,
தைலா வந்திருக்கிறாள். நானும் தங்குவும் சென்னை போய் அவளை அழைத்துக்கொண்டு இப்போது வந்து சேர்ந்தோம். ராமகிருஷ்ணனிடம் விரிவாகப் பேசினேன். சுமார் முப்பது விஷயங்கள். அவை பற்றி நீங்களும் ராமகிருஷ்ணனிடம் கேட்டு அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பத்து நாட்களாக அச்சகத்தில்* சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது. 160 பக்கங்கள் அச்சேற்றி இருக்கிறார்கள்.
காலச்சுவடின் கடைசி இதழை மலராக டிசம்பரில் கொண்டுவர இருக்கிறேன். மலருக்கு எழுத பலரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எழுத வேண்டும். அவசியம். உங்களுடைய சுயமான கட்டுரை ஒன்றை நான் வெளியிட விரும்புகிறேன்.
அன்புடன்,
சுரா
* 2. பாரதி பிரஸ், நாகர்கோவில்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
20.11.1990.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 19. 11. 90 கடிதம். 29ஆம் தேதி மாலை சென்னையிலிருந்து தைலா யு.எஸ்.ஏ. போகிறாள். அவளை அனுப்பி வைத்துவிட்டு 30ஆம் தேதி காலை நான் மதுரை வருவேன். அன்று (வெள்ளிக்கிழமை) மாலை உங்களை உங்கள் வீட்டில் சந்திக்க வருவேன். சனி காலை ஊர் திரும்ப வேண்டும்.
பாரதி அச்சகத்திற்கு இந்த மாதம் இறுதியில்தான் பணம் தர இயலும். விபரம் இப்போது – உங்கள் கடிதம் கிடைத்த பின் – திரு. பாக்கியம் பிள்ளையிடம் தெரிவித்தாயிற்று. இதுவரையிலும் அவருக்கு ஏதும் பணம் தரவில்லை.
சென்னையில் ராமகிருஷ்ணனைச் சந்திப்பேன்.
ஏதும் செய்திகள் இருப்பின் ராஜுவிடம் – தொலைபேசி எண். 33524 – தெரிவித்துவிடுங்கள். இந்தக் கடிதத்திற்கு நீங்கள் பதில் எழுதினாலும் எனக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து 28ஆம் தேதிதான் நான் கிளம்புகிறேன்.
இதுவரையிலும் அச்சேறியிருக்கும் பக்கங்கள் 240. மொத்தம் கதைகள் 48. அச்சேறியிருக்கும் கதைகள் 19*
அன்புடன்,
சுரா
* க்ரியா வெளியிட்ட சுந்தர ராமசாமி சிறுகதைகள் (1991)
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
1.12.1990.
அன்புள்ள சிவராமன்,
நான் சென்னை போகவில்லை. கடைசி நிமிஷத்தில் என் பயணம் தடைபட்டு விட்டது. என் உடல்நிலையில் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தைலா என்னை சோதித்ததன் விளைவாக இவை வெளிப்பட்டன. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் உள்ளது. சற்று அதிகமாகவே. அதிக இரத்த அழுத்தத்திற்கான கூறுகளும் உள்ளன. பயணத்தை மேற்கொள்ளுவது நல்லது அல்ல என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் தைலா சிறிது வருத்தத்துடன் போகும்படி ஆயிற்று. ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். மருந்துகளும் சாப்பிட்டு வருகிறேன். எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். உணவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறேன்.
பாக்கியம் பிள்ளை பணத்திற்கு அபாரமாக நெரிக்கிறார். சமீபத்தில் எனக்கு ஏகச் செலவுகள். இருப்பினும் திங்கட்கிழமை நண்பர் ஒருவரிடமிருந்து பணம் பெற்றுத் தருகிறேன் என்று பாக்கியம் பிள்ளையிடம் சொல்லியிருக்கிறேன். அவர் மூவாயிரம் ரூபாய் தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார். ரூபாய் 2000 அல்லது 2500 கொடுக்க முடியுமென்று நம்புகிறேன். இதுவரையிலும் அச்சேறியிருக்கும் பக்கங்கள் 304.
காலச்சுவடு மலருக்காக முடிந்தவரையிலும் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மாட்டர் ஒன்றும் சொல்லும்படி கிடைக்கவில்லை. அதிகப் பக்கங்களை நானே எழுதி நிரப்ப வேண்டியிருக்கும். அந்த வேலையும் சிறிது நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு பவானியும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.
டிசம்பர் மாதம் நாம் சந்தித்துக்கொள்ள முடியுமா?
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
22.9.1997.
அன்புள்ள சிவராமன்,
நேற்றிரவு ஊர் வந்து சேர்ந்தேன். மதுரையில் வசதியாக இருந்தது. ஒரு பிரச்சினை இல்லை. ரமணியையும் வீமனையும் சந்திக்காமல் போனது ஒரு குறையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரையிலிருந்து கிளம்பு வந்துவிட்டேன்.
உங்களுக்கு எழுதியிருந்தேனோ என்னவோ நினைவில்லை. தில்லியிலிருக்கும் என் தங்கை சமீபத்தில் அவள் கணவனை இழந்துவிட்டாள். நானும் கமலாவும் 25ஆம் தேதி தில்லி போய் அங்கு ஒரு வாரம் இருந்துவிட்டு அங்கிருந்து கலிஃபோர்னியா போகிறோம். டிசம்பர் அல்லது 98 ஜனவரியில் நான் இங்கு வருவேன்.
நாவலை எழுதி முடித்துவிட்டேன். இது முதல் பிரதி. இன்னும் செய்ய காரியங்கள் நிறைய இருக்கின்றன. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பிரதியை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். சிறுகச் சிறுகச் செப்பனிட்டு முழுமைப்படுத்த வேண்டும். உங்கள் தில்லிப் பயணம் நன்றாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் கலிஃபோர்னியாவிலிருந்து மீண்டும் உங்களுக்கு எழுதுகிறேன்.
என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
27.1.1998.
அன்புள்ள சிவராமன்,
நான் ஊர் திரும்பி ஒரு வாரம் ஆகிறது. பயணமும் தங்கலும் சௌகரியமாக இருந்தன.
இங்கிருந்து போகும்போது நான் என் நாவலின் கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு போயிருந்தேன். கலிஃபோர்னியாவில் வைத்து மீண்டும் ஒருமுறை முழுக்கவும் திருத்தினேன். திருத்தங்களை அமல்படுத்தி இப்போது மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏப்ரல் இறுதிக்குள் இறுதிப் பிரதி தயாரித்துவிடலாம் என்று எண்ணம்.
கலிஃபோர்னியாவில் இருக்கும்போது சிறிய அளவில் எனக்கு உடல் பிரச்சினைகள் இருந்தன. அதனால் உணவுக் கட்டுப்பாடு மேலும் இறுக்கமாகிவிட்டது. உடற்பயிற்சியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
என் கட்டுரைகளின் முதல் தொகுப்பு – ‘காற்றில் கலந்த பேரோசை’ அச்சேறிவிட்டது. ஒரு பிரதி வந்திருக்கிறது. புத்தக பண்டில் இன்னும் வந்து சேரவில்லை. மேலட்டை எனக்குத் திருப்தியாக அமையவில்லை. மற்றப்படி அச்சும் அமைப்பும் நன்றாக வந்திருக்கின்றன.
அங்கு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? திருமதி பவானியும் குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நண்பர்கள் ரமணி, சுரேஷ், வீமன், சமயவேல் எல்லோருக்கும் என் அன்பு.
என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
27.3.1998.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 19.03.98 கடிதம். திருநெல்வேலிக் கூட்டம் நன்றாக நடந்தது. நாவலில் போட்டிருந்த திருத்தங்கள் அத்தனையும் கம்ப்யூட்டரில் போட்டு இரண்டு பிரதிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். இனி செய்ய வேண்டிய வேலை அளவில் அதிகம் இராது. ஆனால் நுட்பமான பல காரியங்கள் செய்ய இருக்கவும் இருக்கும். நானும் எம். எஸ்.ஸும் நாவலை ஆளுக்கொரு பிரதி வைத்துக்கொண்டு படித்துப் பார்க்க இருக்கிறோம். இரண்டு மாதங்களில் அந்தக் காரியம் முடியும் என்று நினைக்கிறேன்.
வெயில் இங்கு எந்த வருடத்தைவிடவும் கடுமையாக இருக்கிறது. அல்லது கடுமையாக எனக்குத் தோன்றுகிறதோ என்னவோ? வெயில் சற்றுத் தணிந்தபின் மதுரை வந்தால்தான் என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.
கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கேயாவது போக இருக்கிறீர்களா?
நாவல் தவிர நான் செய்யவேண்டிய சில்லறை வேலைகள் சில பாக்கி இருக்கின்றன. மே முடிய அந்த வேலைகள் இருக்கும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு நாவல்களையும் படித்துப் பார்க்க ஆசைதான். வாசிப்பு சார்ந்தும் எழுத்து சார்ந்தும் பல பேராசைகள் மனதிற்கு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் சிறிய அளவிலேயே செய்து முடிக்க முடிகிறது. பெரும்பகுதி வெளியே வழிந்துவிடுகிறது.
சமயவேல் எப்படி இருக்கிறார்?
உங்களுடைய உடல் பிரச்சினை மிகச் சிறியது என்று படுகிறது. சிறிது கவனமாக இருந்தாலே அதைச் சரிக்கட்டிக்கொண்டு போய்விடலாம். டாக்டரிடம் கேட்டு நீங்கள் உடற்பயிற்சியும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எனக்கு நல்ல பயனைத் தந்திருக்கிறது.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
18.4.1998.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 16. 04. 98 கடிதம் இப்போது கிடைத்தது. நான் 27.03.98 தேதியில் எழுதியிருந்த கடிதம் உங்களுக்குக் கிடைத்ததா?
அங்கு நீங்களும் குடும்பத்தினர்களும் சுகம் என்று நினைக்கிறேன்.
புதுமைப்பித்தன் படைப்புகளை வெளியிடும் உரிமை காலச்சுவடு பதிப்பகத்திற்குக் கிடைத்திருக்கிறது. நவீனப் பதிப்புகளாகப் படைப்புகளை வெளியிட வேண்டும் என்ற ஆசை. புதுமைப்பித்தன் எழுத்தில் ஈடுபாடு கொண்ட இலக்கிய அன்பர்களின் ஆலோசனை கூட்டம் ஒன்று நாளை நம் வீட்டில் வைத்து நடைபெறுகிறது. சுமார் பத்துப் போர் கலந்து கொள்கிறார்கள். ஆறேழு பேர் வெளியூரிலிருந்து வர இருக்கிறார்கள்.
திருமதி நாகராஜனுக்கு நான் கடிதம் எழுதி நாகராஜனின் ஆங்கில நாவலை என்னிடம் தரும்படி அவரைக் கேட்டுக்கொள்ளச் சொல்கிறேன். அதுவரையிலும் நாவல் உங்கள் கைவசம் இருக்கட்டும்.
நான் இம்மாதம் 25ஆம் தேதி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். தஞ்சையைச் சுற்றி ஒன்றிரண்டு இடங்களைப் பார்க்க ஆசை. அதன்பின் நான் மதுரை வர இருக்கிறேன். அந்த நாட்களில் நீங்கள் ஊரில் இருப்பீர்களா? நான் மதுரை வந்ததும் தொலைபேசியில் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.
நாவலில் 95% வேலை முடிந்துவிட்டது. இறுதிப் பிரதி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
சுரா
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
23.9.1998.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 19.09.98 கடிதம்.
இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். என் பணிகளும் சரிவர நடந்துகொண்டிருக்கின்றன.
எஃப்.ஆர். லீவிஸ் பற்றிய உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை எந்த அளவில் இருக்கிறது? பின்னால் அக்கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.
நாவல் பற்றிய அறிவிப்புகள் எல்லாவற்றையும் தபாலில் சேர்த்துவிட்டோம். குறிப்பில் இருந்த இங்கிதக் குறைவை உணரத் தெரியவில்லை. தாழ்ந்த சுருதியில் சொல்ல வேண்டும் என்ற எங்கள் ஆசை நடைமுறையில் நிறைவேறாது போய்விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
முன்விலைத் திட்ட அறிவிப்புகள் 25ஐ இன்று தனியாக அனுப்பியிருக்கிறேன்.
தீபாவளி வரையிலும் நான் உறுதியாக இங்கு இருப்பேன். அதற்குப் பின் ஒருவேளை நானும் கமலாவும் கஃலிபோர்னியா போகலாம். நிச்சயமில்லை. தைலா வற்புறுத்தியவண்ணம் இருக்கிறாள். அதற்கு முன் நாம் பார்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமையுமா என்பது தெரியவில்லை.
சென்ற வாரம் நானும் லல்லியும் ஹமீதும் திண்டுக்கல் போய் வசந்தி தேவியைச் சந்தித்தோம். அவரை நீண்ட பேட்டி கண்டேன்: அவருடைய பின்னணி, வகித்திருக்கும் பதவிகள், இவற்றை மனதில் கொண்டு பார்க்கும்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அருகிப் போய்விட்ட லட்சியவாதிகளில் முக்கியமானவர். கல்வித் துறையில் பெரும் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இவரைப் போன்றவர்களைத் தோற்கடிக்கும் வித்தை கற்றுக் கொள்ளாமலே நம்மவர்கள் மூளையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். கல்வித் துறையைப் பற்றி யாரிடம் பேசினாலும் நிலைமை, நம் கற்பனையைத் தாண்டிச் சீர்கெட்டு இருப்பதாகவே உணர முடிகிறது. இந்தச் சீர்கேட்டை முழுமையாகத் தொகுத்து சமூகத்தின் முன் யார் வைக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவ்வாறு வைக்கப்பட்டாலும் இப்போதைக்கு விவாதமோ மாற்றமோ உருவாகிவிடும் என்று நம்பவும் இடமில்லை.
உங்கள் தொலைபேசி எண்ணில் மாற்றமிருந்தால் தெரிவியுங்கள்.
என் அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,
சுரா.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
26.11.1998.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 17. 11. 98 கடிதம்.
சென்னையில் அச்சாகிவரும் புத்தகங்களின் மேலட்டைகளைப் பார்க்கவும் ஒரு சேர வரும் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவும் நானும் கண்ணனும் சென்னை சென்றிருந்தோம். 27. 12. 98 அன்று சென்னையில் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அழைப்பிதழைப் பின்னர் அனுப்பி வைக்கிறேன். இத்தேதியை ஒட்டி நீங்கள் சென்னையில் இருக்க நேர்ந்தால் அவசியம் கூட்டத்திற்கு வாருங்கள்.
நாவல் பிரதிகளை மொத்தமாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதிகளைத் தபாலில் சேர்ப்பதற்கு முன் சரிபார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறோம்.
சென்னையில் நாராயணன் வீட்டிற்குப் போயிருந்தோம். அரை நாள் அவர் வீட்டில் இருந்தோம். கம்ப்யூட்டரில் நாராயணன் ஏகக் காரியங்கள் செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் பொழுதைக் கழித்தது மனதிற்கு இதமாக இருந்தது.
இரண்டு வாரங்களில் நாவலைப் படித்துவிட முடியுமா? பலருக்கும் அதிக அவகாசம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். எனக்கு அசௌகரியம் ஒன்றும் இல்லை. நான் இந்த வருடம் அமெரிக்கா போவேனா என்பதே சந்தேகம். சூழல் அப்படி இருக்கிறது.
அன்புடன்,
சுரா.