உறுத்தல்
ஓவியங்கள்: மணிவண்ணன்
திருப்பரங்குன்றத்தில் மாமாவின் பேத்திக்குக் கல்யாணம். மாமா என்றால் தாய்மாமா. அம்மாவின் ஒரே தம்பி. அவர் இறந்து நான்கு வருஷங்களாகிவிட்டன. மாமாவுடைய மகன் மணி ஞாபகமாகக் கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தான். பத்திரிகை, ஒரு பக்கம் மஞ்சள் கலரிலும் மறுபக்கம் ரோஸ் கலரிலும் இருக்கும். வழமையான, சம்பிரதாயப்படியான ஆர்ட் பேப்பரில் அடிக்கப்பட்டிருந்தது. தெற்கே உள்ளவர்கள்தான் இந்த மாதிரியான வண்ண ஆர்ட் பேப்பரில் இன்னமும் கல்யாணப் பத்திரிகைகளை அடிக்கிறார்கள். அந்தப் பேப்பருக்கென்று ஒரு மணம்கூட உண்டு. கூரியர்காரன் கொடுத்துவிட்டுப் போன கவரைப் பிரித்ததும் முதலில் நாகராஜனுக்கு அதை எடுத்து முகர்ந்து பார்க்கத்தான் தோன்றிற்று. பிறகுதான் பத்திரிகையைப் பிரித்துப் படித்தான்.
மணி, நாகராஜனுக்கு மைத்துனன் முறை. போன வாரம் ஒரு நா