இளங்கோவனுக்கும் மாலனுக்கும்
சீ. இளங்கோவன் எதிர்வினைக்கு விளக்கம்:
பெரியாரை முதன்மைப்படுத்த வேண்டி இராஜாஜி பற்றிப் பல தவறான தகவல்களை எழுதியுள்ளதாக இளங்கோவன் எழுதுகிறார்.
1. பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது “நாயக்கரே, காங்கிரசை விட்டுப் போகாதீர்கள். கல்லுடன் மோதாதீர்கள். தலை போய்விடும்” என்று எச்சரித்து அவரைக் காங்கிரஸிலேயே தக்கவைக்க இராஜாஜி விரும்பினார். கல்லில் மோதினால் தேங்காய் மட்டுமல்ல தலையும் உடையும் என்பதுதான் பூவுலக எதார்த்தம். எதார்த்தம் நன்கு அறிந்தவர் இராஜாஜி. ஆனால் அதைத் தன் மண்டைச் சுரப்பால் மாற்றிக் காட்டினார் பெரியார். தலை உடைந்ததா, கல் நொறுங்கியதா என்பது 1967இல் மக்களுக்குத் தெரிந்தது” என்று எழுதியிருந்தேன். 1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
இக்கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய இருவரும் தவறாமல் இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் தோல்விக்குப் பெரியார் காரணம் அல்ல என்கிற பொருள்படும்படி கருத்துகளைக் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் என்கிற கல் உடைந்தது என்று நான் குறிப்பிட்டிருக்க இருவருமே அது பெரியாரால்தான் நிகழ்ந்தது என்று நான் சொல்வதாகக் கருதியுள்ளனர். ஆக இருவருமே கல் உடைந்தது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். அந்தக் கல் யாரால் உடைந்தது என்பது பற்றித்தான் பிரச்சினை. இராஜாஜியால் உடைந்தது என்று இருவருமே கருதுகின்றனர். காங்கிரஸ் என்கிற நீண்ட காலமாக உருவான ஒரு கல்லை ஒரு நீண்ட கால எதிர்ப்புப் பிரசாரத்தின் மூலமாகவே உடைக்க முடியும். தேர்தல் ஒரு உடனடிக் காரணம், அவ்வளவுதான். பெரியாரின் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் இயலாது.
2. பெரியார் - மணியம்மை திருமணம்
மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வதுபற்றிப் பெரியார் தன்னிடம் ஆலோசனை கேட்டபோது இராஜாஜி பதில் அளித்தார். இராஜாஜியின் கருத்தை ஏற்காமல் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார் என்று நான் எழுதியிருந்தேன். இதற்கான ஆதாரமாக, இராஜாஜியின் கடித வரிகளைக் குறிப்பிட்டிருந்தேன். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் ‘மணியம்மை திருமணம்’ என்கிற நூலில் அக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
“இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம் என்று அறிவுரை தந்திருந்ததோடு முப்பது வயதுப் பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்தபோதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால் பின் அது தகராறுகளுக்கும் மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங் களுக்கும்தான் காரணமாகும்” என்றும் கருத்துச் சொல்லியிருந்தார்.
இராஜாஜி சொன்னதாக ராஜ்மோகன் காந்தி எழுதியதைக் காட்டி இவர் இக்கருத்தை மறுக்கிறார். எழுத்து, எழுத்தாக இருக்கிற ஒரு கடிதம் சரியான சான்றா? ஒருவர் சொன்னதாக மற்றொருவர் எழுதியது சரியான சான்றா?
3) இராஜாஜி மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கும் எந்தத் தேர்தலிலும் நின்றதில்லை என்று சொல்லி யிருந்தேன். இக்கருத்தைப் பட்ட தாரிகள் தொகுதியில் இராஜாஜி போட்டியிட்டதைச் சுட்டி மறுக் கிறார். மயிலாப்பூர் பட்டதாரிகள் வாக்களிப்பதற்கும் மக்கள் வாக்களிப் பதற்கும் வேறுபாடு இல்லையா?
4). சென்னை மாகாண சங்கம் எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.
1917ஆம் ஆண்டு அது தொடங்கப் பட்டது என்பதை அவரே ஆர். முத்துக்குமாரின் நூலிலிருந்து எடுத்து எழுதுகிறார். என்னைத்தான் நம்பவில்லை அவரையுமா? சென்னை மாகாண சங்கம் (Madras Presidency Association) பற்றி மேலும் தெரிந்துகொள்ள திருவிக வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தாலே போதும்.
எல்லாச் செய்திகளையும் மாத, நாள் இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளைக் கொண்டே தெரிந்து கொள்ள இயலாது. பத்திரிகைகளில் வருபவை பெரும்பான்மையும் செய்தி விமர்சனங்கள்; செய்திகள் அல்ல. செய்திகளுக்கு நூல்களைத் தான் அதிகம் நாட வேண்டியுள்ளது.
5) சேரன்மாதேவி குருகுலம் தொடர்பாக சுவையான ஒரு உரையாடலைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த உரையாடலைத் தான் படித்ததில்லை, அதனால் அது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறார். அதோடு என் கற்பனை என்று சந்தேகமும் படுகிறார்.
“ஸ்ரீமான் வ.வே.சு.ஐயர் அவர்கள் மறுபடி 5000 ரூபாய் காங்கிரஸிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது நானும் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை அவர்களும் கண்டிப்பாய்ப் பணம் கொடுக்கக் கூடாது. முன் கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது என்று சொல்லி அங்கு நடக்கும் சில கொடுமைகளை எடுத்துச் சொன்னோம். ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள், நான் அப்படிச் செய்வேனா? அந்த இடம் நிரம்பவும் வைதீகர்கள் நிறைந்துள்ள இடமானதாலும், சமையல் செய்கிறவர்கள் ஒப்புக்கொள்ளாததாலும் இவ்வித வித்தியாசங்கள் இனிக் கொஞ்ச நாளைக்கு இருக்கும்; சீக்கிரம் மாற்றிவிடுகிறேன். அதுவரையில் நானும் சாதம் சாப்பிடுவதில்லை; அதற்காகத்தான் நிலக்கடலை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வரும்போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ‘நீங்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் நாயக்கர் சொல்லுகிற ஆட்சேபணை தீர்ந்து போகுமா? இவ்வளவு தூரம் இவர்கள் சொல்லும்படி வைத்துக் கொள்ளக் கூடாது’ என்றார் (குடிஅரசு, 12 ஜூன் 1925).
இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கண்ட உரையாடலை நான் எழுதினேன். கற்பனை உரையாடல் எழுதும் ஆற்றல் எனக்கு இருந்திருந்தால் ஒரு பிரபல கட்சியின் ஐ.டி. விங்கில் பணி செய்துகொண்டிருப்பேன்.
முழு விவரத்திற்குச் சேரன்மாதேவி குருகுலம் பற்றி ஒரு நூல் வந்துள்ளது; அது காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும்.
6) வைக்கம் சத்தியாகிரகத்திற்குத் தமிழகத் தலைவர்களை அனுப்புமாறு ஜார்ஜ் ஜோசப், இராஜாஜிக்கு ஏன் எழுத வேண்டும்? தலைவர்களை அனுப்ப முடியாது என்று இராஜாஜி பதில் அனுப்பியிருந்தால் அவற்றை வெளியிடலாம் என்று சவால் விடுகிறார். வைக்கம் போராட்டம் என்கிற நூலில் கடிதத்தை நான் வெளியிட்டு நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வைக்கம் போராட்டம் நூலை நான் எழுதியது என்று வேறு குறிப்பிடுகிறார். கேள்விப்பட்டுள்ளார் போலும்.
நூல் படிக்கும் பழக்கம் இல்லையென்றால் அடுத்து விளக்கத்தில் அக்கடித விவரம் உள்ளது. அங்கு படித்துக் கொள்ளலாம்.
1967 தேர்தலில் சுதந்திரா கட்சி தோற்கவில்லை; அது சில இடங்களையும் பெற்றது என்பதை சொல்ல வரும்போது அது ஆறேழு இடங்களைப் பெற்றது என்று குறித்திருந்தேன். ஆறாகவும் இருக்கலாம், ஏழாகவும் இருக்கலாம். 20 ஆகவும் இருக்கலாம். சதவீத கணக்கின் போதும் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைபற்றிப் பேசும்போதும் துல்லியமாகச் சொல்ல வேண்டும். சுதந்திரா கட்சி பூஜ்யமாகவில்லை; அதுவும் சில இடங்களைப் பெற்றது என்பதுதான் நான் உணர்த்த விரும்பியது. அதற்கு ஆறேழு என்ற சொல் போதும் என்று நினைத்தேன். அது ஒரு குற்றமாகப்படுகிறது இவருக்கு.
அதுபோலவே ‘ஜன சங்கம் (சோ)’ எனக் குறித்தது ஜனசங்கத்தை அடையாளப்படுத்த மட்டுமே. சோவை அடையாளப்படுத்த அல்ல. இதிலும் ஜன சங்கத்துக்குத் தலைவர் சோ இல்லையே என்கிறார்.
மற்ற சில கருத்துகள் வேண்டாத பெண்டாட்டியின் கை, கால் பற்றிய பழைய பழமொழியை நினைவுபடுத்துபவை.
•
மாலன் எதிர்வினைக்கான விளக்கம்:
முன்னவரை ஒப்பிட மாலன் நாகரீகமாக எதிர்வினை யாற்றியுள்ளார்.
1) “தலை உடைந்ததா, கல் நொறுங்கியதா என்பது
1967இல் மக்களுக்குத் தெரிந்தது” என்று காங்கிரசின் தோல்வியைக் கல் உடைந்ததாகக் குறிப்பிட்டு நான் எழுதியிருந்தேன்.
‘கல் உடைவதற்குக்’ காரணம் பெரியார் அல்ல என்பது மாலன் கருத்து . இராஜாஜி திமுகவுடன் வைத்துக் கொண்ட தேர்தல் கூட்டணியே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று அவர் வாதிடுகிறார். பெரியார் ஆதரித்தும்கூடக் காங்கிரசைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அதை விவரிக்கலாம். கல் உடைந்தது என்பதில் அவருக்குக் கருத்து வேறுபாடு இல்லை, கல் உடைந்ததற்கு யார் காரணம் என்பது பற்றியே அவரது கவலை. கூடுதலாக மண்டை உடையவில்லை என்பதும் பெறப்படுகிறது.
திமுகவுடன் இராஜாஜி வைத்த தேர்தல் கூட்டணியே காங்கிரஸின் தோல்விக்கு முழுக் காரணமென்றால் அடுத்தடுத்த தேர்தல்களில் வேறு வேறு கூட்டணிகளில் நின்று காங்கிரஸ் வென்றிருக்கலாம். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. காங்கிரஸின் அறவலு வீழ்ந்து விட்டதுதான் அடிப்படைக் காரணம். அறவலு வீழ்ச்சிக்குப் பெரியாரின் நீண்ட காலப் பிரச்சாரம் காரணம் என்பது என் துணிபு.
திமுக, அதிமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் தேர்தல் கூட்டணியைக் காரணமாகக் காட்டலாம். ஒரு கூட்டணியில் தோல்வி அடைந்தவர்கள், மறு தேர்தலில் வேறு கூட்டணியோடு வெற்றிபெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் அப்படி அல்ல. எனவே 1967 தேர்தல் கூட்டணியை மட்டும் காங்கிரஸின் தோல்விக்குக் காரணமாகக் கருதிவிட இயலாது.
2) “பார்ப்பான் ஒழியணும்” என்று இறுதி உரையில் பெரியார் குறிப்பிட்டதை எடுத்துப் பேசுகிறார்.
பேச்சை எழுத்து வடிவமாக்கி வெளியிடப்பட்ட கட்டுரையைச் சான்றாகக் காட்டுகிறார். பெரியார் குறிப்பிடுவது பார்ப்பனியத்தை, அதுவும் குறிப்பாக மேலாதிக்கம் செலுத்தும் பார்ப்பனியத்தைத்தான். மனிதர்கள் (அவர்கள் யாராக இருந்தாலும்) அழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் கருதியிருப்பார் என்று கருத எந்த முகாந்திரமுமில்லை.
3) “தீண்டாமை உட்பட சமூகச் சீர்கேடுகளை நீக்குவது இராஜாஜிக்கு முன்னுரிமை அம்சங்கள் அல்ல” என்ற வரியைக் கண்டதும் திடுக்கிட்டேன் என்று மாலன் குறிப்பிடுகிறார்.
அரசியல் விடுதலையை ஒப்பிட முன்னுரிமை அம்சங்கள் அல்ல என்றுதான் இவ்வரியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வைக்கம் போராட்டத்தில் அதன் மூளைபோல விளங்கிய ஜார்ஜ் ஜோசப், கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படும் சூழலில் போராட்டத்தைக் கொண்டு செலுத்துவதற்கு காந்தி, இராஜாஜி, பெரியார் ஆகியோருக்குத் தலைவர்களை அனுப்பச்சொல்லிக் கடிதம் எழுதுகிறார். காந்தி வைக்கம் போராட்டத்தை அகில இந்திய இயக்கமாக்க விரும்பாததால் தலைவர்களை அனுப்ப இயலாது என்று கூறிவிடுகிறார். இராஜாஜி பின்வரும் கடிதத்தை ஜார்ஜ் ஜோசப்புக்கு எழுதுகிறார்.
“இங்கிருந்துவரும் முக்கியஸ்தர்களான ஊழியர்களைத் திருவாங்கூர் சத்தியாகிரக இயக்கத்திற்கு தள்ளிவிட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. தீண்டாமையை ஒழிக்க வேண்டியது முக்கியம்தான். ஆனால் வைக்கம் ரஸ்தாவில் உங்களுடைய இயக்கம் வெற்றி அடைவதன் பலனாகத் தாழ்ந்த வகுப்பினர் செல்ல அனுமதிக்கப்படுவதால் தீண்டாமைப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை.
தீண்டாமை விஷயத்தில் பல சங்கடங்கள் இருந்து வருகின்றன. வைக்கத்தில் இந்த ரஸ்தாவைத் திறந்து விட்டாலும் மற்ற இடங்களில் திறந்துவிட வேண்டும் என்பதில்லை. அந்தப் பிரதேசத்தில் உள்ள சில இடங்களில் மூர்த்தண்யமாக வற்புறுத்தும் சமூகத்தினர் மீது உங்களுடைய இயக்கம் நடத்தப்பட்டால் அதனால் பொதுவான பலன் ஏற்படக்கூடும். ஆனால் திருவாங்கூர் அரசாங்கத்தார்மீது இந்த இயக்கத்தை நடத்துவதால் பிரயோஜனம் ஏற்படாது. இதர துறைகளில் வேலை செய்துவரும் முக்கியஸ்தர்களை இந்த வேலைக்கு இழுத்துக்கொள்வதும் சரியன்று. திருவாங்கூர் அரசாங்கத்தார் ரஸ்தாக்களில் தீண்டாதாரை அனுமதிக்காததற்காக, நீங்களும் இக்னேஷியஸ், கே.எஸ். சுப்பிரமணியம், வரதாச்சாரி, ராமசாமி நாயக்கர் முதலியோர்களும் ஒரு வருஷம் சிறையில் அடைபடுவதால் என்ன பிரயோஜனம்? கோயில்களுக்குக்கூட அவர்ணர் செல்லப் போவதில்லை. அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இந்த விஷயம் பைசலாகிவிடும் என்றும் தோன்றவில்லை. அப்படியிருக்க நீங்கள் விரும்புகிறபடி முக்கியஸ்தர்களை அங்கு அனுப்பிவிட்டால் இங்கு கதர் வேலையையே நிறுத்திவிட வேண்டி வரும். உங்களுடைய யோசனை புத்திசாலித்தனமாக இருக்கவில்லை” (சுதேசமித்திரன், 17 ஏப்ரல் 1924) என்று அந்தக் கடிதம் நீளுகிறது.
இக்கடித வரிகளிலிருந்து, வைக்கம் போராட்டத்தைவிட கதர் வேலை முக்கியம் என்று இராஜாஜி கருதுவது வெளிப்படை. தவிர இந்தக் கடிதத்தில் எங்கும் ஜார்ஜ் ஜோசப்பின் மதம் பற்றிய தகவல்கள் இல்லாததைக் கவனிக்கவும்.
இந்தக் கோரிக்கைக்கு இராஜாஜி அனுப்பிய சுருக்கமான பதில் தந்தி, பிறகு இராஜாஜி அனுப்பிய நீண்ட கடிதம் (3.4.1924), தமிழ்நாடு இதழில் (13.4.1924) ஜார்ஜ் ஜோசப் எழுதிய விளக்கம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் ’வைக்கம் போராட்டம்’ (2020) நூலில் இடம்பெற்றுள்ளன.
தீண்டாமை என்பது இந்துகளின் பிரச்சினை, எனவே அதை இந்துகள்தாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் சிரியன் கிறிஸ்தவரான ஜார்ஜ் ஜோசப் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டாம் என்று காந்தி (6.4.1924) குறிப்பிட்டார்.
ஆனால் ஜார்ஜ் ஜோசப் வைக்கம் பிரச்சனையை மதம் தொடர்பானதாகப் பார்க்காமல், குடிமக்கள் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் அந்தச் சாலையில் வரி செலுத்தும் குடி மக்கள் நடக்க அனுமதிக்க மறுக்கும் மனித உரிமைப் பிரச்சனையாகக் கருதினார். எனினும் காந்தியின் கருத்தை மதித்துப் போராட்டத்திலிருந்து விலகியிருந்தார்.
ஜார்ஜ் ஜோசப்பின் தலைவர் வேண்டி அனுப்பிய கோரிக்கையும் காந்தியின் அறிவுரையும் ஏக காலத்தில் (அதாவது 1924 ஏப்ரல் முதல் வாரத்தில்) நிகழ்ந்தவை.
தலைவர்களை ஏன் இராஜாஜி அனுப்ப மறுத்தார் என்று கருதுவதற்கு உள்ள எழுத்து ஆதாரம் சுதேசமித்திரனில் வந்த மேற்கண்ட கடிதமாகும். தவிர இராஜாஜி என்ன நினைத்துக்கொண்டு மறுத்தார் என்று பலவாறு யூகம் செய்யலாம். அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ராபின் ஜெஃப்ரி கருதுவதுபோலவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துக் கருதலாம். ஆனால் அதற்கு எழுத்து ஆதாரம் உண்டா என்று தெரியவில்லை. கிடைத்துள்ள எழுத்து ஆதாரத்தை வைத்தே என் கருத்தைக் கூறியிருக்கிறேன்.
மின்னஞ்சல்: athiy61@yahoo.co.in