யாருக்கானவை மனித உரிமைகள் ?
யூடியூப் ஊடகத்தில் இயங்கிவந்த சவுக்கு சங்கரைத் தமிழகக் காவல் துறை கைதுசெய்தது அண்மையில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. கைது நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல வாதங்கள் எழுகின்றன. அரசியல்வாதிகளின் மீது, குறிப்பாக ஆளுங்கட்சியினர்மீது சங்கர் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுக்கள், அவற்றை அவர் முன்வைத்த விதம், அவருடைய இதர நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள், காவல் துறையும் நீதிமன்றமும் அவரை நடத்திய விதம் ஆகியவற்றின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக சங்கர்மீது முதலில் வழக்கு தொடுக்கப்பட்டது. 294 (ஙி), 353, 509, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறை அவர்மீது வழக்குப் பதிவுசெய்தது. அதன் பிறகு அடுத்தடுத்துப் பல்வேறு பிரிவுகளிலும் அவர்மீது வழக்குத் தொடுத்தது. அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது நேர்காணல்களை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் காவல் துறை கைதுசெய்திருக்கிறது. சங்கர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டபோது அங்கிருந்து கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். நீதிமன்றக் காவலில் சங்கர் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் எஸ். கோபாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் சிறையில் சங்கர் தாக்கப்பட்டதாகவும் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கைக்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் காவலர்கள் சவுக்கு சங்கரை அழைத்துவந்தபோது அங்கிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கோயம்புத்தூர் சிறையின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது கையை உடைத்ததாகவும் தான் சிறையிலேயே கொல்லப்படலாம் என்றும் சங்கர் கூறினார்.
ஒருவர்மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான மனித உரிமைகளை வரையறுக்க முடியாது என்று அனைவருக்கும் தெரியும். மனித உரிமை ஒவ்வொருவருக்குமானது. குற்றவாளிகள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்குமானது. எத்தகைய குற்றச்சாட்டாக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத்தருவதுதான் ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட நடைமுறையாக இருக்க முடியும். கருத்துச் சுதந்திரத்துக்கான ஆதரவும் மனித உரிமைகளுக்கான கோரிக்கைகளும் அரசியல் சார்புகளையோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையோ அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இந்த விவகாரம் உள்ளது.
சவுக்கு சங்கர் ஆதாரங்களை முன்வைக்காமல் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதைக் கண்டிப்பவர்கள், இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் அவரே சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதாகவும் சொல்கிறார்கள். குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மிரட்டிப் பணம் பறிப்பது பொதுவாக இதழியலுக்கோ குறிப்பாகத் தமிழ் இதழியலுக்கோ புதிதல்ல. இதற்காக இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதில்லை. இதுவரை எந்த ஊடகவியலாளர்மீதும் வழக்கு தொடுக்கப்பட்டதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் சவுக்கு சங்கரையா ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து சங்கரைக் காவல் துறை கைதுசெய்யவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கைதை விமர்சிப்பவர்கள் ஆதரிப்பது எந்த தனிநபரையும் அல்ல. சட்டத்தையும் அதன் முறையான செயல்பாடுகளையும்தான்.
சங்கரைக் கைதுசெய்வது குறித்தும் அவர்மீதான வழக்குகள் குறித்தும் கேள்வி எழும்போது அவருடைய குற்றச் செயல்பாடுகளை முன்வைப்பது ஆபத்தானது. பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான ஒரு பெண்ணுக்கான நியாயம் வழங்குவதுபற்றிப் பேசினால் அந்தப் பெண் ஏற்கெனவே ‘களங்கமானவள்’ என்று சொல்வதற்கு ஒப்பானது இது. குறிப்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உரிய ஆதாரங்களை முன்வைத்தே எந்த வழக்கையும் தொடுக்க வேண்டும். ஒருவர்மீது எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும் அவருக்குச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை மறுக்கக் கூடாது. கைது நடவடிக்கைகள் குற்றவியல் சட்டத்தின் நடைமுறைகளின்படிதான் இருக்க வேண்டும். சவுக்கு சங்கரின் கைது விஷயத்தில் இந்தப் புள்ளிகள்தாம் இன்று முக்கியமானவை. அவருடைய கடந்த காலம், அவர்மீது சமூக ஊடகங்களில் வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுக்கள் ஆகியவை தனி விவகாரங்கள்.
சவுக்கு சங்கர் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களைப் போலத்தான் அவர்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுக்களும். இவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை முறையான விசாரணையின் மூலமாகவே நிரூபிக்க முடியும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் கடுமையானவையாக இருப்பதாலேயே அவர்மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. முறையான விசாரணையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
சங்கருக்கான உரிமைகளைப் பற்றிப் பேசுபவர்கள் அவருடைய செயல்பாடுகளை ஆதரிக்கிறார்கள் என்றும் பொருளில்லை. பெண் காவலர்கள்பற்றி சவுக்கு சங்கர் சொல்வது ஆணாதிக்கச் சிந்தனையின் வக்கிரமான வெளிப்பாடு. ஆனால் இதுகுறித்த வழக்கில் முறையான விசாரணையின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, விசாரணைச் செயல்முறையே தண்டனையாக மாற முடியாது. கைது நடவடிக்கையும் அடுத்தடுத்த வழக்குகளில் அவரைச் சிக்கவைப்பதும் விசாரணையின்றி ஓராண்டுவரை அவரைச் சிறையில் அடைக்கக்கூடிய தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்திருப்பதும் அவரை முடக்குவதற்கான நடவடிக்கைதானே தவிர, அவர்மீதான குற்றச்சாட்டுக்களுக்கான நியாயமான நடவடிக்கைகள் அல்ல. சட்டப்படி சவுக்கு சங்கர்மீது நடவடிக்கை எடுக்கும் ஆற்றலற்ற நிலையே காவல் துறையின் அத்துமீறல்களுக்குக் காரணம்.
“சவுக்கு சங்கர் காவல் துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தி யூ டியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவரைக் கோவை மத்திய சிறையில் தாக்கி, அவரது வலது கையை உடைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், அவரைப் பழிவாங்கும் நோக்கோடு கஞ்சா வைத்திருந்ததாகப் பொய் வழக்குப் போட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதோடு விடாமல் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வழக்குகள் போடுவது தமிழக அரசு மற்றும் காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்” என்று சங்கரின் கைதைக் கண்டித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை கூறுகிறது. “சவுக்கு சங்கர் மீதான காவல் துறையின் பழிவாங்கல் நடவடிக்கையின் உச்சகட்டமாகத் தற்போது அவர்மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாகப் போராடிவருகின்றன. இச்சூழலில் சவுக்கு சங்கர்மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. எஸ்.வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், அமரந்தா, சுப. உதயகுமாரன், ஹென்றி திபேன் உள்ளிட்ட 23 மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் இக்கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழகத்தின் குண்டர் சட்டம் குறித்து 2022இல் தாக்குர் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் வழக்கறிஞர் ஆர்.எஸ். அகிலா வெளியிட்ட விரிவான ஆய்வறிக்கை (லீttஜீs://ஷ்ஷ்ஷ்.tலீணீளீuக்ஷீ-யீஷீuஸீபீணீtவீஷீஸீ.ஷீக்ஷீரீ/uஜீறீஷீணீபீ/ழீuபீரீமீனீமீஸீts/1649834297_கிளீவீறீணீ%20ஸிஷி,%20றிக்ஷீமீஸ்மீஸீtவீஸ்மீ%20ஞிமீtமீஸீtவீஷீஸீs%20uஸீபீமீக்ஷீ%20ஜிணீனீவீறீ%20ழிணீபீu%20நிஷீஷீஸீபீணீs%20கிநீt%20(1).ஜீபீயீ) இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரிய சான்றுகளுடன் விரிவாகப் பேசுகிறது. தேசிய குற்ற ஆவணப் பணியகம் (ழிணீtவீஷீஸீணீறீ சிக்ஷீவீனீமீ ஸிமீநீஷீக்ஷீபீs ஙிuக்ஷீமீணீu) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு குண்டர் சட்டம் (கிநீt 14 ஷீயீ 1982 [ஜிழி நிஷீஷீஸீபீணீs கிநீt]) எந்த அளவுக்குத் தவறாகவும் அலட்சியமாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதைக் காட்டுவதாக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்ட கருத்து அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. “தடுப்புக் காவல் சட்டம் காவல் துறையினரின் குறைகளை மறைக்கும் கேடயமாக ஆகிவிட்டது” என்று குறிப்பிடும் நீதிபதி ஆனந்த், நாட்டிலேயே தடுப்புக் காவல் சட்டத்தை அதிகம் பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு தடுப்புக் காவல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அதிர்ச்சி அளிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் 2022, நவம்பரில் குறிப்பிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தகாத முறையில் கைதுசெய்யப்படுவது உறுதியாகும்பட்சத்தில் கைது நடவடிக்கைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவோம் என்றும் அது கூறியது.
எத்தகைய குற்றங்களுக்குக் கைது செய்தாக வேண்டும் என்பதைச் சட்டம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. முகமது ஜுபைர் எதிர் தில்லி மாநிலம் ழிசிஜி & ளிக்ஷீs [ரிட் மனு (கிரிமினல்) எண். 2022 279] வழக்கில், உச்ச நீதிமன்றம் கைதுசெய்வது தொடர்பான பல்வேறு அறிவுரைகளைக் கூறியுள்ளது. கைதுசெய்யும் அதிகாரத்தை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்பது அதிலொன்று. குற்றவியல் நீதிச் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் தனிநபர்களைக் கைது செய்யும் அதிகாரம் காவல் துறை அதிகாரிகளுக்கு உள்ளது என்றாலும் இந்த அதிகாரம் கட்டுப்பாடற்றது அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. கைது செய்வதற்கு முன் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 41இல் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கூறியது.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 41(1)(தீ)(வீவீ)இன்படி, ஒருவர் மேற்கொண்டு எந்தக் குற்றத்தையும் செய்யாமல் தடுக்க, கைது அவசியம் என்பதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி திருப்தி அடைய வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர் வெளியில் இருப்பதால் சாட்சியங்களை / தடயங்களைக் கலைத்துவிடக்கூடிய வாய்ப்பு, அவர் ஊரை அல்லது நாட்டை விட்டே சென்றுவிடக்கூடிய வாய்ப்பு, அவரை வெளியில் விட்டால் சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய ஆபத்து போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே கைது நடவடிக்கை அவசியம்.
சவுக்கு சங்கரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது சங்கரின் நேர்காணலை வெளியிட்ட யூ டியூப் தளத்தின் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஏன் கைதுசெய்யவில்லை என்று ஒரு நீதிபதி கேட்டதாகச் செய்தி வந்தது. குற்றம், தண்டனை, கைது ஆகியவை குறித்துக் குற்றவியல் சட்டத்தைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளுக்கு இசைவானதாக இந்தக் கருத்து இல்லை. பொதுவாகக் குற்றம்-தண்டனை பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்துகளையே நீதிபதிகள் சிலரும் பிரதிபலிப்பது கவலை தருவதாக உள்ளது.
கைது செய்வதற்கு அத்தியாவசியமாகச் சட்டம் குறிப்பிடும் காரணம் எதுவும் சவுக்கு சங்கரையும் ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் கைது செய்ததற்குப் பின்னால் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அதைக் காவல் துறை கூறவும் இல்லை. கைதுக்குப் பிறகு அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களும் பயன்படுத்தப்பட்ட சட்டங்களும் சங்கர் வெளியில் வர இயலாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன. காவல் நிலையத்தில் சங்கரைக் காவலர்கள் தாக்கியதாக எழும் குற்றச்சாட்டு கைதின் நோக்கம் குறித்த வலுவான ஐயங்களையும் எழுப்புகிறது.
குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகள் குறித்துப் பேசுவது அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களை மறுப்பதாகவோ மேற்படி நபரின் செயல்பாடுகளை ஆதரிப்பதாகவோ ஆகாது என்று திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய நிலையிலேயே மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவை குறித்த புரிதல் இருக்கிறது. அரசியல் சார்புகளின் அடிப்படையில் மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு எடுக்கும் போக்கு அறிவுஜீவிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோரின் மத்தியிலும் மலிந்திருப்பதால் மனித உரிமைகளுக்கான போராட்டம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் சங்கரின் கைதுக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கண்டனக் கூட்டறிக்கையில் பலதரப்பட்ட அறிவுஜீவிகளும் செயல்பாட்டாளர்களும் கையெழுத்திட்டிருப்பது ஆறுதலளிக்கிறது.
சவுக்கு சங்கரின் மீதான குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. ஆனால் உரிய விசாரணையின்றிச் சிறையிலேயே வைத்திருக்க வேண்டிய அளவுக்குக் கடுமை யானவை அல்ல. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்துத் தண்டனை வழங்குவதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமே தவிர தடுப்புக் காவல்போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை நாடக் கூடாது. ஸ்டான் ஸ்வாமி உள்ளிட்ட தனது அரசியல் எதிரிகளை பாஜக நடத்திய விதத்தைக் கண்டித்த பலரும் அதேபோன்ற நடவடிக்கையில் தமிழக அரசோ வேறு எந்த மாநில அரசோ ஈடுபடும்போது கண்டிக்கவும் கைதானவர்களின் பாதுகாப்புக்கும் விடுதலைக்கும் குரல்கொடுக்கவும் வேண்டும். அதுவே மனித உரிமைகள்மீதான நமது பற்றுறுதியைக் காட்டும். மனித உரிமைகளுக்கான போராட்டத்தை அரசியல் சார்புகளிலிருந்து விலக்கிவைப்பதன் மூலம்தான் அனைவருக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்ய முடியும். இல்லையேல் அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்புச் சலுகையாகவே அது நடைமுறையில் இருக்கும்.