தீண்டாமை ஒழிப்பில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்
திருச்செங்கோடு ஆசிரமத்தில் காந்தி தங்கியிருந்த குடில்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை இராஜாஜி 1925ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி தோற்றுவித்தார். வரும் ஆண்டு இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு. இந்த ஆசிரமத்தின் பணிகள் குறித்த செய்திகள் அதிகம் தொகுக்கப்படவில்லை. அதற்கான சிறு முயற்சியே இக்கட்டுரை.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து மகாத்மா காந்தி தொகுப்பு நூல்கள், ஹரிஜன் இதழ்கள் வாயிலாகப் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஆர்வமூட்டக் கூடிய பல தகவல்கள் கிடைக்கின்றன.
‘ஹரிஜன்’ தொகுதி ஐந்தில் (அக்டோபர், 9, 1937) 293ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ள தகவல்கள்:
ஆசிரம வளாகத்தில் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. இருபது மாணவர்கள் பயில்கிறார்கள். இது தொடங்கப்பட்டதிலிருந்து ஆசிரம உறுப்பினரான பட்டதாரி ஆசிரியர் ஒருவர் பொறுப்பில் செயல்பட்டுவந்தது.
தற்போது அவர், 1936ஆம் ஆண்டு மத்தியில் மதராஸுக்குப் பயிற்சிக்காகச் சென்றிருப்பதால், பயிற்சி பெற்ற ஹரிஜன ஆசிரியர் ஒருவர் தற்போது பொறுப்பில் இருக்கிறார். இதுவரை பள்ளி நிர்வகிப்பிற்காக 581-4-2 ரூபாய் (ரூபாய், பைசா, அணா) செலவழிக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்தில் நடக்கும் பள்ளியைத் தவிர பல்வேறு கிராமங்களிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தக் கிராமங்களின் விவரங்கள்: 1. புல்லம்பட்டி 2. மணியனூர் 3. வைரம்பாளையம். 4. கொக்கலை, 5. சின்னதம்பி பாளையம். கடைசிக் கிராமத்தில் இருந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் பள்ளி நீண்ட காலம் நடைபெறவில்லை. அதற்கு முந்தைய கொக்கலை கிராமப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், அங்கு சாதி இந்துக்களால் நடத்தப்படும் பள்ளியிலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டனர்.
இந்தக் காலகட்டத்தில் மிஷினரிகளும் அவர்களது மதமாற்றச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கினர்.
மேட்டுப்பாளையத்தில் கோவில் ஒன்று chapelஆக மாற்றப்பட்டு விட்டதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் ஆரவாரம் ஏற்பட்டதைக் கவனித்திருக்கலாம். டி.எஸ்.எஸ். ராஜனோடு இணைந்து பல்வேறு முக்கியமான ஹரிஜனக் குடியிருப்புகளுக்குச் சென்று கூட்டங்கள் போட்டு நிலைமையை விளக்கிவந்தோம்.
ஆசிரமத்தில் 1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாணவர் விடுதி ஒன்று தொடங்கப்பட்டது. டாக்டர் பி. சுப்பராயன் இலவசமாக வழங்கிய இடத்தில் இந்த விடுதி கட்டப்பட்டது. ஏறக்குறைய 790 ரூபாய் கட்டடத்துக்குச் செலவானது. இதில், டெல்லி ஹரிஜன் சேவக் சங் 500 ரூபாய் நிதியுதவி அளித்தது. எட்டு ஹரிஜன மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கூடவே, இரண்டு சாதி இந்து மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்குவதற்குக் கட்டணம் செலுத்தினர். ஒரு வருடத்திற்கான செலவு 909 ரூபாய் ஆகிறது. இந்தச் செலவில் பாதியளவைத் தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறது. 1937ஆம் ஆண்டு இங்கு 12 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
ஜே.கே. ஃபண்ட் மூலமாக மணியனூர் கிராமத்தில் நானூறு ரூபாய் செலவில் கிணறு ஒன்று வெட்டப்பட்டது. மானாம்பாளையம் கிராமத்தில் 21-8-0 ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது. என்னாப்பள்ளி கிராமத்தில் ஜே. கே. பிர்லாவின் நிதியுதவியால் நூற்றிருபத்தைந்து ரூபாய் செலவில் கிணறு ஒன்று வெட்டப்பட்டது. 1935ஆம் ஆண்டு அக்டோபரில் பாபு ராஜேந்திர பிரசாத் தமிழக சுற்றுப் பயணம் செய்தபோது அக்கிணற்றினைத் திறந்துவைத்தார்.
ஆசிரமம், அட்டயம்பட்டி கிராமத்தில் உள்ள ஹரிஜனச் சிறார்களுக்கு நெசவு கற்பிக்க 1935ஆம் ஆண்டு முதல் பத்து மாதங்களுக்கு ஹரிஜன நெசவு விற்பன்னர் ஒருவரை மாதம் பதினைந்து ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தியிருந்தது.
ஹரிஜன நலத் திட்டங்களுக்காக, இவற்றில் ஆசிரியர்கள், பயிற்சியாளர் களின் ஊதியம், கல்வி உதவித் தொகை, குழந்தைகள் நலம், கூட்டங்கள், பரப்புரை, புத்தகங்கள், ஆடைகள், ஹரிஜனங்களுக்கான ஆசிரியப் பயிற்சி, கிணறுகள் தூர்வாருதல், புதிய கிணறுகள் தோண்டுதல் ஆகியவற்றிற்காக இதுவரை 3217-11-3 ரூபாய் செலவாகியுள்ளது. (1936-37).
ஆசிரமம் நடத்தும் மருத்துவமனை பிரபலமானது. மருத்துவர் ரங்கநாதன் ‘I.C.P.S’ தொடர்ந்து அதன் பொறுப்பில் இருந்தார். 1935இல் 1771-14-8 ரூபாயும் 1936இல் 1569-7-9 ரூபாயும் 1937இல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கு 675-5-4 ரூபாயும் ஆசிரம மருத்துவமனைக்காகச் செலவிட்டுள்ளது.
தேனீ வளர்ப்பும் பல சிரமங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுகிறது. விஸ்வநாதன் ஆசிரமத்தின் தேனீ வளர்ப்பாளர். மேலும் திருச்சியைச் சேர்ந்த இருவருக்குத் தேனீ வளர்ப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விஸ்வநாதன் அகில இந்திய கிராமத் தொழில்கள் அமைப்பின் (All India Village Indus tries Association) கோரிக்கைக்கு ஏற்ப வார்தாவில் பலருக்குப் பயிற்சி அளித்தார். கூடவே, ஃபைஸ்பூர், லக்னோ ஆகிய இடங்களில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சிகளிலும் அவர் பங்குகொண்டு தேனீ வளர்ப்பு குறித்து விளக்கங்கள் வழங்கினார். ஆசிரமத்தைச் சுற்றி அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுப் பயன்பெறுகிறார்கள். ஆசிரமத்தில் இருபது தேனீ வளர்ப்புக் கூடுகள் உள்ளன. (இந்தத் தேன் கூடுகளுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. பார்வதி, லட்சுமி, நர்மதா, காவிரி என அனைத்துப் பெயர்களும் அதன் ராணித் தேனீயைச் சுட்டுவனவாய் அமைந்தது சுவாரஸ்யமானது. இது குறித்த விவரமான பதிவையும் இராஜாஜி ஹரிஜன் இதழில் செய்திருக்கிறார்).
இந்த இரண்டரை வருடங்களில் 1989-1-9 ரூபாய் அளவு நன்கொடை கிடைத்தது. ஆனால் மேற்கொண்டுவரும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இல்லை. அதோடு பயிற்சி அளிப்பதற்கான செலவினங்களும் உள்ளன. எனவே, நல்லிதயங்கள் பலர் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இராஜாஜி அதில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் செய்துவந்த நலத்திட்ட உதவிகளில் முக்கியமான ஒன்று மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவது. இது குறித்து இராஜாஜி எழுதியுள்ள ஒரு கடிதம் ‘மகாத்மா காந்தி’ தொகுப்பு நூல், தொகுதி 29, பக்கம் 49இல் காணக் கிடைத்தது.
காந்தி வருகை (1935)
“நீங்கள் யங் இந்தியா பத்திரிகையில் வேண்டுகோள் விடுத்ததனால் புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் இதுவரை 769 ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது. அதில் 225 ரூபாய் நன்கொடை மூலமாகவும் 544 ரூபாய் சபர்மதி ஆசிரமம் மூலமாகவும் கிடைத்தது. ஆசிரமத்தைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர்களுக்குச் சேவை செய்வது மாத்திரமே வரையறை. கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு ஒரு அட்டை தரப்பட்டுள்ளது. அந்த அட்டையைக் காண்பித்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆசிரமத்தில் வெள்ளைச் சோளம் தானியத்தை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை 108 குடும்பங்களைச் சேர்ந்த 344 பெரியவர்களும் 179 குழந்தைகளும் அட்டைகளைப் பெற்றிருக்கிறார்கள். கடந்த 1929, பிப்ரவரி மாதம் முதல் இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கான செலவு 1312 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டபோதும் இதுவரை 749 ரூபாய் நிதியுதவியே கிட்டியிருக்கிறது. இன்னும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான ஆதிதிராவிட மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நிச்சயமாக உதவி தேவை. அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்பதே எங்கள் அவா. ஆனால் இதனோடு சேர்ந்த மற்ற செலவினங்களுக்கு ஐயாயிரம் ரூபாயாவது தேவைப்படும். எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவில் உதவி கிடைத்தால் நலம்.”
இது இராஜாஜி காந்திக்கு அனுப்பிய தந்தியின் ஒரு பகுதி. ஆசிரமத்தின் செயல்பாடுகளில் ஒன்றை இது குறிப்பிடுகிறது.
1931 ஏப்ரலிலிருந்து 1933 மார்ச்வரையிலான காலகட்டத்தில் ஆசிரமம் மேற்கொண்ட பணிகள் குறித்து இராஜாஜி எழுதிய அறிக்கை 1933, ஏப்ரல் 20 தேதியிட்ட ஹரிஜன் இதழில் வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள்:
குழந்தைகள் நலம்: ஆசிரமத்தைச் சுற்றியுள்ள ஹரிஜனக் குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் இருமுறை குளியல் அளிக்கப்படுகிறது. ஒரு குளியல் எண்ணெய், சீயக்காயுடனும் மற்றொரு குளியல் சோப்புடனும். சில வருடங்களுக்குப் பின் ஆசிரமம் நடத்தும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பிள்ளைகளுக்கும் இப்பணி செய்யப்பட்டது.
மருத்துவ வசதி: ஆசிரமத்தில் சிறிய மருத்துவமனை தொடர்ந்து இயங்கி வருகிறது. ஹரிஜன நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாகவே மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஐந்நூறு சிறிய அறுவைச் சிகிச்சைகளும் சில பெரிய அறுவைச் சிகிச்சைகளும் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் பணிபுரியும் இரு உதவியாளர்களும் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்களே.
மதுவிலக்கு: ஆசிரமத்தின் மூலம் மதுவிலக்கு தொடர்பான பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. (ஆசிரமம் நடத்திய மதுவிலக்கு தொடர்பான விமோசனம் இதழ் குறித்து விரிவான கட்டுரை எழுதப்பட வேண்டும்.)
1930முதல் 1932வரை தொடர்ந்து மேற் கொண்ட முயற்சிகளாலும் சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கி ஊரக மறு சீரமைப்பு அமைப்போடு இணைந்து செய்த செயல்பாடுகளாலும் ஆசிரமத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிலிருந்து முற்றிலுமாக ஹரிஜனங்கள் மீண்டிருக்கிறார்கள். எனினும், அரசு மீண்டும் மதுக்கடைகளைத் திறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
பள்ளிகள்: ஆசிரமத்தில் உள்ள பள்ளியில் ஹரிஜன மாணவர்களுக்கான கல்வி முற்றிலும் இலவசம். இதைத் தவிர ஆசிரமம், சுற்றியுள்ள கிராமங்களில் ஐந்து பள்ளிகளையும் இரண்டு இரவுப் பள்ளிகளையும் நடத்திவருகிறது. இப்பள்ளிகள் அனைத்திலும் ஹரிஜன ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவிகளையும் சேர்த்து இருபதுக்கும் குறையாத மாணவர்கள் பயில்கிறார்கள்.
உதவித்தொகை: திருச்செங்கோடு பகுதியிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஹரிஜன மாணவர்கள் பதினான்கு பேருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை இந்த அறிக்கையின் காலகட்டத்தில் 172-0-0 ரூபாய்.
நிதியுதவி: பையொளி, பையனூர் கிராமங்களில் நடத்தப்படும் ஹரிஜன வித்யாலயங்களுக்கு ஆசிரமம் நிதியுதவி வழங்குகிறது. இந்த அறிக்கையின் காலகட்டப்படி அத்தொகை 2492-0-0 ரூபாய்
வீட்டு வசதி: வீடற்ற ஹரிஜனங்களுக்கு ஆசிரமம் வரிசை வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறது.
வேலைவாய்ப்பு: தோல் வாங்கிச் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து சில ஹரிஜனங்கள் செருப்பு தயாரிக்கும் வேலையைப் பெறுகிறார்கள். இது சமீபத்தில் ஆசிரமம் மேற்கொண்டிருக்கும் முயற்சி.
துணி விநியோகம்: 1931ஆம் ஆண்டு குளிர் காலத்தில் ஹரிஜனங்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் வழங்கப்பட்டன.
பொது: தீண்டாமைக்கு எதிரான ஆசிரமம் தொடங்கப்பட்டதிலிருந்து சாதி இந்துக்கள் மூலமாக நடைபெற்றுவரும் இடையூறுகள் சொல்லும் தரமன்று. ஆசிரமம் கடுமையான சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானது. பால் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களைத் தரவும்கூட அவர்கள் மறுத்துவிட்டனர். பொறுமை, தொடர் முயற்சி, நண்பர்களின் உதவியால் இவற்றைக் கடந்துவர முடிகிறது. இரண்டு ஹரிஜனக் குடும்பங்கள் ஆசிரமத்திலேயே வசிக்கின்றன.
ஆசிரமம், அருகிலுள்ள ஒரு ஹரிஜனக் குடியிருப்பின் கோயிலைத் தன் செலவில் சீரமைத்துத் தந்தது. லண்டன் மிஷன் ஆட்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐந்து கிணறுகளில் ஆசிரமம் பம்புசெட்டுகளைப் பொருத்தித் தந்திருப்பதன் மூலம் அம்மக்கள் குடிநீர் பெறுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வரவு செலவு: இந்த அறிக்கையில் கண்டிருக்கும் காலத்தில் ஆசிரமம் செலவுசெய்த தொகை 3017-1-8.( ரூபாய்- பைசா-அணா)
எனினும் ஆசிரமம் கதர் உற்பத்திச் செயல்பாட்டில் தன்னிறைவு அடைந்ததோடு செறிவான வேலை வாய்ப்பையும் நல்கியிருப்பதை இன்னொரு வரவு செலவு அறிக்கை காட்டுகிறது.
1935, ஜனவரி 1முதல் 1937, ஜூன்வரையிலான ஆசிரமச் செலவினங்கள் குறித்த அறிக்கையையும் இராஜாஜி ஹரிஜன் இதழில் பதிவிட்டிருக்கிறார். 1937, செப்டம்பர் 4ஆம் தேதியிட்ட இதழில் இது வெளியாகியுள்ளது.
இந்த வருடங்கள் வறட்சி மிகுந்த வருடங்கள். 1934ஆம் ஆண்டு மழை அளவு மிகக் குறைவாய் இருந்ததால் குடிதண்ணீருக்கே மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிட்டது.
கதர் உற்பத்தியில் ஆசிரமத்தின் வருமானம்:
1935: கதர் உற்பத்தி - 80, 952-2-0; கதர் விற்பனை - 89, 830-0-6
1936: கதர் உற்பத்தி - 76, 610-1-3; கதர் விற்பனை - 88, 988-7-3
1937: ஜூன்வரை துணி உற்பத்தி - 28, 864-1-0; கதர் விற்பனை - 37, 473-3-3
இந்தக் காலகட்டத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் 41,443-3-6. நூல் நூற்பவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் 71,596-4-0. பிளீச்சிங் செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் 3695-4-0.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் இன்றளவும் இயங்கிவருகிறது. அதன் ஆரம்ப கட்டப் பணிகள் பலவற்றை இன்று தொடரவில்லை; எனினும் தீண்டாமை ஒழிப்புக்கான முக்கியப் பணிகளை ஆற்றியதில் ஒரு வரலாற்றுச் சின்னமாக அது நிற்கிறது.
மின்னஞ்சல்: chitra.ananya@gmail.com