கருத்துரிமைக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’
நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் திரையரங்கில் வெளியானது. பின்பு நெட்ப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியானபோது அத்திரைப்படம் இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாகவும் ராமர், சீதையைத் தவறான முறையில் சித்திரித்துக் காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. கூடவே அத்திரைப்படத்தைத் தயாரித்த ஜீ தமிழ் நிறுவனம் ஆர்எஸ்எஸ்ஸின் இணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்திடம் மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளது. சர்ச்சையை அடுத்து நயன்தாரா விடுத்துள்ள அறிக்கை, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று தொடங்குகிறது. இதுவரை எந்த அறிக்கையிலும் நயன்தாரா இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதில்லை. எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம், எத்தகைய சூழ்நிலையில் நெட்ப்ளிக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது என்பதை உணர்த்தும் அடையாளம் இது. ஆட்சேபணைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுப் படம் வெளியிடப்படும் எனப் படக்குழுவும் அறிவித்திருக்கிறது.
இந்த நேரத்தில் இங்கு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. தணிக்கைத் துறை, படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டு உரிமை, சகிப்பின்மை போன்றவை.
படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் தணிக்கைக் குழுவின் முறையான சான்றிதழைப் பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு அடிப்படைவாத வெகுஜன அமைப்பு, சில தனிமனிதர்கள் ஆகியோரின் புகாரின் பேரில் ஓடிடி தளத்தில் படம் நீக்கப்பட்டிருப்பது படைப்புச் சுதந்திரத்தின் மீதான வடுவாகப் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு 1918ஆம் ஆண்டுகளில் திரைப்படத் தணிக்கைச் சட்டங்கள் காலனித்துவ பிரிட்டிஷ் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன் நோக்கம் காலனிய அரசுக்கு எதிரான மனப்பான்மையை வெளிப்படுத்தும் வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கண்காணித்து வரையறுத்துத் தணிக்கை செய்வதாகும். பிற்பாடான காலத்தில் இந்திய சுதந்திரம், காலனிய அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் கூத்துகள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை வரையறுத்துத் தணிக்கைச் செய்வதாகயிருந்தது. இந்திய விடுதலையின் பின்னர் 1952இல் திரைப்பட தணிக்கைச் சட்டம் உருவானது. அதன் பின்னணியில் ஒழுக்கத்தை மீறாத, ஆபாசமற்ற உடல் அசைவுகள், காட்சிப்படுத்தல்கள், மத, சாதி, இனங்களைப் புண்படுத்துதல் போன்ற அடிப்படைகளில் தணிக்கைத் துறை திரைப்படங்களைத் தணிக்கை செய்தன. இன்றுவரைக்கும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வன்முறை, சமூக விரோதச் செயல்கள் , குற்றச் செயலைத் தூண்டும் காட்சிகள், வசனங்களைக் கட்டுப்படுத்துதல், குழந்தைகள் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், அங்கவீனர்கள் துஷ்பிரயோகம் போன்றவற்றை ஊக்குவிக்கும் காட்சிகள், வசனங்களைக் கட்டுப்படுத்துதல், போதையை நியாயப்படுத்தும் காட்சிகள், மனித உணர்வுகளில் ஆபாசம், சீரழிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்; இன, மத , சாதிக் குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள், வார்த்தைகள், வகுப்புவாத, அறிவியல் விரோத,தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் காட்சிகள், இந்தியாவின் இறையாண்மை, மாநிலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தும் காட்சிகளைத் தணிக்கைச் செய்தல்; பொது ஒழுங்கைக் கேள்விக்குட்படுத்தும், ஆபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் ஒரு தனிநபரையோ அல்லது தனிநபர்களின் அமைப்பையோ அவதூறு செய்வது, நீதிமன்ற அவமதிப்புக் காட்சிகள், வார்த்தைகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற விஷயங்களில் குழுவின் அங்கத்தினர்களைக் கொண்டு தணிக்கை செய்வது தணிக்கைக் குழுவின் செயல்பாடாய் இருந்து வருகிறது.
தணிக்கைத் துறைமீது கருத்து, படைப்பு சார்ந்த விஷயங்களில் சட்டாம்பிள்ளைத்தனமாகச் செயற்படுவதாக விமர்சனங்கள் உண்டு. அந்த அமைப்பு இன்றுவரைக்கும் இந்திய சினிமாக்களைக் குறுகிப் புரிந்துகொள்ளவும் சுதந்திரமான சிந்தனைக்குத் தடையுண்டாக்கும், படைப்பாளியின் சுதந்திரத்தை முடக்கும் ஓர் அமைப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பன்மைத்துவ அம்சங்களையும் அதற்குள் ஊடாடியிருக்கும் ஜனநாயகக் கூறுகளையும் கணக்கில்கொண்டே தணிக்கைக் குழுவின் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டிய தேவையும் உள்ளது. சிறுபான்மைப் பண்பாடு, மதம் போன்றவற்றில் தார்மீகமும் பொறுப்புமின்றிச் செயற்படும் படைப்புகளில் தணிக்கைக் குழுவின் இருப்பையும் அவசியத்தையும் உணர முடிகிறது. இன்றுவரை இந்திய நிலத்தின் இந்தப் பல்வேறு நில, பண்பாடுகளைக் காப்பாற்றிவைத்துக்கொண்டிருப்பது பன்மைத்துவ ஜனநாயகம்தான். ஆனால் இங்கு தொடர்ந்து நிகழ்வது சில தரப்புகளின் மனம் புண்பட்டுவிட்ட புலம்பல்கள். சமீபகாலங்களில் இக்கூச்சல் சற்று அதிகமாகியிருக்கிறது. காஷ்மீர் பைல்ஸ், கேரளா டைரீஸ் போன்ற திரைப்படத்தை சினிமாவாகப் பார்க்க வேண்டும் என்று கூறிய தரப்புகளே இன்று அன்னபூரணிக்குக் கொதித்துப் போயிருக்கின்றன.
படைப்புச் சுதந்திரமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும்
மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான படைப்பு, வெளிப்பாட்டுச் சுதந்திரம், உரிமைகள் போன்றவற்றின் மேல் தொடர்ந்து இதுபோலான அத்துமீறல்கள் நிகழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. வெளியிடுவதற்கான அனுமதியை அரசு அளித்தபிறகும் ஓடிடி தளமானது ஒரு அரசியல் அமைப்பு, சில தனிமனிதர்களின் குற்றச்சாட்டின் பேரில் திரைப்படத்தைத் தன்னிச்சையாக நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. அரசியல் அமைப்பின் செயல்பாடுகளுக்கும் அவற்றின் நோக்கங்களுக்கும் ஓடிடி தளங்கள் இடம் அளிப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்றே கருத முடிகிறது.
கூடவே படக்குழுவினரின் முடிவு தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கியிருக்கிறது. தணிக்கைக் குழு அளித்திருக்கும் சான்றிதழுக்குப் பின்பும் படத்தை நெட்ப்ளிக்ஸ் தளம் நீக்கியிருப்பதை இந்திய தணிக்கைத் துறையை அது அவமதித்திருக்கிறது என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. தணிக்கைத் துறையின் இருப்பையும் தேவையையும் ஓடிடி தளம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையைப் படைப்புச் சுதந்திரத்தின்மேல் ஏற்றப்பட்டிருக்கிற இன்னொரு அழுத்தமாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.
சினிமா, நூல்கள் மீதான தடைகள், நீக்கங்கள் போன்ற சகிப்பின்மையற்ற சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிபடுத்துகின்றன. இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பான மதச்சார்பின்மை அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறான மிரட்டல்கள், புகார்கள் போன்றவற்றில் தீவிரமான உரையாடல்களும் நெறிமுறைகளும் செயல்திட்டங்களும் அவசியம். காவல்துறையும் நீதிமன்றங்களும் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்புகளும் விழித்துக்கொள்வதும் இன்றியமையாதது. கருத்து, வெளிப்பாட்டு உரிமை போன்ற பிரச்சினைகளில் தனியார் அமைப்புகளின் செயற்பாடுகளில் அரசும் காவல்துறையும் தெளிவான நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற தான்தோன்றித்தனமான கட்டுப்பாடுகள், மீறல்கள் குறித்த விரிவான உரையாடல்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புகள் தனிமனிதர்களின் கூச்சல்களுக்குப் படைப்புகள் ஆளாகும் தருணங்களில் அதை நிவர்த்தி செய்வதற்கான அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட வேண்டியதும் அவசியமாகிறது. இன்னுமொருமுறை அழுத்திச் சொல்ல வேண்டிய விஷயம்: இது கண்டனத்திற்குரியது; இந்தியாவின் முதுகெலும்பை இது முறிக்கக்கூடியது என்பதைத்தான்.
மின்னஞ்சல்: chenthuxe@gmail.com