உண்மைக்குப் புறம்பான செய்திகள்
நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் அ. வெண்ணிலாவின் எதிர்வினையைப் படித்தேன். டாக்டர் மு. ராஜேந்திரன், இ. ஆ. ப., பதிப்பித்த சோழர் காலச் செப்பேடுகள் என்னும் நூலில் உள்ள பெரும்பிழைகளைச் சுட்டிக்காட்டிப் புலவர் ராசு எழுதியிருந்த கட்டுரையைக் குறித்து வெண்ணிலா குரூரமான வார்த்தைகளைக் கொட்டி அக்கிரமமான செய்திகளைப் பொழிந்திருந்தார். முதுபெரும் பேராசிரியரான ராசு தன் வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு அறிந்திருந்த கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் பற்றிப் பொறுப்பற்ற தன்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலைக் கண்டு மனம் வருந்தி அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அந்த நூலுக்கான மதிப்புரை அல்ல. வெண்ணிலா அதை மதிப்புரை என்கிறார். ஆசிரியர் தன் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்திய நூலாக இருந்திருந்தால் மதிப்பிடுவதற்கு அது தகுதியானதுதான். ராஜேந்திரனின் நூல் அத்தகையதல்ல. சோழர் காலப் பட்டயங்களை அத்துறை சாராத ஒருவர் பதிப்பித்த நூல்தான் அது என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன்.
புலவர் ராசு அவர்கள் சுட்டிக்காட்டிய பிழைகள் ஒன்றோ இரண்டோ அல்ல. அந்தச் செப்பேடுகளில் உள்ள ஊர்ப் பெயர்கள