துலங்குகிறார் பெரியார்
பெரியார்: அவர் ஏன் பெரியார்?
(‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்’ என்ற
ப. திருமாவேலனின் நூலுக்கான விமர்சனக் கட்டுரைகள்)
(தொ-ர்கள்): கல்யாணராமன், சீதாபதி ரகு
வெளியீடு: விப்ராஸ் பதிப்பகம்
F1 பேஸ் பார்க்,
10/27 ஆறாவது குறுக்குத் தெரு
ஷெனாய் நகர், சென்னை - 600 030
பக். 340, ரூ. 300
இது நூல் விமர்சனமல்ல. ஒரு நூலைக் குறித்துப் பேசும் விமர்சனங்களின் மீதான ஒரு பார்வை. ‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ப. திருமாவேலனின் நூலைத் தமிழின் பல்வேறு துறை வல்லுநர்களும் எடைபோட்டுப் பார்த்திருக்கும் தொகுப்பாகும்; இங்கு எழுதப்படுவது மதிப்புரைகளுக்கான மதிப்புரை.
இந்நூல் ஒரு மூல நூலின் தரவுகளை அல்லது வரலாற்றைத் தருகிறது. இதற்கான காரணம், தமிழின் பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பினரும் தத்தமது பார்வைகளில் பெரியாரின் சாதனைகளை எடுத்துரைப்பதுதான். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள்; அந்தந்தப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் என்ற கணக்கையும் மனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலம் இவர்களைச் சாதிய ஆதரவாளராகக் கருதக் கூடாது; மாறாக அவற்றின் எதிர்ப்பாளர்களாக அறியப்படுகிறார்கள்; சாதீய விலங்குகளைத் துண்டித்துக்கொண்டவர்கள். இவர்கள் பெரியாரின் வழியில் தம் வாழ்வை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சொந்த வாழ்வில் பெரியாரியம் மலர்ச்சியைக் கொடுத்திருப்பதுதான் அதன் காரணமாகும்.
பெரியாரை முன்னிட்டுச் சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. பெரியாரை மறுக்க நினைக்கிறவர்கள் அவரை இனவழியில் கன்னடராகவோ சாதீயவழியில் நாயக்கராகவோ அடையாளப்படுத்தி அவரைக் கீழிறக்க முனைகிறார்கள். ஆனால் அவரை அந்தந்த அடையாளங்களின் கீழே கன்னடர்களோ நாயக்கர்களோ கொண்டாடுவதில்லை; அந்த வெளியில் அவர் அனாமத்தாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார். தமிழர்கள் என்று சொன்னால் அதில் பிராமணர்கள் உள்ளடங்கிவிடுவதாகக் கருதிப் பெரியார் ‘ திராவிடர்’ என்ற அடையாளத்தை எடுத்துக்கொள்கிறார். சமூக உய்வுக்கான அழைப்பைப் பெரியார் எல்லாச் சமூகத்தினருக்கும் விடுப்பதுபோலவே பிராமணச் சமுதாயத்திற்கும் விடுக்கிறார். இதன்பொருட்டாக அவர் பிராமணர்களைத் தோழர்களே என்று அழைக்கிறார். இதனால் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதோரும் அவரை நேசித்துவந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
அவரைக் கடவுள் மறுப்பாளர் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கையில் அவர் தன்னை, ‘நான் நாத்திகனல்ல,’ என்று பிரகடனப்படுத்தியிருப்பது வியப்பைத் தருகிறது. இதன் மூலம், ஆன்மிக மனப்பாங்குடையோரை விலக்கிவைத்தால் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு அவர்களை அழைத்துவர முடியாமல் போய்விடலாம் என்று அவர் கருதியிருக்க வாய்ப்புள்ளது.
பெரியாரின் பிரச்சினைகள் தனிநபர்களைச் சுற்றியமையவில்லை; மாறாக ஒருவர் கொண்டிருக்கும் கருத்துகளைச் சுற்றியே அமைந்துள்ளது. இதனால்தான் தொல்காப்பியரையும் தன் விமர்சனத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார். பெரியாரை மேலும் புரிந்துகொள்வதற்குக் கால ஒழுங்கும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் பழைமைவாதிகள் தலையெடுக்கிறார்கள். அந்தப் பழைமைவாதிகள் பெரியாரைப் பழித்துரைக்கும்போது பெரியார் தானாகவே மெருகேற்றப்படுகிறார். புதிய ஆய்வுகள் உருவாகின்றன. இதை நாம் மோடியின் பத்தாண்டுக்கால ஆட்சிமுறையின்கீழே உணர்ந்திருக்கிறோம். காலம்தோறும் பெரியார் இவ்விதமாகப் புதுமைவாதியாகப் பிறப்பெடுக்கிறார்.
பெரியாரின் மற்றொரு பக்கம் அவர் கோவிலை நிராகரிப்பதில் தென்படுகிறது. அதேசமயம் ரசிகமணி டி.கே.சி.யின் அறுபதாம் ஆண்டு விழா இலஞ்சி முருகன் கோவிலில் நடந்தபோது அந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார் பெரியார். அதைக் குறித்துக் கேட்டவர்களிடம், “விழா டி.கே.சி.க்குத்தானே நடக்கிறது, முருகனுக்கா நடக்கிறது,” என்ற எதிர்க் கேள்வியை முன்வைத்திருக்கிறார் அவர்.
இதுபோன்ற நிலைகளில் பெரியாரைச் சார்ந்து நிற்பதிலும் விலகி நிற்பதிலும் மிகப்பெரிய சமூக உணர்வுகள் கலந்திருக்கின்றன; அதனை அன்னம்போல பிரித்தறிந்தாலொழியப் பெரியாரை இன்னமும் புரிந்துகொள்ள முடியாத நிலையே தொடரும். மூல நூலுக்கு இசைவாக ஒரு மதிப்புரை நூலும் அமைவது வியப்புத்தான்.
‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்’ நூலுக்கான மதிப்புரைகளை பொ. வேல்சாமி, அ. மார்க்ஸ், வீ. அரசு, பெருமாள்முருகன், மணா, கல்யாணராமன், சுகுணா திவாகர், க. காசி மாரியப்பன், டி. அருள் எழிலன், ஜெ. ஹாஜாகனி உள்ளிட்ட 33 பேர் வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பெயர் வரிசையே ப. திருமாவேலனின் நூலைக் கனப்படுத்த போதுமானதாக இருக்கிறது.