சாதனையை மறைக்கும் வேதனைகள்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தை (பபாசி) முதலில் பாராட்டியாக வேண்டும். சென்னையில் 47ஆவது புத்தகக் காட்சியை அது நடத்தி முடித்திருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடப்பதுண்டு என்றாலும் சென்னை, கொல்கத்தா தவிர வேறு எந்த நகரத்திலும் தொடர்ச்சியாக நடப்பதில்லை. சுனாமி, பெருமழை, இடப் பற்றாக்குறை, கோவிட் பெருந்தொற்று எனப் பல்வேறு தடைகள் வந்தபோதிலும் விடாமல் வருடாந்தரப் புத்தகக் காட்சியை பபாசி நடத்திவருகிறது. சென்னைப் புத்தகக் காட்சி மாபெரும் விழாவாக மாறியிருக்கிறது. பல்வேறு பதிப்பகங்களின் வளர்ச்சிக்கும் எழுத்தாளர்கள் பரவலான கவனம் பெறுவதற்கும் வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்தித்துக்கொள்வதற்குமான களமாக இது உருப்பெற்றிருக்கிறது. பபாசியின் இந்தச் செயல்பாடு தமிழ்ப் பதிப்புலகிற்குப் புரிந்துவரும் அளப்பரிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இத்தகைய பணியை ஆற்றிவரும் பபாசிக்கும் அதற்குப் பல வகைகளிலும் ஒத்துழைத்து ஊக்கமளித்துவரும் தமிழக அரசுக்கும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது.
சென்னையைத் தவிர தருமபுரி, மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த புத்தகக் காட்சிகள் தற்போது அரசின் முன்னெடுப்பு காரணமாக எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் பபாசி நேரடியாகவும் முழுப் பொறுப்பேற்றும் கண்காட்சிகளை நடத்துவதில்லை என்பதால் சென்னைப் புத்தகக் காட்சி ஒன்றுதான் பபாசியின் மிக முக்கியமான, மிகப்பெரிய ஒரே செயல்பாடு என்று சொல்லலாம். இந்தப் பின்னணியில் இந்தச் செயல்பாட்டை மதிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
எந்தச் செயல்பாட்டையும் அதன் பயனர்களின் பார்வையில் காணும்போதுதான் அதன் சாதக பாதகங்கள் துல்லியமாக வெளிப்படும். எனவே சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்து விற்பனைசெய்துவரும் நான்கு பயனர்களிடம் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய அவர்களுடைய கருத்தைக் கேட்டு இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். அவர்களும் மேலும் பல பதிப்பாளர்கள்/விற்பனையாளர்களும் தெரிவிக்கும் கருத்துகள் பபாசிக்கோ சென்னைப் புத்தகக் காட்சிக்கோ பெருமை சேர்ப்பவையாக இல்லை என்பதுடன் பெருமளவில் கவலை தரக்கூடியவையாகவும் உள்ளன.
ஒவ்வொரு பதிப்பாளருக்கும் அவர் விரும்பும் அளவில் இடம் ஒதுக்குவது, கண்காட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வாசகர்கள் தாங்கள் விரும்பும் அரங்கிற்கு எளிதாகச் செல்ல வழிசெய்வது என அந்தக் கருத்துகளைச் சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம். கண்காட்சியின் தொடக்க நாட்களில் பெய்த மழைக்குத் தாக்குப்பிடிக்காமல் பல அரங்கங்களில் கூரைகள் ஒழுகிப் புத்தகங்கள் நாசமான சோகக்கதை தனி.
கணிசமான அளவிலும் வகைமையிலும் புத்தகங்கள் இல்லாத பதிப்பாளர்கள் வாசகர்கள் வருவதில்லை எனப் புலம்புவதைப் புறக்கணித்துவிடலாம். கணிசமான தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டு, அத்தனை நூல்களையும் வாசகர்களின் பார்வைக்கு வைக்க விரும்பும் பதிப்பாளர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய அளவில் இடம் ஒதுக்குவது உலகம் முழுவதிலும் நடக்கும் புத்தகச் சந்தைகளில் கடைப்பிடிக்கும் நடைமுறை. பபாசியோ பெரிய கடைகள், பெரிய பதிப்பகங்கள் ஆகியவை தொடர்பாகப் பெரும் ஒவ்வாமையைக் கொண்டுள்ளது. சிறிய பதிப்பகங்களை ஆதரிப்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தொடங்கி வளர்ந்துவரும் எந்தச் சிறிய பதிப்பகமும் உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை என்பதோடு கண்காட்சியில் அவற்றுக்கு இடமளிப்பதும் மிக அரிதாகவே இருந்துவருகிறது. ஏற்கெனவே நிலைபெற்ற பதிப்பகங்களுக்கான மையமாகவே பபாசி செயல்பட்டுவருகிறது.
அனைத்து விதமான பதிப்பகங்களுக்கும் உரிய இடமளித்து ஆதரவளிப்பதுதான் விற்பனையாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்குமான சங்கத்தின் இயல்பான செயல்முறையாக இருக்க முடியும். எங்கே செல்ல வேண்டும் என்பதைப் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்கும் வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அமைப்பாளர்கள் அல்ல. பதிப்பகங்களின் விற்பனையைப் பெருக்குவதற்காக நடத்தப்படும் கண்காட்சி இவ்விஷயத்தில் காட்டும் அணுகுமுறை அதன் அடிப்படை நோக்கத்திற்கே முரணாக உள்ளது.
பதிப்பாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பதிலும் உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் அரங்குகளை ஒதுக்குவதிலும் சீரான முறைமையோ வெளிப்படைத்தன்மையோ கடைப்பிடிக்கப்படுவதில்லை. தொடர்ந்து காத்திரமாகச் செயல்பட்டுவரும் பதிப்பகங்கள் இதனால் பாதிக்கப்படுவதும் அவர்களுடைய குரல்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும் பபாசி நிர்வாகத்தின் அவலமான விளைவுகள். அரங்கு ஒதுக்கீட்டிற்காகக் கிட்டத்தட்டப் பிச்சையெடுப்பதுபோல இறைஞ்சும் நிலைக்கு முக்கியமான சில பதிப்பகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
அரங்கு அமைக்கும் பதிப்பாளர்களிடம் கணிசமான கட்டணம் வசூலிக்கும் பபாசிக்குக் கடந்த சில ஆண்டுகளாக அரசிடமிருந்தும் பெருமளவில் நிதியுதவி கிடைத்துவருகிறது. இவ்வளவு பணம் இருந்தும் மழை ஒழுகும் கூரைகள், நடப்பவர்களைத் தட்டிவிடும் பாதைகள், புழுக்கம், சுத்தமும் சுகாதாரமும் அற்ற கழிப்பறைகள் எனக் கண்காட்சியின் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பது குறித்துப் பலமுறை பலரும் உரக்கக் குரலெழுப்பினாலும் குண்டூசியால் குத்தப்பட்ட டைனோசர்போல பபாசி அசைந்துகொடுக்காமல் இருக்கிறது. பதிப்பாளர்களும் வாசகர்களும் கொஞ்சம் வசதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தகச் சந்தையில் கலந்துகொள்ளக் கூடாது என்பதில் பபாசிக்கு ஏன் இவ்வளவு அக்கறையென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்த ஆண்டு மழையால் பல்வேறு அரங்குகளில் நூல்கள் நனைந்து நாசமானதைத் தடுக்கவோ, மழையால் பாதிக்கப்பட்ட பதிப்பகங்கள் இழப்பீடு பெறுவதற்கோ அமைப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எக்கச்சக்கமாகப் பணம் கட்டி அரங்கை எடுத்திருந்த பதிப்பகங்கள் கிட்டத்தட்ட அனாதைகளைப் போலப் பரிதவித்தன. மழை நின்ற பிறகு, பெரும்பாலான வரிசைகளில் கடுமையான புழுக்கம் நிலவியது. ஓரளவு காற்றோட்டமாக இருந்த கடைசி வரிசையில் காற்றுடன் கழிவறை மணமும் சேர்ந்து வந்தது.
கிட்டத்தட்ட ஆயிரம் அரங்குகள் கொண்ட புத்தகச் சந்தையில் வாசகர்கள் குறிப்பிட்டதொரு பதிப்பகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு உதவுவதற்கான எந்த ஏற்பாடும் சந்தையில் இல்லை. அரங்க எண்ணை அறிந்திருந்தாலும் எந்த வரிசை என்பதை அறியாமல் அந்த எண்ணைக் கண்டுபிடிப்பது லாட்டரிப் பரிசுபோன்ற நிகழ்வு. அகர வரிசைப்படி அரங்குகளின் பெயர், வரிசை எண், அரங்க எண் ஆகியவை கொண்ட அறிவிப்பையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிடும் பொறுப்பு தன்னுடையது அல்ல என பபாசி நினைப்பதாகத் தெரிகிறது. பழனியப்பா பிரதர்ஸ்போன்ற சில பதிப்பகங்கள் தாமாக முன்வந்து இந்தச் சேவையைச் செய்தன. ஜே. உமாமகேஸ்வரன் என்னும் மென்பொருள் பொறியாளர் புத்தகச் சந்தைக்கான தெளிவான, எளிய கையேட்டினை வடிவமைத்துத் தன் முகநூலில் பதிவிட்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம்கூட பபாசிக்குத் தோன்றவில்லை. அதன் இணையதளத்தில் அரங்குகளின் பட்டியல் வரிசை, எண் ஆகியவற்றுடன் அகர வரிசைப்படி உள்ளது. ஆனால் அதைப் பதிவிறக்கம் செய்யும் வசதியோ வேண்டிய பதிப்பகத்தைத் தேடும் வசதியோ இல்லை. வாசகர்கள் தாங்கள் விரும்பும் அரங்குகளுக்கு, குறிப்பாகப் பெரிய அரங்குகளுக்குப் போய்விடக் கூடாது என்னும் நோக்கிலேயே பபாசி செயல்படுகிறது எனப் பதிப்பாளர்கள் கூறுவதில் சற்றும் மிகையில்லை.
பபாசியின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கக்கூடிய அதன் பொதுக்குழுக் கூட்டத்தை உப்புப்பெறாத விவகாரங்களை முன்னிட்டுக் கூச்சல் எழுப்புபவர்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். எடுத்துக் காட்டாக பொன் விழா, வைர விழா முதலானவற்றைக் கண்ட பதிப்பகங்களைக் கௌரவிப்பது குறித்த ‘விவாத’த்தில் ஆண்டுகளைக் கணக்கிடுவது பதிப்பாளரை வைத்தா பதிப்பகத்தை வைத்தா என்னும் அற்புதமான கேள்வி ஒரு மணிநேரம் கடுங்கூச்சல்களுக்கு நடுவே 2023 பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நெடுநாட்களாகப் பணம் தராத ஒப்பந்ததாரரை எப்படிக் கையாள்வது என்பதைக் குறித்து அடுத்த ஒரு மணிநேரம் கூச்சல்கள் எழுந்தன. இப்படிப் பல அத்தியாவசியங்களைப் பற்றிய விவாதங்களுக்கு நடுவில் புத்தகச் சந்தைபோன்ற அற்ப விஷயங்களை விவாதிக்க முடியாமல்போனது. சந்தை குறித்துத் தங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க ஒரு சில பதிப்பாளர்களுக்கேனும் வாய்ப்பளிக்கும் நடைமுறையோ அதுகுறித்த சிந்தனையோ பபாசியில் இல்லாதது அது தொழில்சார் ஒழுங்கு அமையப்பெறாத அமைப்பாக இருப்பதைக் காட்டுகிறது.
சென்னைப் புத்தகக் காட்சி என்னும் மாபெரும் நிகழ்வைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ச்சியாக நடத்திவரும் பபாசியின் சாதனையை மங்கச்செய்யும் கிரகணமாக இந்தப் பிரச்சினைகள் வடிவமெடுத்து வேதனை தருகின்றன. இந்த வேதனையைக் குறைத்துச் சாதனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே இந்த விமர்சனங்களின் நோக்கம். இந்தத் தலையங்கமும் டைனோசரின் வாலைக் கடித்த இன்னொரு எறும்பாக முடிந்துவிடக்கூடும்.
எனினும் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் குரலெழுப்பிக்கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம். பபாசியின் அடைபட்ட காதுகள் என்றேனும் ஒருநாள் திறக்கும் என்னும் நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை உரக்கக் குரலெழுப்பியிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கும் களம் அமைத்துத் தந்திருக்கிறோம். பபாசியின் காதுகள் திறக்காவிட்டாலும் தமிழ்ப் பதிப்புலகிற்குப் பல வகைகளிலும் ஒத்துழைத்துவரும் அரசாங்கத்தின் காதுகளில் இது விழலாம், மாற்றம் நிகழலாம் என்று நம்ப இடமிருக்கிறது.