பாவலரேறு ச. பாலசுந்தரனார்: கருங்கல் சிற்பி பேராசிரியரான கதை
“மரபு வழிதான்
அவரைப் பிசைந்து பிசைந்து
புலமை வடிவத்தைச் சமைத்தெடுத்தது;
அவரோ
மரபைப் பிசைந்து
புதுமைகளைப் படைத்துக் கொடுத்தார்!”
பாவலரேறு ச. பாலசுந்தரனாரைக் குறித்து அவரது மாணவர் கவிஞர் தமிழன்பன் எழுதிய வரிகள் இவை. நவீன இலக்கிய வாசிப்பின் விளைவால் ‘பாரம்பரியமான புலவர்களின் மனோநிலையிலிருந்து விலகியவர்’ என்பார் அறிஞர் பொ. வேல்சாமி. மரபிலும் நவீனத்திலும் புலமைத்துவம் கொண்ட தமிழறிஞராகத் திகழ்ந்தவர் பாலசுந்தரனார். தொன்னூலாம் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சிக் காண்டிகையுரை எழுதியவர், ‘தென்னூ’லில் சிறுகதை, புதினம், ஹைகூ போன்ற புத்திலக்கிய வடிவங்களுக்கும் இலக்கணம் வகுத்திருப்பது வியப்பளிக்கிறது. கோவை பாடிய வாயால் பாவை மட்டுமல்ல பாப்‘பாவை’யும் பாட முடியும் என்பதைத் தம் மழலைத் தேனில் நிரூபித்தவர். கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கண நூலாசிரியர், இலக்கண உரையாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர், அகராதியியல் அறிஞர் என்று தமிழ்க் கல்விப் புலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க பல்வேறு பணிகள் ஆற்றிய