எந்த நாள் காண்பேன் இனி?
சில கையறுநிலைக் கட்டுரைகள் எழுதிய துண்டு; எழுதவந்த இந்த ஐம்பதாண்டுக் காலத்தில், எங்களுக்குக் கற்பித்தவர், என்னை வழி நடத்தியவர், அறிவுறுத்தியவர், ஆதரித்தவர் மரணங்களின்போது. ஆனால் அவரெலாம் மூத்தோர். அஃதோர் மனச்சமாதானம். பதினாறு ஆண்டுகள் முன்பு, பன்னிரண்டு ஆண்டுகள் இளைய என் தம்பியருள் ஒருவன் அகாலமாய்ப் போனபோது அதுவோர் ஆயுட்கால அதிர்ச்சி. எனது தந்தை இறந்து போனதற்கு ஒப்பான சாவு அது.
கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இந்திரசித்து வதைப்படலம் இலக்குவனால் தலை கொய்யப்பட்டு, முண்டமாகக் கிடந்த இந்திரசித்தனின் உடலை, கூற்றையும் ஆடல் கொண்ட இராவணன், மடிமேல் கிடத்திக்கொண்டு புலம்பும் காட்சி:
“சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன், நேரிழை ஒருத்தி நீரால்.
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?” என்பது இராவணன் ஏக்கம்.
இராவணன், தனக்கு இந்திரசித்தன் செய்திருக்கக்கூடிய ஈமக்கடன்களையெல்லாம் உன்னி உன்னி, ஏங்கி ஏங்கி, தானே அவனுக்குச்