எளியவர்களின் இயலாமை
திருவருட்செல்வி
(சிறுகதைகள்)
விஷால் ராஜா
விஷ்ணுபுரம் பதிப்பகம்,
1/28, நேரு நகர்,
கஸ்தூரிநாயக்கன் பாளையம்,
வடவள்ளி, கோயம்புத்தூர்-641041,
பக்.208
ரூ.280
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் விஷால் ராஜா தன்னுடைய சொந்த அடையாளத்துடன், அனுபவங்களுடன் எளியவர்களின் இயலாமைகளைக் கதைகளாக விவரிக்கிறார். இவருடைய கதைகளில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதில்லை. தங்களைத் தாங்களே தண்டித்துக்கொள்வதில்லை. ஒருவரை மற்ெறாருவர் அனுசரித்து, அரவணைத்து, சகித்துக்கொள்பவராக, கருணைமிக்கவராகத் ேதான்றுகிறார்கள். இப்படியான குணாம்சங்களுடன் கதாபாத்திரங்கள் அமைந்திருப்பது கதாசிரியரின் கதை உலகத்தின் தன்மையே இத்தகையது என அனுமானிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.
இத்தொகுப்பிலுள்ள ‘குளிர்’, ‘கடல்’, ‘தீக்கொன்றை’ ஆகிய கதைகள் முன்வைக்கும் காட்சிகள் தோல்வியை, இயலாமையை எதிர்கொள்பவர்களின் வாழ்க்கையாக அமைதியான குரலில் பதிவுசெய்திருக்கிறார். கடல் சிறுகதையில் பள்ளிச் சிறுவன் ஜான் கடற்கரைக்குச் செல்லும் ஆர்வத்தை அக்கதாபாத்திரத்தின் வழியாகத் தொடக்கியபோதிலும் அவனது பெரியம்மா மகன் யாக்கோப்பின் பிரச்சினையைக் கதை பிரதானப்படுத்துகிறது. யாக்கோப்பிற்கு என்ன பிரச்சினை, அவனை யார் அடித்தார்கள் (போலீஸ்காரர்களாகக்கூட இருக்கலாம்), என்பதை ஜான் வழியாகவோ தானாகவோ உறுதியாகவும் முடிவாகவும் கூறவில்லை. யாக்கோப்பின் இயலாமை வெடித்து டைகர் நாயைக் கற்களால் அடித்துவிரட்டுவதோடு கதை முடிகிறது. பனிக்காலக் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் பனிப்புகையைத் துடைத்துவிட்டு அவ்வழியே காணும் காட்சியைப் போன்று அங்கங்குத் துண்டுதுண்டாகத் தெரியும் இக்கதையின் சம்பவங்களின் வழியாக அக்கதாபாத்திரத் தன்மையை உணர்ந்துகொள்ள முடிகிறது. தெளிவான உறுதியான காட்சியைக் கதாசிரியர் முன்வைக்காமலிருப்பது (ஊகமாக வாசகர் மனத்தில் முடித்துக்கொள்வது) சிறப்பாகும். இக்கதாபாத்திரங்கள் சந்திக்கும் புறத்தோற்றங்களின் வழியாக வாசகர்கள் அதிர்ச்சியை உணர்ந்துகொள்ளும்படியான தருணங்கள் இக்கதைகளில் அமைந்திருக்கின்றன. பெண்ணின் வயிற்றில் பாம்பு வளரும் செய்தியும் கல்லூரியில் பயிலும் பெண் தன்னைக் காதலித்தவனால் கருவுற்றுக் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தியும் கதையின் போக்கில் இடம்பெறுகின்றன. இக்கதையின் வடிவத்திற்கு முன்மாதிரியாக அசோகமித்திரனின் ‘நடனத்திற்குப் பிறகு’ எனும் சிறுகதையைக் கூறலாம். லூசிக்கு நடந்ததை முழுமையாகக் கூறாமல் கதை சொல்லும் சிறுவனின் பார்வை வழியாக முன்நிறுத்தும் கதை.
‘திருவருட்செல்வி’ நெல்லை வள்ளியூர் கிராமத்திலிருந்து சென்னை நகரத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருக்கும் பெண்ணின் கதை. படிப்புச் செலவுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் அப்பா இறந்துவிடுகிறார். கடனை அடைக்க வேலைக்கு வரும் செல்வி தன்னுடைய அறையில் பூனைகளுடன் வாழும் சம்பவங்கள் கதையில் அடுக்கப்பட்டிருக்கின்றன. செல்வியின் பிரச்சினைகள் அனைத்தும் பின்னால் நகர்த்தப்பட்டு, பூனையின் பிரச்சினைகள் முன் வைக்கப்பட்டிருப்பதும் பூனைகளின் வழியாக அவளது வாழ்வியலையும் ஆசைகளையும் (தன் கிராமத்தை நோக்கிச் ெசல்லும், அம்மாவுடன் வாழ்வதை) சொல்லாமல் விட்டு வாசகரின் மனத்தில் உபபிரதியாக வாசிக்கச் செய்திருப்பதோடு, கதையில் எழும்பூர் ரயில் நிலையமும் பெண்கள் விடுதியும் கதாபாத்திரங்களாக இணைந்துவிடுவது கலாப்பூர்வமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
‘கிேரஸி இல்லம்’ கதையில் ஜான் தேவராஜ் என்பவருக்கு அவருடைய மனைவியையும் மகளையும் பள்ளிக்கூடத்தில் காலையில் விட்டுவிட்டு மாலையில் அழைத்து வருவதுதான் நிரந்தரமான வேலையாக இருக்கிறது. ஜானின் தகப்பனார் வாங்கித் தந்த வீட்டை விற்பதைக் குறித்த கதை. திருவருட்செல்வியில் மது அருந்தாத தகப்பனார், ஆனால் லாட்டரிச் சீட்டு வாங்குகிறார். இக்கதையில் ஜான் என்கிற தந்தை குடிகாரராக இருக்கிறார். வீட்டின் பின்பகுதியிலிருக்கும் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாட்டில்களை எடுக்கும்போது ஒவ்வொரு பாட்டிலுக்கும் இனிமையான தருணம் ஒன்றிருப்பதாக ஜான் மூலம் வாசகருக்குத் தெரியப்படுத்துகிறார் கதாசிரியர். ஜான் வேதனையில், பிரச்சினையில் குடிக்கவில்லை. பதிலாகக் குடி, அவருடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக, மாலைக்குப் பின் வரும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. (எதன்பொருட்டு என்பதற்கான விடையில்லை. தன்னுடைய ராசியில்லாத அப்பா, குளோரி என்கிற சகோதரியின் இறப்பு என எது வேண்டுமென்றாலும் இருக்கலாம்.) பூர்வீகச் சொத்தை விற்பது, அல்லது அது கையை விட்டுப்போவது துயரமானது; என்றபோதிலும் சொத்தின் பத்திரக்காகிதத்தைக்கூட ஒழுங்காக பைண்ட் செய்து வைத்திருக்கும் தகப்பனாருக்கு ஒழுங்கற்று வாழும் மகனுக்குமான சிக்கலை இக்கதை மறைமுகமாக எழுதிப் பார்க்க முயலுகிறது.
இரண்டு நீள்கதைகள் (சாட்சி, நிழலின் அசைவு) இத்தொகுப்பில் உள்ளன. ‘நிழலின் அசைவு’ பெங்களூரில் கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நான்குபேர்களின் வாழ்க்கையை ரஸ்கல் நிகோவுடனும் அவனுடைய அம்மாவுடனும் கதையாக்கி இருப்பது புதுவாசிப்பு அனுபவம். தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரமாகவே தீபனைப் பார்க்க முடிகிறது. கத்திக்கும் நெருப்புக்கும் இடையே இயல்பாகவும் லாவகமாகவும் புழங்கும் கதாபாத்திரத்தைப் போல, விஷால் ராஜாவின் மொழி. தஸ்தாயெவ்ஸ்கிக்கு நேர்மாறாக ஜோர்டன் பீட்டர்சனைப் படிக்கும் ரகுவின் வழியாக ஐடி பணியாளர்களின் வாசிப்பு உலகத்தை அறியச் செய்கிறார். தன்னுடைய அறையில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று நம்பும் ஒருவனுக்கும் இந்த உலகத்தை விமர்சிப்பதற்கு முன் தன்னை, வீட்டைச் சுத்தமாக்க வேண்டும் என்று நம்புபவனுக்கும் இடையிலான மன உலகத்தை விஷால் ராஜா சுவாரஸ்யமாக எழுதுகிறார். இக்கதையின் உலகமும் மொழியும் புதிய அனுபவத்தைத் தருவதைப் போல் திருவருட்செல்வி, கிரேஸி இல்லம் உள்ளிட்ட கதைகள் வாசகர்களுக்குத் தருவதில்லை. ஒருவேளை இதற்குமுன் தமிழ்ச் சிறுகதைகளில் கிறித்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகள் அழுத்தமான தாக்கங்களை ஏற்கெனவே உருவாக்கியிருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம். அதேசமயத்தில் இவருடைய கதைகளில் தரவுகளும் நம்பகத்தன்மைகளும் தகவல்களாகத் தங்கிவிடாமல் வெறும் விவரணையாக மாறிவிடாமல் கலாப்பூர்வமாகத் திரண்டெழுந்து வாசிப்பிற்கு உற்சாகத்தைத் தருகின்றன. இத்தொகுப்பிலுள்ள கதைகள் அதுசார்ந்த கதாபாத்திரங்கள், நிலங்கள் குறிப்பிட்ட வகையாக இல்லாமல் பல்ேவறு மனிதர்களை அடையாளப்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
மின்னஞ்சல்: ssenthilkumar.writter@gmail.com