பல்கலைக்கழகங்களும் பாகுபாடுகளும்
கடந்த மே மாதம் 3ஆம் தேதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 2016இல் தற்கொலை செய்துகொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறி அது தொடர்பான வழக்கை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்திருந்தது. முதலில், இதுபோன்ற பெரும் கவனம் பெற்ற வழக்குகளில், மாநில காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கை நிச்சயமாக அரசியல் தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகே சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இரு தினங்களுக்குப்பின் தம்மைச் சந்தித்த குழுவினரிடம் இந்த வழக்குக் குறித்து மறுவிசாரணை செய்யப்படும் என்று முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி உறுதியளித்திருக்கிறார். இதே காவல்துறைதான், இந்த விசாரணையினைச் செய்தாக வேண்டும். அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை இப்போதே நம்மால் சொல்லிவிட முடியும்.
ஒரு மாணவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் அகால மரணம் தரும் அதிர்ச்சியும் வேதனையும் சோர்வும் விவரிக்க முடியாதவை. இந்த வழக்கில் ரோஹித்தின் வேதனைக்குரிய தற்கொலையும் அதற்கு ஏதோ வகையில் காரணமானவர்களின் மீதான விசாரணையும் த