செடி
துளசிச் செடி சரியாக வளரவில்லை என்பதற்காக புதிதாகக் குடிவந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என்று சொல்லத்தொடங்கி கொஞ்சநாளில் வீடே சரியில்லை என்று சொல்லிவிட்டாள் பிரகலாதனின் தாயார். துளசியைச் செடி என்று சொல்வதேகூட அவளைப் பொருத்தவரை அவதூஷணை. தெய்வ நிந்தனை. துளசிதான் ஒரு வீட்டுக்குப் பெண் குழந்தைபோல. துளசி லக்ஷ்மி. துளசி தளதளவென்று தழைத்து நிற்பது வீட்டுக்கு சௌபாக்கியம். அந்த வீட்டை நோய்நொடி அண்டாது. அவள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். ஆனால் அவளைத் துளசி கைவிட்டதே இல்லை. இவ்வளவு காலமாய் அவளை அதுதான் காப்பாற்றி வந்திருக்கிறது என்று அவள் திடமாய் நம்பினள்.
சொல்லப்போனால், அப்பா உயிரோடு இருக்கும்வரை அவள் என்ன சுகத்தைக் கண்டாள் என்று சமயங்களில் பிரகலாதன் ஆச்சரியப்படுவான். ஆனால் அதை வாய் தவறிக்கூடச் சொல்லிவிட முடியாது. எப்போதாவது சொல்லிவிட்டால், அவள் மௌனவிரதத்துக்குப் போய்விடுவாள். பேச்சு கிடையாது. அன்ன ஆகாரம் கிடையாது. தண்ணிகூடக