சத்திய சோதனை
ஓவியங்கள்: மணிவண்ணன்
அலுவலகத்திற்குள் தான் நுழைந்ததும் ராமமூர்த்தியின் முகம் மாறியதை சாம்பசிவன் கவனித்தான். தான் வந்திருக்க வேண்டிய நேரத்திற்கு ஒரு மணிநேரம் பிந்தி வந்திருப்பதும் ஒரு மணிநேரத்திற்கு முன்பு மிக முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்தது என்பதும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. வயிற்றிலிருந்து குடல் சற்று மேலே ஏறி நெஞ்சைக் கலக்கிவிட்டு மீண்டும் கீழே இறங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. மனதில் கலவரமும் குற்ற உணர்ச்சியும் சூழ்ந்துகொண்டன. சிறிது நேரத்திற்கு முன்பிருந்த மனநினைவும் காற்றில் பறப்பதுபோன்ற உணர்வும் போன இடம் தெரியவில்லை. ராமமூர்த்தியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவனால் தன்னைக் கேள்வி கேட்க முடியாது. கண்டனம் தெரிவிக்கவோ கண்டிக்கவோ முடியாது. என்ன சாம்பு, நீயே இப்படிச் செய்தால் நான் எங்கே போவது என்பதுப