புதியன புனையும் கலைஞன்
ஐரோப்பியத் தத்துவ, இலக்கியக் கோட்பாடுகளின் வரவிற்குப் பிறகு தமிழில் குறிப்பிட்ட சிறுசிறு இடைவெளிகளில் புனைவு எழுத்துகளின் தன்மை மாறிக்கொண்டு வந்திருக்கிறது. வாசிப்பின் வெளி விரிந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். தொழில் வகைமை சார்ந்து அந்தந்தத் தொழில் செய்கிறவர்கள் அதிகமாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அது அனுபவத் திரட்சியாகவும் ஜீவனுடையதாகவும் இருக்கிறது. சமீபத்திய எழுத்தாளர்களிடம் இருக்கும் இவ்விதப் போக்கு இதுவரை சொல்லப்படாத, சொல்ல விரும்பாத நுவல்பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதோடு அதற்கு ஓர் இலக்கியத் தகுதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
மரபார்ந்த விஷயங்களின் மீது விருப்புக்கொண்டவர்கள் நவீனத்தை ஏற்பதில் தயங்கினாலும் அவர்களுமே மரபுக்கும் நவீனத்திற்கும் இடையில் ஏதோ ஒரு வினைப்பாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அது பெரும்பாலும் வடிவம், நுவல்பொருள் சார்ந்து மரபின் பெருமிதங்களை விதந்தோதுவதாகவோ, நவீனத்தின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்வதாகவோ, மரபை நவீனத்துவத்தோடு பொருத்தி நீட்சி பெறுவதாகவோ இருக்கிறது. ஒருகாலத்தில் பொதுமரபு நிலையில் இருந்த அது இன