சொல்வது அல்ல, சொல்லவருவதே முக்கியம்: அழகிரிசாமியின் மொழியாக்கங்கள் குறித்த ஆழமான அலசலுக்கான முன்குறிப்புகள்
சாகித்திய அகாதெமியும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியும் இணைந்து 2023, ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சாத்தூரில் நடத்திய கு. அழகிரிசாமி நூற்றாண்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவம்
அற்புதமான சிறுகதைகளை ஏராளமாகப் படைத்திருக்கும் கு. அழகிரிசாமி தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். சிறுகதைக்காகவே சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் அவர். ஆனால் மொழிபெயர்ப்பு நூல்தான் பிரசுரமான அவருடைய முதல் படைப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் அவர் மொழிபெயர்த்த ‘அமெரிக்காவிலே’ என்னும் அந்த நூல் 1950இல் வெளியானது. அப்போது அவருக்கு வயது 27. அதேபோல இதழில் பிரசுரமான அவரது முதல் கதையும் மொழிபெயர்ப்புதான்; ஆனந்த போதினியில் வெளியானது.
சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்திருக்கும் அழகிரிசாமி மொழிபெயர்ப்பாளராகவே தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியது வியப்புக்குரியது. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் வேறு யாரும் இத்தகைய தொடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மொழியாக்கத்தில் தொடங்கிப் படைப்பிலக்கிய ஆளுமையாக விரைவிலேயே வெளிப்பட்டாலும் அழகிரிசாமி தொடர்ந்து மொழியாக்கங்களில் ஈடுபட்டுவந்தார். புனைவுகள், மொழியாக்கங்கள், கட்டுரைகள், ஆளுமைச் சித்திரங்கள் எனப் பல தளங்களிலும் செயற்கரிய பங்கைச் செலுத்திய அவருடைய பரிமாணங்களில் ஒன்றான மொழிபெயர்ப்பு அவருடைய விரிவான வாசிப்பையும் மொழியாற்றலையும் தமிழ்ச் சூழல் பற்றிய அவருடைய கூர்மையான அவதானிப்பையும் ஒருசேரக் காட்டுகிறது.
புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியம் ஆகியோர்முதல் அவர்களுக்கு அடுத்து வந்த அழகிரிசாமி, தி. ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோர்வரையிலும் பெரும்பாலான எழுத்தாளர்கள் படைப்பாளிகளாக மட்டுமின்றி மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்னும் பாரதியின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு இவர்களில் பலர் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவர்கள் யாரும் பாரதியின் சொல்லைக் கேட்டுச் செய்ததாகக் கூறியதில்லை எனினும் பாரதியின் வாக்கை இங்கு நினைவுகூர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. பாரதி அடிப்படையில் லட்சியவாதி. தமிழ் மொழி, தமிழ் நாடு, இந்தியா முதலான பலவற்றைப் பற்றியும் லட்சியக் கனவுகள் கண்டவர். உலகிலுள்ள கலைச் செல்வங்களெல்லாம் தமிழிலும் கிடைக்க வேண்டும் என்னும் பேராசை கொண்டவர். அவரும் மொழியாக்கத்தில் ஈடுபட்டவர். புதுமைப்பித்தன் முதலானோர் மொழியாக்கத்தில் ஈடுபட்டபோது அவர்களை அப்பணியில் உந்தித் தள்ளிய சக்தி பணமோ புகழோ அல்ல; தமிழில் இந்த ஆக்கங்கள் வர வேண்டும் என்னும் பேராவல்தான் அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தியது. இவர்களுடைய மொழியாக்கச் செயல்பாடு பாரதியின் லட்சியவாதத்தைப் பிரதிபலிப்பதாலேயே பாரதியின் கூற்றை இங்கே குறிப்பிட்டேன். எந்தப் பலனும் எதிர்பாராமல் இவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழுக்குத் தங்கள் படைப்பின் மூலம் செழுமை சேர்த்த இவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் மூலம் அதன் பரிமாணங்களைக் கூட்டினார்கள். இந்த மரபில் வந்த லட்சியவாதி அழகிரிசாமி. அவருடைய மொழியாக்கத் தேர்வுகளையும் அதன் பின்னால் இருந்த அவருடைய அபாரமான உழைப்பையும் பார்க்கும்போது தமிழ் மொழிமீது அவருக்கிருந்த ஆழ்ந்த அக்கறையை உணர முடிகிறது.
மொழியாக்கத்தை மட்டுமே படிக்கும்போது அவருடைய மொழித்திறனை உணர முடிகிறது என்றாலும் மூல மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவருடைய அபாரமான மொழியாக்கத் திறனையும் தமிழ் வாசகர்களின் தேவை குறித்த அவருடைய நுட்பமான பார்வையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
முதலில் அவருடைய மொழிபெயர்ப்புகளின் பட்டியலைப் பார்த்துவிடலாம்.
1) அமெரிக்காவிலே, மாக்ஸிம் கார்க்கி, தமிழ்ப் புத்தகாலயம், 1950.
2) லெனினுடன் சில நாட்கள், மாக்ஸிம் கார்க்கி, தமிழ்ப் புத்தகாலயம், 1951
3) விரோதி பணியாவிட்டால்..?, மாக்ஸிம் கார்க்கி, நவயுகப் பதிப்பகம், 1952
4) யுத்தம் வேண்டாம், மாக்ஸிம் கார்க்கி, தமிழ்ப் புத்தகாலயம், 1952
5) பூலோக யாத்திரை, எம். இலின், சக்தி காரியாலயம், 1952.
6) காந்தி எழுத்துகள்
7) பல நாட்டுக் கதைகள் (14 நாடுகள்:16 கதைகள்), 1961, தமிழ்ப் புத்தகாலயம்,
8) இந்தியாவின் ஒருமைப்பாடு - சொற்பொழிவுத் திரட்டு, ராஜேந்திர பிரசாத், தகவல் ஒலிபரப்புத் துறையின் வெளியீட்டுப் பிரிவு, 1963.
9) அக்பர், லாரன்ஸ் பின்யன், தேசியப் புத்தக நிறுவனம், தில்லி, 1966.
10) அறிவியலின் எல்லைகள் - லின் பூலே, அமெரிக்க ஐக்கிய நாடுகள் தகவல் சேவை மையம், சென்னை, 1967.
இவற்றைத் தவிரப் பணியின் காரணமாக, இதழியல் கடமையாகப் பல கட்டுரைகளை அழகிரிசாமி மொழிபெயர்த்திருக்கிறார். மேலே உள்ள நூல்கள் யாவும் அழகிரிசாமி தானாகவே தேர்ந்தெடுத்துச் செய்த மொழியாக்கங்கள் என்பதால் அதிலிருந்து அவருடைய பார்வைகளையும் அணுகுமுறையையும் தொகுத்துக்கொள்ளலாம்.
அர்ப்பணிப்பு
இந்தப் பட்டியலை மேம்போக்காகப் பார்க்கும்போதே ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அழகிரிசாமி மொழிபெயர்ப்பை ஒரு வேலையாகக் கருதிச் செய்யவில்லை. கடமையாகவும் கருதிச் செய்யவில்லை. அபாரமான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் அதிகம் படிக்கும் பழக்கம்கொண்ட அவர் தான் ரசித்துப் படித்து ரசித்தவை, தன் சிந்தனையைப் பாதித்த எழுத்துக்கள், தனக்கு முக்கியமாகப் படும் சிந்தனைகள் ஆகியவை தன்னுடைய மொழியில் இருக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மொழிபெயர்த்த நூல்கள், கட்டுரைகள் அனைத்தும் தமிழுக்குப் புது வரவுகள்; புதிய செல்வங்கள். பாரதியார் சொன்ன கலைச் செல்வங்கள். அவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்னும் லட்சிய வேட்கையுடன் இதைச் செய்திருக்கிறார்.
இந்த லட்சிய வேட்கை தீவிரமானதாகவும் அந்தப் பணியைச் செய்வதற்கான அர்ப்பணிப்புணர்வு ஆழமானதாகவும் இல்லாவிட்டால் இதைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால், தமிழ்ச் சமூகம் அழகிரிசாமியைப் பார்த்து, எங்களுக்கு இதையெல்லாம் கொடு என்று கேட்கவில்லை. இதைச் செய்தால் கை நிறையப் பணம் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை யாரும் தரவில்லை. இவற்றில் பலவற்றைப் பதிப்பிக்க முடியும் என்பதற்கான குறைந்தபட்ச உத்தரவாதம்கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மொழிபெயர்ப்புகளால் புகழ் கிடைத்துவிடும் என்றும் சொல்வதற்கில்லை. வாழ்நாள் முழுவதும் எழுதி எழுதி ஓடாய்த் தேய்ந்த தீவிர எழுத்தாளர்கள் பலரையும் சந்தடியில்லாமல் விடைகொடுத்து அனுப்பிய சமூகம் தமிழ்ச் சமூகம். இந்தச் சூழலில் ஒருவர் தீவிர இலக்கியப் பரப்பில் செயல்படுவது சாகசச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதாவது எழுத்துக்கான வெளிப்பாட்டு மேடைகளும் நூல்களுக்கான சந்தைகளும் பெருகியிருக்கின்றன. ஆனால் அழகிரிசாமியின் காலத்தில் அதெல்லாம் கிடையாது. தீவிர எழுத்து என்பது கிட்டத்தட்ட ரகசியச் செயல்பாடாகவே இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அழகிரிசாமியைப் போன்றவர்கள் படைப்புத் துறையில் தீவிரமாக இயங்கியதையும் தமிழுக்குத் தங்கள் சொந்தப் படைப்பால் மட்டுமின்றி மொழிபெயர்ப்பாலும் வளம் சேர்க்க வேண்டுமென்று உழைத்ததையும் அர்ப்பணிப்பு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
அழகிரிசாமி மட்டுமின்றி அவருடைய முன்னோடிகளான புதுமைப்பித்தன், க.நா. சுப்ரமணியம் ஆகியோரும் சமகாலத்தவர்களான சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் போன்றவர்களும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். மிகச் சிறிய வட்டத்தைத் தாண்டித் தங்கள் எழுத்தோ மொழிபெயர்ப்போ சென்று சேரப்போவ்தில்லை என்பதை நன்கு அறிந்திருந்ததும் அவர்கள் இந்தக் காரியத்தில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்கள். நல்ல எழுத்தின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடும் தமிழ் பெற வேண்டிய மேன்மை குறித்த அவர்களுடைய லட்சிய வேட்கையும் ஆழமாக இருந்திராமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை.
இன்று பலரும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அதற்கான பிரசுர வாய்ப்புகளும் ஓரளவு வருமானமும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. சாகித்ய அகாடமி, இயல் விருது ஆகியவை தொடங்கிப் பலப் பல விருதுகளும் மொழியாக்கத்திற்காகக் கொடுக்கப்படுகின்றன. விருதுத் தொகைகளும் கணிசமாக இருக்கின்றன. ஆனால் அழகிரிசாமியைப் போன்றவர்களுக்கு இவை எதுவுமே கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல; இதைப் பற்றியெல்லாம் கனவுகாணவும் வாய்ப்பில்லாத நிலையே இருந்தது. அழகிரிசாமியின் மொழியாக்கங்களைப் பற்றிப் பேசும்போது முதலில் இதைத்தான் நாம் கவனித்து அங்கீகரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தேர்வுகள்
படைப்பிலக்கியம், மார்க்ஸியம்முதல் காந்தியம்வரையிலான அரசியல் சிந்தனைகள், வரலாறு, அறிவியல் எனப் பல துறைகளைத் தழுவி விரிகிறது அழகிரிசாமியின் மொழியாக்கத் தேர்வு. அமெரிக்காவிலே, லெனினுடன் சில நாட்கள், யுத்தம் வேண்டாம் ஆகிய நூல்கள் அழகிரிசாமியின் கொள்கை சார்ந்த தேர்வுகள். இவை மூன்றுமே ரஷ்யாவைச் சார்ந்த எழுத்துக்கள் என்றாலும் முழுவதும் மார்க்ஸியச் சிந்தனையைச் சார்ந்தவை அல்ல. மாக்ஸிம் கார்க்கி அமெரிக்காவைப் பற்றிய கூர்மையான சிந்தனையை முன்வைக்கிறார். மாறிவரும் உலகம் குறித்த சமகாலப் பார்வையும் எதிர்காலம் குறித்த தொலைநோக்கும் அவரிடம் காத்திரமாக இருக்கிறது. யுத்தம் வேண்டாம் என்னும் நூலிலுள்ள கட்டுரைகளும் எந்தத் தத்துவத்தையும் சாராமல் மானுடத்தின் பக்கம் நின்று பேசுகின்றன. மாக்ஸிம் கார்க்கி முன்வைக்கும் சிந்தனைகள் இன்றளவிலும் பொருத்தமானவையாக இருக்கின்றன. இத்தகைய சிந்தனைகள் தமிழில் வர வேண்டும் என்று விரும்பிய அழகிரிசாமியின் நுட்பமான வாசிப்பும் அவருடைய தேர்வும் கால எல்லைகளைக் கடந்த மாக்ஸிம் கார்க்கியின் சிந்தனைகளை மொழி எல்லைகளைத் தாண்டி நம்மிடம் கொண்டுவந்திருக்கின்றன.
சிந்தனைக் களத்தில் அழகிரிசாமியின் தேர்வுகள் இவ்வாறிருக்க, இலக்கியம் சார்ந்த மொழிபெயர்ப்புகளில் அழகிரிசாமியின் பரந்த வாசிப்பையும் இலக்கிய ரசனையையும் உணர முடிகிறது. பல நாட்டுக் கதைகள் என்னும் நூல் 14 நாடுகளைச் சேர்ந்த 16 கதைகளின் தொகுப்பு. தனது விரிந்த வாசிப்பில் பொறுக்கி எடுத்த தேர்வுகளாக அழகிரிசாமி இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் இலக்கிய வாசகருக்கு இந்தக் கதைகள் படிக்கக் கிடைக்க வேண்டும் என்னும் பேராவலில் இவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தத் தேர்வுகள் அவருடைய ரசனையையும் தமிழ்ச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கூருணர்வையும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன.
பலநாட்டுக் கதைகள் என்னும் தொகுப்பிலுள்ள கதைகளைத் தவிரப் பல அயல் நாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து இதழ்களில் வெளியிட்டிருக்கிறார் அழகிரிசாமி. பாரசீகக் கவிஞர் நிஜாம் உத்தீன் அபூ முகம்மது இல்யாஸ் யூசுப் எழுதிய லைலா- மஜ்னூன் என்ற கவிதையின் வசன உருவத்தை மொழிபெயர்த்து பிரசண்ட விகடனில் பிரசுரித்துள்ளார். சக்தி, கல்கி இதழ்களில் அழகிரிசாமியின் மொழியாக்கத்தில் பல நாட்டுக் குட்டிக் கதைகள் வெளிவந்தன. அவருடைய பெயரைக் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் வந்த இந்தக் குட்டிக் கதைகள் ஏறக்குறைய நூற்றுக்கும் மேலிருக்கும் என்று அழகிரிசாமியின் மகன் சாரங்கன் கூறியதாக அழகிரிசாமியின் நூல்களின் பதிப்பாசிரியர் பழ. அதியமான் காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
காந்தி நினைவு நிதி என்னும் அறக்கட்டளையின் சார்பில் காந்தி நூல்களைத் தொகுத்து வெளியிடுவதற்காக காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் என்ற குழு அமைக்கப்பட்டது. 1957இல் வெளிவரத் தொடங்கிய இந்தக் காந்தி நூல் தொகுதிகள் 1969இல் காந்தியின் நூற்றாண்டு முடிவதற்குள் பதினேழு தொகுதிகள் வெளிவந்தன. இந்தத் தொகுதிகளில் காந்தியின் எழுத்துக்களை மொழிபெயர்த்தவர்களில் ஒருவர் அழகிரிசாமி. போர் முதலான உலக விவகாரங்கள் குறித்த மாக்ஸிம் கார்க்கியின் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த அழகிரிசாமி, காந்தியின் சிந்தனைகளையும் தமிழுக்குக் கொண்டுவருவதற்குத் தன்னுடைய செழுமையான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆற்றிய சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தைச் செய்தி ஒலிபரப்புத் துறையின் வெளியீட்டுப் பிரிவு 1963 மே மாதம் வெளிக்கொணர்ந்தது. அந்த நூலைத் தமிழாக்கியவர் கு. அழகிரிசாமி. ஆங்கிலத்தில் Unity of India என்று அமைந்த நூலின் தலைப்பு தமிழில் ‘இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்று அமைந்தது.
மாக்ஸிம் கார்க்கி, காந்தியடிகள், ராஜேந்திர பிரசாத் என யாருடைய சிந்தனைகளாக இருந்தாலும் அவற்றைத் தெளிவான எளிய மொழியில் தந்திருக்கிறார் அழகிரிசாமி.
அணுகுமுறை
மொழியாக்கத்தில் பல வித அணுகுமுறைகள் உள்ளன. மூலத்தில் உள்ளதை அப்படியே தருவது ஒருவகை என்றால், மூலத்தில் உள்ளதைத் தழுவி அதைத் தன்னுடைய நடையில் தருவது ஒரு வகை. முதலாவதில் மூல ஆசிரியரின் உள்ளடக்கம் மட்டுமின்றி அவருடைய குரல், தொனி, உள்ளடக்கத்தின் கட்டமைப்பு ஆகியவையும் இருக்கும். மூலத்தில் உள்ள எதையும் விடாமல் கொண்டுவருவது இந்த அணுகுமுறை. உள்ளடக்கத்தை இலக்கு மொழிக்கும் அதன் சூழலுக்கும் ஏற்பத் தருவது இரண்டாவது அணுகுமுறை. இலக்கு மொழியில் அன்னியமாக உணரக்கூடிய கூறுகளைத் தவிர்த்துவிட்டு, வாசகர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழி இது. வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளவும் மூலத்தின் சாரத்தை அறியவும் இது உதவும் என்றாலும், மூல ஆசிரியரின் ஆளுமையையோ தனித்தன்மையையோ இதில் உணர முடியாது. லெவ் தல்ஸ்தோய்க்கும் வில்லியம் ஃபாக்னருக்கும் தாராசங்கர் பானர்ஜிக்கும் கதையம்சத்தைத் தவிர வேறு வித்தியாசம் எதுவும் இதில் தெரியாது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த அணுகுமுறைகளும் உள்ளன. அவற்றை விரிக்க இங்கே இடமில்லை.
அழகிரிசாமியின் அணுகுமுறை பெரிதும் முதல் வகையைச் சார்ந்தது. அவரே அதைத் தெளிவாகச் சொல்கிறார்:
“மூல ஆசிரியருடைய கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சொந்த பாஷையிலேயே மொழிபெயர்க்க வேண்டும் என்று சொல்லப்படும் மொழிபெயர்ப்பு முறை எனக்கு உசிதமாகத் தோன்றவில்லை. முடிந்த மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாசக அமைப்பையும் குரலின் ஏற்ற இறக்கங்களையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவரப் பாடுபட்டிருக்கிறேன். படிப்பதற்கு இன்னும் கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் என்பதற்காக மூல நூலை விட்டு விலகிச் செல்லும் பிற உபாயங்களை நான் கையாள விரும்பவில்லை. அழகைவிட உண்மை முக்கியம் அல்லவா?”
என்று அமெரிக்காவிலே என்னும் நூல் மொழியாக்கத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
“மொழிபெயர்க்கும் நோக்கத்துடன் இந்த நூலின் (லெனினுடன் சில நாட்கள்) ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தவர்களுக்கு இதை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமங்கள் தெரியவரும். ஆனாலும் ஆங்கில மொழிபெயர்ப்பை அடியொற்றியே இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறேன். இந்த நூலின் நடுவிலும், அடிக்குறிப்புகளிலும் ‘பிராக்கெட்டுகளுக்கு’ நடுவில் காணப்படுவன யாவும், விளக்கத்தை முன்னிட்டு நானே எழுதிச் சேர்த்தவை. மற்ற அடிக்குறிப்புகள் யாவும் ஆங்கில நூலின் பதிப்பாசிரியர் எழுதியவை’
என்று மொழிபெயர்ப்பைச் செய்த முறையை விளக்கியுள்ளார்.
தமிழ் வாசகர்களுக்கு எதைத் தர வேண்டும், அதை எப்படித் தர வேண்டும் என்பவற்றில் அழகிரிசாமிக்கு இருந்த தெளிவை இதன் மூலம் உணரலாம்.
ஒரு சோற்றுப் பதம்
ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு விரியும் அழகிரிசாமியின் மொழியாக்கங்களின் ஒரு சோற்றுப் பதமாக ஒரு சிறிய பகுதியை எடுத்துக்கொண்டு பரிசீலித்துப்பார்க்கலாம். லெனினுடன் சில நாட்கள் என்னும் கட்டுரையின் முதல் பத்தியை எடுத்துக்கொள்வோம். கார்க்கியின் மூலத்தையும் அழகிரிசாமியின் மொழியாக்கத்தையும் வரிக்கு வரி ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
Vladimir Lenin is dead
விலாடிமிர் லெனின் காலமாய்விட்டார்
என்று அழகிரிசாமி மொழிபெயர்த்திருக்கிறார். இந்த வாக்கியம் நேரடியாகவும் பொருத்தமாகவும் தமிழில் தரப்பட்டுள்ளது. அழகிரிசாமி விளாடிமிர் எனப் பொது ளகரத்தைப் பயன்படுத்தாமல் விலாடிமிர் என லகரத்தையே பயன்படுத்துகிறார். தமிழில் உள்ள ளகர, லகர, ணகர, னகர வேற்றுமைகள் எதுவும் ஐரோப்பிய மொழிகளில் கிடையாது. நாக்கை மடிக்க வேண்டிய தேவையை அம்மொழிச் சொற்கள் ஏற்படுத்துவதில்லை. எனவே வ்லாடிமிர் என்னும் ஒலியைத் தமிழ் மரபுக்கேற்ப விலாடிமிர் என அழகிரிசாமி எழுதியிருக்கிறார். அடுத்த தொடரைப் பார்க்கலாம்:
That in him the world has lost a surpassing genius, one far greater than any of his great contemporaries ; this even some of his enemies have had the courage to admit.
உலகம் அவரை இழந்ததனால், ஒரு நிகரற்ற மேதையை இழக்கும்படியாயிற்று. அவர் காலத்தில் வாழ்ந்த மேதைகளையெல்லாம்விட அவர் எவ்வளவோ பெரிய மேதாவி. இந்த உண்மையை அவருடைய விரோதிகளுங்கூடத் துணிவோடு ஒப்புக்கொண்டார்கள்.
இந்தத் தொடரை அழகிரிசாமி மூன்றாகப் பிரித்திருக்கிறார். எளிமை கருதி இப்படிப் பிரித்ததால் அந்தத் தொடரின் தொனி மாறவில்லை என்பதைக் கவனிக்கலாம். ஆங்கிலத் தொடரின் கட்டமைப்பை அப்படியே பின்பற்றினால் this even some of his enemies have had the courage to admit என்பது அவருடைய எதிரிகளில் சிலரும் இதை ஒப்புக்கொள்ளும் துணிவைப் பெற்றிருந்தார்கள் என அமையும். இப்படி எழுதுவது செயற்கையானது மட்டுமின்றி மூலத்தின் உத்தேசப் பொருளின் தொனியையும் அழுத்தத்தையும் பிரதிபலிக்கவில்லை. இந்த உண்மையை அவருடைய விரோதிகளுங்கூடத் துணிவோடு ஒப்புக்கொண்டார்கள் என அழகிரிசாமி எழுதுவது தமிழுக்கு நெருக்கமாக, இயல்பாக இருப்பதுடன் மூலத்தின் பொருளுக்கும் தொனிக்கும் விசுவாசமாக இருக்கிறது. இன்று மொழியாக்கம் செய்யும் பலர் ஆங்கில மொழியின் வாக்கியக் கட்டமைப்பை அப்படியே கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறார்கள். தானியங்கி மொழியாக்கக் கருவிகள்கூட இலக்கு மொழியின் இயல்பான நடைக்கு நெருக்கமாக மொழியாக்கம் செய்யும் காலத்தில் சிலர் மூல மொழியின் கட்டமைப்பைப் பிடித்துத் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மொழியாக்க நடையும் அந்தரத்தில் தொங்குகிறது. அழகிரிசாமி இவ்விஷயத்தில் தெளிவான அணுகுமுறையைக் கொண்டிருப்பதை இதுபோன்ற தொடர்களின் மூலம் அறிய முடிகிறது.
அடுத்த தொடர் ஆங்கிலத்தில் மூன்றரை வரிகளாக உள்ளது. அதை அழகிரிசாமி இயல்பாக மூன்று தொடர்களாகப் பிரித்திருக்கிறார்.
The following words from the conclusion of an article on Lenin, which appeared in the German bourgeois paper “ Prager Tageblatt”, an article whose dominant note is one of awe and reverence for his colossal figure: Great and terrible and beyond our comprehension, even in death, — such is Lenin,’’
லெனினைப் பற்றி, ஜெர்மன் பூர்ஷ்வாப் பத்திரிகையாகிய ப்ரேகர் டாகிப்லாட் என்பதில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
அந்தக் கட்டுரையின் அடிநாதம் லெனினுடைய மாபெரும் தோற்றப் பொலிவைக் கண்டு மதிப்பும் பிரமிப்பும் கொண்டதாகவே அமைந்திருந்தது.
அதன் இறுதி வாசகம் பின்வருமாறு: “மிகப் பெரியவர்; பயங்கரமானவர்; தம் மரணத்திலும்கூட நம்முடைய திருஷ்டியையெல்லாம் தாண்டி அப்பால் நிற்பவர் - அப்படிப்பட்டவர் லெனின்.”
Dominant note என்பதை அடிநாதம் என மொழி பெயர்க்கிறார். பிரதானமான தொனி, தூக்கலான தொனி என்ற சொற்களையும் பயன்படுத்தலாம் என்றாலும் அடிநாதம் என்னும்போது மூல ஆசிரியர் சொல்லவரும் பொருள் சேதமின்றி வெளிப்பட்டுவிடுகிறது. மொழிபெயர்ப்பில் ஒரு சொல்லின் பொருளல்ல, அது சொல்லவரும் பொருளே முக்கியம். ஒருவர் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்போது “அட ராமச்சந்திரா” என்று மற்றவர் அலுத்துக்கொண்டால் அதை மொழிபெயர்ப்பவர் அந்த அலுப்பைக் கொண்டுவர வேண்டுமே தவிர ராமச்சந்திரனை அல்ல. அதன்படி அழகிரிசாமியின் அடிநாதம் மூலத்தின் உத்தேசப் பொருளைப் பொருத்தமாகவே கொண்டுவந்துவிடுகிறது.
Colossal figure என்பதை மாபெரும் தோற்றப் பொலிவு என்று தமிழாக்குகிறார். மாபெரும் ஆளுமை எனக் கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. Terrible என்னும் சொல்லை நேரடிப் பொருளில் பயங்கரம் என்றே தருகிறார். Beyond our comprehension என்பதை நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட அல்லது நம்மால் புரிந்துகொள்ள முடியாத என்று தமிழ்ப்படுத்துவதற்குப் பதிலாக நம்முடைய திருஷ்டியையெல்லாம் தாண்டி அப்பால் நிற்பவர் என மொழிபெயர்க்கிறார். திருஷ்டி அல்லது பார்வை என்னும் சொல்லுக்குப் புறக்காட்சி சார்ந்த பார்வை மட்டுமின்றி அகப்பார்வையைச் சுட்டும் தன்மையும் உண்டு என்பதால் comprehension என்பதற்கான பொருத்தமான சொல்லாகவே இது படுகிறது. இதுபோன்ற இடங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்து மாறக்கூடியவை.
அடுத்த தொடரைப் பாருங்கள். அதை இரண்டாக உடைக்கிறார்.
It is clear that the feeling behind this article is not one of mere gloating, not the feeling which finds cynical expression in the saying that “ the corpse of an enemy always smells good ”; neither is it the feeling of relief which comes from, the departure of a great but restless spirit.
இந்தக் கட்டுரையின் உள்ளொலியானது வெறும் பிரமிப்பு மட்டுமல்ல; “விரோதியின் சவத்தில் எப்போதும் நறுமணமே வீசும்” என்பதுபோன்ற வாசகத்தில் அடங்கியிருக்கும் ஒட்டுப் பற்றில்லாத ஒருவித உணர்ச்சியையும் அந்த உள்ளொலி பிரதிபலிக்கவில்லை.
அல்லது ஓய்வொழிச்சலற்று இயங்கிய ஒரு பெரிய சக்தி ஒழிந்தது என்று எண்ணி, “நல்ல வேளை” எனச் சந்தோஷப்படும் ஒரு உணர்ச்சியும் அக்கட்டுரையில் இல்லை.
The feeling behind this article என்னும் சொற்களை இந்தக் கட்டுரையின் உள்ளொலியானது என மொழிபெயர்க்கிறார். கட்டுரைக்குப் பின்னாலுள்ள உணர்ச்சி என நேரடி மொழியாக்கமாக இருந்திருந்தாலும் பிரச்சினை இருக்காது. ஆனால் உள்ளொலி என்னும் சொல்லின் மூலம் அழகிரிசாமி மூலத்தை மீறாமல் அழகைக் கூட்டிவிடுகிறார்.
Cynical expression என்பதை ஒட்டுப் பற்றில்லாத ஒருவித உணர்ச்சி எனத் தமிழாக்குகிறார். அவநம்பிக்கை, எதிர்மறைச் சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கும் Cynical என்னும் சொல்லை ஒட்டுப் பற்றில்லாத உணர்ச்சி என்று சொல்வதன் மூலம் உணர்ச்சி நிலையில் அதன் வீரியத்தைக் கூட்டிவிடுகிறார். பல விதமாகப் பொருள் கொள்ளக்கூடிய சொற்களில் மொழிபெயர்ப்பாளர் எடுத்துக்கொள்ளக்கூடிய சுதந்திரத்தை இந்த இடத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். Cynical என்னும் சொல்லை ஒட்டுப் பற்றில்லாத உணர்ச்சி என்று சொல்வது மூலப் பொருளிலிருந்து விலகிய சொல்லாக்கம் என்று ஒருவருக்குத் தோன்றக்கூடும் என்னும் சாத்தியக்கூறையும் மறுக்க முடியாது. அவநம்பிக்கை என்று சொல்லிவிடுவது மூலத்தின் கனத்தைக் குறைத்துவிடும் என்று அழகிரிசாமி நினைத்திருக்கலாம்.
“The corpse of an enemy always smells good ” என்னும் சொலவடையை “விரோதியின் சவத்தில் எப்போதும் நறுமணமே வீசும்” என்று கிட்டத்தட்ட நேரடி மொழிபெயர்ப்பாகவே தந்துவிடுகிறார். பகைவனின் மரணம் மகிழ்ச்சியைத் தரும் என்பதே இந்தச் சொலவடை உணர்த்த விரும்பும் பொருள். ஐந்து மொழிபெயர்ப்பாளர்களிடம் இதை மொழிபெயர்க்கச் சொன்னால் இதற்கு ஐந்துவிதமான மொழியாக்கங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அழகிரிசாமி சொல்லின் நேர்ப்பொருளாகத் தந்திருப்பது வாசகரின் கற்பனையை நம்பிச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாகவே தோன்றுகிறது. இந்த ஆங்கிலச் சொலவடையைக் கேள்விப்பட்டிராதவர்களால் தமிழில் இந்தத் தொடரைப் படித்து மூலத்தின் உத்தேசப் பொருளைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமாகவே இருக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
அடுத்த தொடரில் இத்தகைய சவால்கள் எதுவும் இல்லை.
It is unmistakably the pride of humanity in a great man.
ஒரு பெரிய மனிதன் மூலமாக மனித வர்க்கம் அடைகின்ற பெருமைதான் அந்தக் கட்டுரையின் உள்ளொலியாக அமைந்திருக்கிறது.
The feeling behind this article என்னும் தொடர் மூலத்தில் இரண்டு முறை வரவில்லை. ஆனால் உள்ளொலி என்னும் சொல்லை அழகிரிசாமி இரண்டு முறை பயன்படுத்துகிறார். இந்தப் பத்தியின் முத்தாய்ப்பாக அதைப் பயன்படுத்துவதன் மூலம் மூலத்தின் செய்தியைத் தொகுத்துத் தந்துவிடுகிறார்.
கட்டுரைகளை மொழியாக்கும் அணுகுமுறை இவ்வாறு இருக்க, படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அதில் படைப்பின் குரலைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்வதை உணர முடிகிறது. சொல்லுக்குச் சொல் அல்லது வரிக்கு வரி என்பதாக மொழிபெயர்க்காமல் கதையுணர்வைத் தமிழில் கொண்டுவருவதற்கு மெனெக்கெடுகிறார். தமிழருக்கு அணுக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக மாமி என்றெல்லாம் எழுதும் அசட்டுத்தனங்கள் நிலவிவந்த காலத்தில் அந்நிய மொழியிலுள்ள படைப்பின் குரலைத் துல்லியமாகப் பிரதிபலித்து அதை எளிமையாகவும் தரும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் அழகிரிசாமி.
அழகிரிசாமியின் மொழியாக்கத்தை ஆய்ந்து பார்க்கையில் சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவருடைய மொழியாக்கத்தில் பிழையோ மிகையோ மூலத்திலிருந்து விலகும் தன்மையோ இல்லை. மூலத்தின் பொருளுக்கு விசுவாசமாக இருக்கும் அதே நேரத்தில் தமிழ் வாசகருக்குப் புரியும் விதத்தில் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக மனத்தில் இருத்திக்கொண்டிருக்கிறார். விசுவாசத்திற்குக் கூடுதல் அழுத்தம் தந்து வாசகரை அன்னியப்படுத்தவில்லை. எளிமைக்குக் கூடுதல் அழுத்தம் தந்து மூலத்திலிருந்து விலகவோ அதன் வீரியத்தைக் குறைக்கவோ செய்யவில்லை. இரண்டையும் சரிவிகிதத்தில் சமன் செய்கிறார். மொழி எல்லைகளைத் தாண்டிக் கலைச் செல்வங்களையும் சிந்தனை வளங்களையும் கொண்டுவர வேண்டும் என்னும் நோக்கமே பிரதானமாக இருக்கிறது. கடினமான இடங்களைக்கூட இலகுவாகத் தமிழில் தரும் லாவகமும் அவரிடம் வெளிப்படுகிறது. மூலத்தின் உத்தேசப் பொருளும் அதன் குரலும் பொருத்தமாகத் தமிழ் வடிவம் பெறுகின்றன. லட்சியவாதமும் நடைமுறை சார்ந்த லாவகமும் கொண்டு இரு மொழிகளுக்கிடையே பாலம் அமைக்கிறார் அழகிரிசாமி.
அழகிரிசாமியின் வெவ்வேறு மொழியாக்கங்களை எடுத்துக்கொண்டு அவருடைய தேர்வையும் அணுகுமுறையையும் மொழியாக்கத் திறனையும் அலசும்போது அவருடைய மொழியாக்க நுட்பங்களையும் அணுகுமுறையையும் மேலும் துல்லியமாக அறியலாம். அதற்கான சிறு முன்னெடுப்பாகவே இந்த ஒப்பீட்டை மேற்கொண்டிருக்கிறேன்.
சாதனை
சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் முக்கியப் பாத்திரமான ஜோசஃப் ஜேம்ஸ், மாக்ஸிம் கார்க்கியின் அமெரிக்காவிலே நூலின் மலையாள மொழியாக்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறான். நூலைப் பற்றியும் மொழிபெயர்த்த மேனனைப் பற்றியும் உற்சாகமாகப் பேசுகிறான். மலையாள எழுத்துச் சூழலைப் பற்றிய நாவலானதால் மேனனின் மொழிபெயர்ப்பைப் பற்றியதாக இந்தப் பாராட்டுரை இருந்தாலும் தமிழில் அழகிரிசாமி செய்த மொழிபெயர்ப்பைப் பற்றிய சு.ரா.வின் கருத்தின் புனைவுப் பிரதிபலிப்பாகவும் இதைக் கொள்ளலாம். அழகிரிசாமி பற்றிய நினைவோடையில் சுந்தர ராமசாமி கூறியிருப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.
“(அமெரிக்காவிலே) மொழிபெயர்ப்பைப் படித்த உடனேயே வியப்படைந்தேன். அற்புதமாக, சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். அபூர்வமான பல வார்த்தைகள் இருக்கின்றன. அந்த வார்த்தைகளுக்கெல்லாம் இணையாகத் தமிழில் புதிய சொற்களைக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறார். கொஞ்சம்கூடக் கரடுமுரடாகவே இல்லை. கடுமையான முயற்சி எடுத்துத்தான் இதை மொழிபெயர்த்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது”.
மொழிபெயர்ப்பில் அழகிரிசாமியின் தேர்வுகள், மொழியாக்கும் அணுகுமுறை, மொழியாக்கச் சவால்களை எதிர்கொண்ட விதம், தமிழ் நடை ஆகியவற்றைப் பார்க்கும்போது தமிழுக்கு வர வேண்டிய கலைச் செல்வங்கள் குறித்து அவருக்கு இருந்த அக்கறையையும் அவற்றைச் சமகால வாசகருக்கு எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு இருந்த தெளிவையும் புரிந்துகொள்ள முடிகிறது. லட்சிய உணர்வு, பலன் கருதாத அர்ப்பணிப்பு, சூழலின் தேவையை உணர்ந்த தெளிவு, இருமொழித்திறன், மூலப்பொருளில் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழ் வாசகருக்கு இணக்கமான நடையில் தரும் லாவகம் ஆகிய பண்புகள் அழகிரிசாமியின் மொழியாக்கங்களை அவருடைய பங்களிப்புகளின் முக்கியமானதொரு பரிமாணமாகப் பரிமளிக்கச் செய்கின்றன.
மின்னஞ்சல்: aravindan@kalachuvadu.com