இந்திய உளவியல் பகுப்பாய்வுத் துறையின் முன்னோடி
சுதிர் காக்கர் மறைந்துவிட்டார். இந்தியாவின் முதல் உளப் பகுப்பாய்வாளர்; உள மருத்துவர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஏனெனில் உள மருத்துவம் இன்று சிக்மண்ட் பிராய்டு வகுத்த உளப் பகுப்பாய்வு என்கிற சிகிச்சை முறையை விட்டு விலகிவிட்டது. அது நம்முடைய நவீன உள மருத்துவத்தில் பெரிய பங்கு எதுவும் வகிப்பதில்லை. இப்போது அதன்மீது மிகச் சிலரே ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்று வரலாற்று மதிப்பு உள்ளது; பயன் மதிப்பு மிகக் குறைவு. ஆனால் இன்றும் அது பல்வேறு உளச் சிக்கல்களை, உளப் போக்குகளை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இன்று அதில் ஆர்வம் காட்டுபவர்கள் இலக்கியவாதிகள்தான். உளப் பகுப்பாய்வுக்கும் இலக்கியத்திற்கும் நிறைய இணைப்புள்ளிகள் உள்ளன. சுதிர் காக்கர் உளவியல் நூல்களுடன் நாவல்களும் எழுதியுள்ளார். அவர் இலக்கியம், குறிப்பாக நாவல் உளப் பகுப்பாய்வுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகச் சொல்கிறார். ஆகவே அவர் தான் ஏழு நாவல்கள் எழுதியது இயல்பானதே என்றும் சொல்கிறார்.
இன்றைய நவீன உளவியல் மருத்துவம், மனம் என்று ஒன்று இருப்பதையே அவ்வளவாக ஒப்புக்கொள்வதில்லை. அது மூளை என்ற பருப்பொருளின் உருவக வடிவம்தான் மனம் என்று நினைக்கிறது. மூளை மனத்தின் ஊடகம் என்பதைக்கூட அது ஒப்புக்கொள்வதில்லை. உண்மையில் மன நோய்களுக்குத் தரப்படும் மருந்துகள் மூளையை நோக்கிச் செலுத்தப்படுபவை. அந்த விஷயத்தில் நவீன உளவியல் மருத்துவம் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருக்கிறது. லோபோ டோமி எனப்படும் மூளைக் கோளாறுகளை மூளையின் ஒரு பகுதியை வெட்டி அப்புறப்படுத்துவதன் மூலமாகக் குணப்படுத்திக்கொண்டிருந்த ஒரு கரட்டு வடிவிலிருந்து இப்பொழுது அது சற்று மேன்மையும் கூர்மையும் அடைந்திருக்கிறது. இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மூளையின் நரம்பு அமைப்புகள் மேலும் சற்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. மூளைக்குள் செயல்படும் உயிர் வேதியியல் வினைப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் இதற்கு வெளியே மனிதனது மனத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள நவீன உளவியல் மருத்துவம் அவ்வளவாக முயல வில்லை என்றே தோன்றுகிறது.
சிக்மண்ட் ஃபிராய்டின் உளப் பகுப்பாய்வியல் முதன்மையாக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்துதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மனிதரது அழுத்தப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலமாக, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமாக அவரது மனக்கோளாறுகள் பலவற்றைச் சரிசெய்ய முடியுமென்று ஃபிராய்டு நம்பினார். அதற்காக அவர் வகுத்தளித்த ஒரு சிகிச்சை முறை உளவியல் மருத்துவத்தில் மிகப்பெரிய ஓர் அலையாக எழும்பி ஏறக்குறைய நூறாண்டுகள் புழக்கத்தில் இருந்தது. பெரும்பாலும் மருந்துகளைச் சார்ந்திருக்கும் இன்றைய உளச் சிகிச்சை முறை வரும்வரை.
சுதிர் காக்கர் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். மூளையை அறுப்பதன் மூலமாக மூளையின் நோய்களை வெளியேற்ற முயன்றுகொண்டிருந்த அந்தக் கால முரட்டு உளவியல் மருத்துவத்தை விட உளப் பகுப்பாய்வு மனித தன்மை உடையதாகவும் நவீனமாகவும் குறைந்த அளவே கெடுதி பண்ணக் கூடியதாகவும் இருந்தது. (அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் சகோதரிவரை இந்தச் சிகிச்சை வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுத் தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள்.)
ஆகவே ஒப்பீட்டளவில் நவீன உளவியல் சிகிச்சையின் முதல் இந்திய முகவராக அவர் இருந்தார். தில்லியில் ஏறக்குறையக் கால் நூற்றாண்டு அவர் மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். பிறகு இறக்கும்வரை கோவாவில், உளப் பகுப்பாய்வியல் அலை ஓய்ந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
காக்கர் இந்தியர்கள்பற்றி, இந்தியர்களின் உளவியல்பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மதம், ஆன்மிகம், வன்முறைபோன்ற விஷயங்களில் இந்தியர்களின் அணுகுமுறைகளை ஆராய்ந்திருக்கிறார். இந்திய ஆன்மிகத்தை உளப் பகுப்பாய்வு மூலமாக அணுக முயற்சிசெய்திருக்கிறார். தனிமனிதர்களான விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காந்தி போன்றவர்களின் உளவியல் பகுப்பாய்வு வரலாறுகளை எழுதியிருக்கிறார்; புனைவுகளாகவும் எழுதியிருக்கிறார். அந்த நோக்கில் நாம் அவர்களைக் காணும்போது முற்றிலும் வேறொரு கனபரிமாணத்தை அவர்கள் அடைவதை உணர முடிகிறது. பல நேரங்களில் இது அவருக்கு எதிராகச் சென்றதும் உண்டு. தங்களது ஆதர்ச நாயகர்கள் எல்லோரையும் போல ஆசாபாசங்கள் கொண்டிருந்தவர்கள்தான் என்பதுபோன்ற தொனியில் சுதிர் காக்கர் எழுதிய உளவியல் வரலாறுகள் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை; அவை இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. வங்காளத்தில் அவருடைய புத்தகங்கள் எரிக்கப்பட்டதுண்டு. அவருடைய விளக்கங்கள் மிகவும் அடிப்படையான குறுக்கல்வாதங்கள் என விமர்சிக்கப்பட்டதுண்டு. ஆனால் அவரது புத்தகங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகுந்த வரவேற்புப் பெற்றன. உளப் பகுப்பாய்வியல் இங்குதான் மிகப் பிரபலமாக இருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் இந்த எதிர்ப்புகளை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. இன்செஸ்ட் எனப்படும் குடும்பத்திற்குள் நடக்கும் தகாத உறவுகள் பற்றிக்கூட அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்களின் முதல் பாலுறவுகள் பல அவரவர் குடும்பத்துக்குள்ளேதான் நிகழ்கின்றன. அவை எல்லாவற்றையும் தண்டிக்கப் புகுந்தால் குடும்பம் என்ற அமைப்பே இருக்காது என்றுகூட அவர் சொன்னதாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
உளப் பகுப்பாய்வுகள் குறித்த சுதிர் காக்கரின் ஆர்வம் சற்று வியப்பைத் தருவது. அவரது தந்தை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நீதிபதியாக இருந்தார். சுதிர் காக்கர் முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவுக்குச் சென்றும் பொறியியல்தான் படித்தார். பிறகு வணிக நிர்வாகம் படித்தார். பின்னர் தன்னுடைய குடும்பத்தாரின் எதிர்பார்ப்பை மீறி உளவியல் பகுப்பாய்வு படிப்பதற்காக ஜெர்மனிக்குச் சென்றார். புதிய ஃபிராய்டியர்களில் மிக முக்கியமான ஒருவரும் ஃபிராய்டின் சீடர்களில் ஒருவருமான எரிக் எரிச்சனைச் சந்தித்தது தனது வாழ்க்கைப் பாதையை மாற்றியது என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
சுதிர் காக்கர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் உளவியல் மருத்துவம் என்கிற விஷயமே ஏறக்குறைய இல்லை; உளவியல் என்கிற விஷயம் இல்லை. பல்வேறு விஷயங்களைப் போலவே அதுவும் சாமியார்களால்தான் கையாளப்பட்டுவந்தது. ஒருவருக்கு மனநிலைப் பிரச்சினை வந்தால் கோவிலுக்கோ தர்காவிற்கோதான் செல்ல வேண்டும். அதைப் பற்றி ‘Shamans, Mystics and Doctors’ என்று மிக நல்ல புத்தகம் ஒன்றை காக்கர் எழுதியிருக்கிறார்.
அதே சமயம் இரண்டு உலகப்போர்களாலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விடாது நடந்துகொண்டிருந்த பனிப்போரினால் விளைந்த யுத்தங்களினாலும் சலிப்புற்றுத் தங்களது மரபார்ந்த ஆன்மிகப் பாதைகளில் நம்பிக்கை இழந்த பெரிய இளைஞர் கூட்டம் மேற்கிலிருந்து இந்தியாவின் புதுயுகச் சாமியார்களை நோக்கிப் படையெடுத்து வந்துகொண்டிருந்தது. இந்தியா அப்போது எப்படிப்பட்ட வரலாற்றுத் தருணத்தில் இருந்தது, அதன் சூழல் எவ்வளவு குழப்பமானதாக இருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. காக்கர் இந்தியாவுக்கு வந்தபோது சராசரி இந்தியர்கள் பாலியல் உறவுகளில் மிகவும் இறுக்கமாகவும் கட்டுப்பெட்டித்தனமாகவும் இருப்பதாக நினைத்தார்; அவர்கள் இன்னமும் அப்படித்தான் இருப்பதாகவும் எண்ணுகிறார். ஆகவே சிக்மண்ட் ஃபிராய்டுக்கு இந்தியாவில் நிறையவே இடம் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் அதே சமயம் காமசூத்திரம், தாந்திரிகம் போன்ற விஷயங்களும் இந்தியப் பண்பாட்டிலிருந்து கிடைத்தவையே என்ற முரண்பாட்டை எப்படி விளக்குவது? இந்தியர்களின் இந்த இரட்டைத்தன்மையை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அவரது விமர்சகர்கள் எண்ணுகிறார்கள். இந்தியாவில் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்கக்கூடும். இது எப்பொழுதுமே மேற்கத்தியச் சிந்தனையாளர்களைக் குழப்பிவந்திருக்கிறது.
காமத்தை அடக்குவது பல உடல், மன நோய்களுக்குக் காரணம் என்ற ஃபிராய்டின் விளக்கம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திவருகிறது அல்லது வரவில்லை என்பதே சுதிர் காக்கரின் ஆயுட்காலத் தேடுதலாக இருந்தது. அவர் உளப் பகுப்பாய்வின் முன் மாதிரிகள் இந்து, பௌத்தப் புராணங்களிலும் தத்துவங்களிலும் இருந்தன என்கிறார். மனம், அதன் வளர்ச்சி நிலைகள், அதன் முழுமை, அதன் நோய்மை ஆகியவைபற்றி இந்திய மதங்கள் அல்லது தத்துவங்கள் பேசிய அளவுக்கு வேறு சிந்தனை மரபுகள் பேசவில்லை என்பது அவர் வாதமாக இருந்தது. சுதிர் காக்கரைப் போலவே நினைப்பவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
சமகால உளவியல் சிகிச்சை ஃபிராய்டுக்கு முந்திய பியாஜேயின் அறிவு, புலன் வளர்ச்சிப் படிநிலைகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இயங்குகிறது. மருந்து தேவைப்படாத தெரபி எனப்படும் சிகிச்சை முறைகள் உண்மையில் பிராய்டுக்கு முந்திய பழைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றுதான் சொல்ல வேண்டும். சில புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையான வரைபடத்தில், அணுகுமுறையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. மனிதர்களின் மூளை வளர்ச்சியை ஐ க்யூ பரிசோதனைகள் மூலமாக நிர்ணயம் செய்துவிடுவதோடு அது நின்றுவிடுகிறது. இதைத் தவிர மனிதர்களுடைய அற, ஆன்மிக, உணர்வுபூர்வ வளர்ச்சி அல்லது வளர்ச்சிப் படிநிலைகள்பற்றி அது பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. ஒரு மனிதன் உருவெளித் தோற்றங்களைக் கண்டால் அதற்கு நவீன மருத்துவத்தில் சிகிச்சை இருக்கிறது. ஆனால் அவன் 2000 அல்லது 1000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு புராணக் கதையை அல்லது ஒரு மதப் புனைவை நம்பிக் கூட்டு வன்முறையில் ஈடுபட்டால் அதனிடம் எந்தச் சிகிச்சையும் இல்லை. அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்பதற்கான விளக்கமும் இல்லை.
சுதிர் இளமையில் காந்தியை ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் தனது அத்தையுடன் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பு அவரை மிக ஆழமாகப் பாதித்தது. பலர் நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாக, காந்தியைப் பற்றி மிக உயர்வான கருத்தையே சுதிர் காக்கர் கொண்டிருந்தார். காந்தி கிறிஸ்துவுக்குச் சற்றும் குறைந்தவரல்ல என்று காக்கர் சொல்லியிருக்கிறார். காந்தியின் அரசியலை அவர் நடைமுறை ஆன்மிகம் என்றே சொல்லியிருக்கிறார். உண்மையில் தனிப்பட்ட காரியங்களில் காந்தியின் அதீதமான துறவு மனநிலையும் பொதுவெளியில் தொடர்ச்சியாகச் செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் தன்மையும் காக்கரை வியப்பில் ஆழ்த்தி உளப் பகுப்பாய்வை நோக்கித் தள்ளியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
மேலும் காந்தி, விவேகானந்தர், ராமகிருஷ்ணர் போன்றவர்கள் ஆன்மிகத்திற்கும் காமத்திற்கும் உள்ள தொடர்பைத் தொடர்ச்சியாகப் பேசியவர்கள். மூவருமே காமத்தை ஒழுங்குபடுத்துவது அல்லது அடக்குவது ஆன்மிக உயர்நலத்தை அடைவதற்கு மிக முக்கியமானது என்று கருதியவர்கள்.
சிக்மண்ட் ஃபிராய்டு காமத்தை விடுதலை செய்வதே ஒரு மனிதனின் வளர்ச்சியை முழுமையாக்கும் என்று கருதியவர். ஆகவே சுதிர் காக்கர் இவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் காமசூத்ரா எழுதிய வாத்சாயனார் பற்றியும் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவருடைய முதல் நாவல் அதுதான். தன்னுடைய 22ஆவது வயதில் அதை அவர் எழுதினார்.
முழுமையான வாழ்வைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நம்மிடையே இருக்கின்றன. அது குறித்து காந்தி, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களுக்கு ஒருவிதமான பார்வை இருந்தது; தாகூருக்கு ஒரு விதமான பார்வை இருந்தது. மேற்கே பிராய்டுக்கும் தல்ஸ்தோய்க்கும் அதுகுறித்த நேரெதிரான பார்வைகள் இருந்தன. இந்தப் பார்வைகள் அனைத்தையும் இந்தியாவில், இந்தியர்களை முன்வைத்து, இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் சுதிர் காக்கரின் பங்கு மிக முக்கியமானது.
மின்னஞ்சல்: boganath@gmail.com