கசப்பின் சலிப்பு
கய்த பூவு
(நாவல்)
மலர்வதி
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்,
669 கே.பி. சாலை
நாகர்கோவில் - 1
பக். 304
ரூ. 380
மலர்வதியின் ‘கய்த பூ’ நாவல், தனிமனித அலகுகளில் ஒன்றான பெண்ணின் கதையை மையப் பாத்திரமாக்கி வாழ்க்கைப் பற்றிய சமூகப் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. ரோசா என்ற பாத்திரத்தின் மூலம் மொத்த வாழ்வையும் பார்க்க முனைந்ததும் அதிலிருந்து விலகாமல் கதை முடிவுவரை சென்றதும் நாவலின் தனித்தன்மையாகும். நாவலின் ஆரம்பம்முதல் இறுதிவரை பெண்ணின் பருவமாற்றம், அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் சம்பவங்கள், அதன் மூலம் அவள் பெறும் - இழக்கும் - கடந்து நிற்கும் வாழ்க்கைச் சித்திரங்களைச் செறிவாகக் கதையாக, சம்பவங்களாக மாற்றம் பெறச் செய்துள்ளார் நாவலாசிரியர்.
நாவல் தொட்டுச் செல்லும் குழந்தை, வளரிளம் பருவம், கன்னி, பேரிளம் பெண் என்ற பருவநிலைகளின் ஊடாக கதாபாத்திரத்தின் விருப்பங்கள், தேர்வுகள், மற்றவர்களால் பொருள்ெகாள்ளப்பட்டு, எதிர்வினையாற்றப்பட்டு அதன் மூலம் ரோசாவின் வாழ்வில் நிகழும் இழப்புகள், ேவதனைகள், அவளது ஏக்கங்கள் இப்பருவமாற்றத்தின் ஊடாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் ரோசாவின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டும் பயன்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் சேர்க்கையோ குறைதலோ இன்றி இறுதிவரை அவளுடன் பிணைந்து இருப்பதிலிருந்து அவளது உலகம் எத்தனை சிறியது என்பதை அறிந்து கடந்தால், குழந்தைப் பருவச் சோகங்கள், எதிர்பார்ப்்புகள், சிறிய சந்தோஷங்கள்; அடுத்த கட்டத்தில் காதலின் அருமை புரியாத காதலன், அக்கறையற்ற குடும்ப உறுப்பினர்கள், தன் மகளை எவ்வாறேனும் கரையேற்றத் துடிக்கும் தந்தை என இவர்களால் உருவாக்கப்படும் அவளது வாழ்க்கைச் சூழலுக்குள் வாசகர்கள் செல்லலாம்.
ரோசாவின் வாழ்க்கைசார்ந்த பார்வைகளும் விருப்பங்களும் எல்லைக்குட்பட்டவை. அவளின் ஆதர்ச விருப்பமாக அன்பான குடும்பம், காதலைப் புரிந்துகொண்டு மதிப்பளிக்கும் கணவன், குடும்பம் என்ற அமைப்பிற்காக ஆண் அரவணைக்கும் அன்பு கொண்ட உறவினர்கள் என ரோசாவின் உலகம் இருக்கிறது.
ரோசாவின் ஆதர்சமான எதிர்பார்ப்புகளும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாமல், பெரிதும் விரும்பிய காதலன் கிடைக்காமல் திருமண உறவில் நுழைய முற்படுகை யில் அங்கும் அவளுக்கு எதிர்பார்ப்புகள் கைகூடுவதில்லை என்னும் நிலையில் சம்மனசுவைப் பிதாவின் மகனாகவும் கர்த்தரைத் தனது தோழனாகவும் நினைத்து வாழ்கிறாள்.
பிச்சியக்கா, அல்லயக்கா இருவரும் வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுகிறார்கள். மல்லிகா மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வின் இடிபாடுகளிலிருந்து அணுகுபவளாக இருக்கிறாள். அவளும் ஏமாற்றம் கொண்டு மரித்துப் போவதில் அந்த மகிழ்வுக்கான நம்பிக்கையும் வேட்கையும் அழிந்துபோகின்றன. செறிவான நேரடியான கதை கூறல், வட்டார வழக்குமொழியின் லாவகம், பெண்ணின் வாழ்வை அவளது எல்லைக்குள் நின்று உணர்வுகளின் தத்தளிப்புகளைச் சொல்ல முற்பட்ட தன்மை ஆகியன இந்நாவலின் பலம்.
கதைச் சூழல், உள்ளடக்கம், கூறல் முைற, விவாதத் தன்மை போன்றவற்றில் நெகிழ்வான பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கியது நாவல் என்னும் படைப்பு வகைமை. இவற்றில் பெரும்பாலானவற்றைக் கைக்கொண்டு வெளிப்படும் நாவல்கள் சிறந்த படைப்புகளாகும். நாவலைப் புதிய களங்கள், பிரத்யேகக் களங்கள், மனித மனத்திற்கு நெருக்கடி, சமநிலை குலைவு வியப்பு அளிப்பவை என வகைப்படுத்தலாம். கய்த பூவில் கூறல் முறை சலிப்பும் சோர்வும் ஊட்டுவது குறைபாடாக அல்லாமல் அந்தச் சூழலும் ேசார்வும் சலிப்புமான வாழ்வை நமக்குள் கடத்துகிறது.
கதை என்ற ஒன்றை நாவல் என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல மிகமிக முக்கியமாக உள்ள விவாதத் தன்மையைக் கொண்டுவர நாவலில் மட்டுமே பல சாத்தியங்கள் உள்ளன. விவாதத் தன்மைக்கான சாத்தியங்கள் கய்த பூவில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு நேரடியாகப் பேசுபொருளை விவாதிப்பதனால் அது நம்முடன் மோதிப் பல்கிப் பெருகாமல் கருத்தாகவே எஞ்சுகிறது.
மிகவும் நிதானமான கதையின்போக்கு ஒரே விஷயத்தைக் கூற இரண்டு அல்லது மூன்று முறை ஒரே விதமான சம்பவங்கள் புலம்பல் மனநிலையைக் கதைக்குள் கொண்டு வருகிறது. தொடர்ச்சியாக நிகழும் பெண் பார்க்கும் சம்பவங்கள், வயது கூடுவது பற்றிய சம்பவங்கள்,ஆண் துணைவருடன் வாழாதவள், காமத்திற்கு ஏங்குபவள் என்ற மற்றவரின் நினைப்பு, கல்யாணம் ஆகாதவளிடமிருந்து ஆண்களைக் காப்பாற்ற நினைக்கும் சுற்றத்தாரின் முயற்சிகள் எனத் திரும்பத் திரும்ப கூறப்படுவது விஷயத்தின் உட்கூறுகளை உணர்த்துகிறது என்ற பொருளில் இல்லாமல் ஒரேமுறையில் அழுத்தமாகக் கலைத் தன்மை வெளிப்படாத இயலாமையாக வெளிப்படுகிறது.
தீர்மானமான முறையில் ஒரு தனிமனித வாழ்வைக் குறைந்த கல்வியறிவு, ஏழ்மை, திறன்கள் அற்ற எல்லைக்குட்பட்ட எதிர்பார்ப்புகள் கொண்ட பெண்ணின் வாழ்வில் காலம் செய்யும் மாற்றங்கள், அதன் பின்னர் அவளின் பயணம் பற்றிய நாவலாக கய்த பூவு மணக்கிறது.
மின்னஞ்சல்: sambpillai@gmail.com