சுடரின் வெளிச்சத்தில் ஒரு வன்முறை
அப்படிப்பட்ட சமுகநீதிக் காவலர்களால் மிகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட களங்கள்தாம் தர்மபுரிக்கு அருகில் உள்ள நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புப் பகுதிகள். நகைகள், விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்து, வீடுகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தி தலித்துகளின் ஒட்டுமொத்த வாழ் வாதாரத்தையே வேரோடு புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களால் வழங்கப்பட்ட சமூகநீதி.
திருப்பத்தூர்-தர்மபுரி நெடுஞ் சாலையில் தர்மபுரிக்கு முன்னதாக இருக்கும் ஊர் நாயக்கன்கொட்டாய். அங்கிருந்து சாலையின் வலப்புறம் சுமார் ஐநூறு மீட்டர் தொலைவில் இருக்கிறது நத்தம் பகுதி. ஒரே ஒரு வீட்டைத் தவிர முழுக்க முழுக்க தலித் மக்கள் வாழும் குடியிருப்பு. நத்தம் பகுதியின் கடைசியில் இருக்கும் அந்த ஒரு வீடு, சாதி இந்து ஒருவருடையது. வன்முறையின்போது இந்த வீடு மட்டும் தாக்கப்படவில்லை. இதன் பின்புறம் இருந்த காரணத்தால் ஒரே ஒரு தலித் வீடு மட்டும் தாக்குதலிலிருந்து தப்பித்துள்ளது. வன்முறைக்குப் பிறகு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறையினர் அந்த வீட்டு முற்றத்தில் தான் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
நத்தத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன். தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். நத்தத்திலிருந்து இரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். நாயக்கன்கொட்டாயிலுள்ள கூட்டுறவு வங்கியொன்றில் பணிபுரிந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவருடைய மகள் திவ்யா தனியார் செவிலியர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவருகிறார். கல்லூரிக்குச் செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விரும்பியிருக்கிறார்கள். இரண்டாண்டுகளாக இது தொடர்ந்திருக்கிறது. இதைப் பற்றித் திவ்யாவின் குடும்பத்தாருக்குத் தெரியவர, இளவரசனின் வீட்டுக்கே வந்து இருமுறை மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதினான்காம் தேதி வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லையென்று கருதி சேலம் சரக காவல் துறை தலைவர் சஞ்சய்குமாரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர் விசாரணைக்காக இளவரசனையும் திவ்யாவையும் தர்மபுரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கிடம் அனுப்பியுள்ளார். அஸ்ரா கார்க் இரு குடும்பத்தாரையும் அழைத்துச் சமாதானம் பேசி அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு இளவரசனும் திவ்யாவும் நத்தம் கிராமத்திற்கு வராமல் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். திவ்யாவின் குடும்பத்தினர் அங்கும் சென்று திவ்யாவைத் தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்திருக்கிறார்கள். அவர் வரமறுத்துள்ளார். திவ்யாவின் தந்தை நாகராஜன் பற்றி நத்தம் கிராமத்து மக்கள் பலரும் நல்லவிதமாகவே கூறுகிறார்கள். அவர் பணிபுரியும் வங்கிக்குத் தலித் மக்கள் செல்லும்போது அவர்களை இருக்கையில் அமருமாறு கூறுவாராம். தலித் மக்கள் தயங்கி நிற்கும்போது, “பரவாயில்லை அதெல்லாம் அந்தக் காலம், இப்போது அதெல்லாம் பார்க்க வேண்டாம். உட்காருங்கள்” என்பார் என நத்தம் பகுதியைச் சேர்ந்த புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார். “நடந்தது நடந்துவிட்டது. இனி அவர்களை அப்படியே விட்டுவிடலாம்” என நாகராஜன் கூறியதாகவும் ஆனால் அவரது ஊரைச் சேர்ந்தவர்களே தலித்தின் சம்பந்தி எனக் கிண்டலடித்து அவமானப்படுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் ஒரு தகவல் உலவுகிறது.
செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நவம்பர் நான்காம் தேதியன்று நத்தம் பகுதிக்குச் சென்று திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் எனக் கெடு விதித்திருக்கிறார்கள். இல்லையெனில் ஊரையே கொளுத்தி விடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இளவரசனின் பெற்றோர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் ஊருக்குச் சென்றுவிட்டனர். இதற் கிடையில் கடந்த நவம்பர் ஏழாம் தேதி புதன்கிழமை மதியம் இரண்டு மணி அளவில் நாகராஜன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வந்துள்ளது. சுமார் மாலை 4:30 மணியளவில் இரு லாரிகளில் கடப்பாரை, சுத்தி, உருட்டுக்கட்டைகள், கோடரி, பெட்ரோல் நிரப்பட்ட கேன்கள், பெட்ரோலைப் பீய்ச்சியடிக்கத் துளையிடப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்கள், சைக்கிள் டியூப்பில் செருகப்பட்ட அரையடி நீள இரும்புப் பைப்புகள் ஆகியவற்றோடு ஆயிரம்பேர் நத்தம் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். நாகராஜனின் சடலத்தைப் பூட்டியிருந்த இளவரசனின் வீட்டு முன் வைத்துவிட்டுக் கதவை உடைத்துப் பொருட்களை அடித்து நொறுக்கித் தீ வைத்து நாசம் செய்திருக்கிறார்கள். நத்தம் தலித் மக்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் சூழ்ந்து நின்ற மிகப் பெரிய வன்முறைக் கும்பலுக்கு எதிராக எதையும் செய்யவியலாமல் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் வேலைக்குப் போயிருந்தார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். எஞ்சியிருந்தவர்கள், இவர்களின் அட்டூழியம் இளவரசனின் வீட்டோடு நின்றுவிடும் என்றே நினைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வன்முறைக் கும்பல் இளவரசனின் பக்கத்து வீடான அவருடைய சித்தப்பா வீட்டையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் அவர்களது நோக்கமும் வரவிருக்கும் விபரீதமும் புரிந்திருக்கிறது. எனவே அவர்கள் தங்கள் வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும் அருகிலுள்ள வயல்வெளிகளுக்குச் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.
வேலையிலிருந்தும் திரும்பியவர்களும் பள்ளிகளிலிருந்து திரும்பிய பிள்ளைகளும் இச்சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரியான வன்முறையை அரங்கேற்றிருக்கிறது அச்சாதிவெறிக் கும்பல். முதலில் அருகிலிருந்த பெரிய கற்களைக் கொண்டு கதவை உடைத்து, நகைகள், பணம், ஆடுகள், டிவிடி பிளேயர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்களை கொள்ளையடித்து லாரியில் கொண்டு சென்றுள்ளனர். அடுத்தது பீரோ, தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறிகள், பாத்திரங்கள், துணிகள், புத்தகங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், அடையாள அட்டைகள், தானியங்கள், கட்டில், நாற்காலிகள், வாகனங்கள் ஆகியவற்றின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்கள். இப்படி அடுத்தடுத்து நத்தத்தில் 144 வீடுகள் எரிக்கப்பட்டன. இதற்கிடையே எஸ். கொட்டாவூரிலும் சீராளப்பட்டியிலும் மரங்களைச் சாலையின் குறுக்கே அறுத்துப்போட்டு யாரும் வரைவியலாதபடி தடை ஏற்படுத்தி, நாகராஜனின் சடலத்தை நாயக்கன்கொட்டாய் நெடுஞ்சாலையில் வைத்து மறியல் செய்துள்ளனர். அதே நேரம் நத்தத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகரிலும் 34 தலித் வீடுகள் அதே பாணியில் கொள்ளையிடப்பட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. அக்கும்பல் கொண்டுவந்த பெட்ரோல் தீர்ந்துபோகவே கடைசியாக உள்ள சில வீடுகள் தீக்கிரையாகாமல் தப்பித்தன. அங்கிருந்தவர்கள் குழந்தைகளோடு அருகிலுள்ள சோளக்காட்டில் ஒளிந்து கொண்டனர். அண்ணாநகரில் 20 இலட்சம் மதிப்புடைய ஜோசப் என்பவரின் வீடு முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தமிழக மனித உரிமைகள் பாதுகாப்புக் கவுன்சிலின் தர்மபுரி மாவட்டச் செயலாளராகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராகவும் இருக்கும் ஜோசப், இளவரசனின் அக்காவைத் தன் மகனுக்குத் திருமணம் முடித்திருப்பதாலேயே அவரது வீடு இத்தனை வன்மத்திற்கு ஆளாகியுள்ளது.
நாயக்கன்கொட்டாயிலிருந்து இடதுபுறம் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொண்டம்பட்டியிலும் 90 வீடுகள் கொள்ளையிடப்பட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் நேதாஜி என்பரின் வீடு, ஜோசப்பின் வீட்டைப் போலவே வாழவே முடியாதபடி நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் காரணமுண்டு. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், நேதாஜியும் கருவேலம்பட்டி என்னும் ஊரின் வன்னியர் சாதியைச் சேர்ந்த முத்து லட்சுமியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அப்போதே அப்பெண்ணின் ஊரைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து நேதாஜியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தற்போது நேதாஜியும் முத்துலட்சுமியும் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியாத நிலையில் ஓராண்டு வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஊரையே கொளுத்தியிருக்கிறார்கள்.
வெறியாட்டம் நடந்து முடிந்த பின்னர் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். அதன் பின்னரே பயத்தாலும் பீதியாலும் உறைந்து போய் ஒளிந்துகொண்டிருந்த தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். நிகழ்ந்திருக்கும் வெறியாட்டத்தைப் பார்த்துப்பித்துப் பிடித்ததுபோலாயிருக்கின்றனர். மறுநாள் தர்மபுரி ஆட்சியர் ஆர். லில்லி அப்பகுதிகளைப் பார்வையிட்டார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஒருவரும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 142 பேர் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
o
இச்சம்பவம் நடந்த நான்காவது நாள்கூட சில வீடுகளில் எரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. நேரில் பார்த்ததை வார்த்தைகளில் எழுதிவிட முடியும் எனத் தோன்றவில்லை. அப்பகுதிகளில் சாதிவெறி முற்றிலும் பழுத்துத் தொங்கிக்கொண்டிருப்பதை இவ்வெறியாட்டத்தின் மூலம் கண்ணுற்ற எவரும் அதன் விஷச் சுவையை நிச்சயம் அறிந்திருப்பார்கள். உடுத்திய ஆடையுடன் உடைமை, பொருள் எல்லாவற்றையும் இழந்து கலங்கிய கண்களுடனும் இதிலிருந்து எப்படி மீண்டுவரப் போகிறோம் என்னும் கவலையுடனும், ஒரு மத்தியத்தர வாழ்க்கையை வாழ்ந்த அவர்கள் அடுத்த வேளை உணவுக்காகக் காத்திருக்கும் அவலத்துடனும் ஆங்காங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, சாதி என்னும் போலிக் கருத்தியல் ஒடுக்கப்பட்ட உயிர்களை ஆட்டுவிப்பது வெட்ட வெளிச்ச மாகத் தெரிகிறது.
அண்ணாநகரில் இருக்கும் கொடகாரி என்னும் பெண் எங்கள் வீட்டில் எஞ்சியிருப்பது இந்த நாய் மட்டும்தான் எனச் சொல்லும்போதே வெடித்து அழுகிறார். இன்னொரு பெண் மாதவிலக்கானால் கூடத் துண்டு துணியில்லாமல் நிற்கிறோமே எனக் கதறும்போது திராணியற்றவளாகி விட்டேன். பி. ஏ. ஆங்கில இலக்கியம் படித்திருக்கும் வெண்ணிலா, “சான்றிதழ் எல்லாம் எரிந்து போயிற்று; நான்தான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்; எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமா” என என் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டபோது வெடித்து அழுதுவிட்டேன். இப்படி இன்னும் எத்தனையோ. திருமணத்திற்காகவும் மருத்துவச் செலவுக்காகவும் கல்லூரியில் பருவக்கட்டணம் செலுத்துவதற்காகவும் வீடு கட்டுவதற்காகவும் வைத்திருந்த பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதில் இடிந்துபோய் இருக்கிறார்கள்.
அருகிலுள்ள தலித் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் டெம்போக்களில் அரிசி மூட்டைகள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து உணவு சமைத்துப் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். நத்தத்திலும் அண்ணா நகரிலும் இதைக் காண முடிந்தது. ஆனால் கொண்டம்பட்டியில் இவ்வாறான காட்சிகளைக் காண முடியவில்லை.
இந்தச் சாதி வன்முறையின்போது நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் ஊர்களிலும் சேர்த்து 268 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 70 இருசக்கர வாகனங்களும் இரு லோடு வேன்களும் இரு கார்களும் 30 மிதிவண்டிகளும் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஐந்து சவரன் நகைகளும் (அண்ணாநகர் ஜோசப் வீட்டில் அறுபத்தைந்து சவரன்) பத்தாயிரம் ரூபாயும் (அதிகபட்சமாக இரண்டு இலட்ச ரூபாய், நாலைந்து வீடுகளில்) கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. சேதப்படுத்தப்பட்ட வீட்டொன்றின் மதிப்பு குறைந்தபட்சம் மூன்று இலட்சம் ரூபாய். ஆகத் தோராயமாக இழப்புகளைக் கணக்கிடும்போது, இரண்டு மற்றும் நான்குச் சக்கர வாகனங்கள் வகையில் ரூபாய் முப்பத்தாறு இலட்சமும் நகைகள், பண வகையில் சுமார் மூன்று கோடியே ஐம்பது இலட்சமும் வீடு மதிப்பு வகையில் சுமார் எட்டு கோடியே நான்கு இலட்சமும் மொத்தம் சுமார் பன்னிரண்டு கோடி ரூபாய் வருகிறது. இத்தொகையை அரசாங்கம் எவ்வாறு ஈடுகட்டப் போகிறது என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்
ஊடகங்கள் இவ்வன்முறைச் சம்பவத்தை எவ்வாறு வெளியிடுகின்றன, எவ்விதத்தில் புரிந்துகொண்டிருக்கின்றன எப்படி இருட்டடிப்பு செய்கின்றன பொதுப்புத்தி சார்ந்து எவ்வாறு இயங்குகின்றன என்பனவற்றைக் கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. கடந்த ஏழாம் தேதி புதன்கிழமை இரவு ஒன்பது மணிக்கு முகநூலில் நண்பரொருவர், தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட தீயும் புகையும் சூழ்ந்த ஒரு புகைப்படத்தைப் பதிந்தார். தர்மபுரி அருகே தலித் குடிசைகள் வன்னியர்களால் தீ வைத்து எரிக்கப்படுகின்றன என்பதைத் தவிர அப்பதிவில் மேலதிகத் தகவல் இல்லை. மறுநாள் செய்தித்தாள்களில் மகளின் காதல் விவகாரத்தால் தந்தை தற் கொலை, இருநூறு குடிசைகளுக்குத் தீ வைப்பு எனச் செய்தி வெளியிடப்பட்டது. இரு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடியின் திரு மணத்தால் கலவரம், வெறும் அறுபதுபேர்தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் உண்மைகள் திரித்து வெளியிடப்பட்டன.
மூன்று ஊர்களிலும் சேர்த்து எரிக்கப்பட்ட இருநூற்று அறுபத்தெட்டு வீடுகளில் ஏழு வீடுகள் மட்டும்தான் குடிசைகள். அவற்றில் மூன்று மட்டுமே குடியிருப்புகள். மற்றவற்றில் ஒன்று வார வழிப்பாட்டுக் குடிசை. இரண்டு சமையல் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட்டவை. வாடகைக்கு விடப்படும் சமையல் பாத்திரங்கள் மற்றும் ஒலி பெருக்கிகள் வைக்கபட்டிருந்த ஒரு குடிசை ஆகமொத்தம் எரிக்கப்பட்ட வீடுகளில் ஏழு மட்டுமே குடிசை வீடுகள். தலித்துகள் என்றால் குடிசையில் இருப்பவர்கள், அவர்களிடம் என்ன இருந்துவிடப் போகிறது, மிஞ்சிப்போனால் எரிந்த குடிசைகளில் இருந்தவை ஆயிரம் ரூபாய் மதிப்புகூடத் தேறாதவை, குடிசைகள் எரிந்துபோவது சாதாரணம் என இச்செயல் நியாயப்படுத்தப்படுவதும் அலட்சியப்படுத்தப்படுவதும் பொதுப்புத்தி சார்ந்தது. சில பத்திரிகைகளும் இம்மி பிசகாமல் இப்புத்தியிலேயே பயணிப்பதை அதன் செய்தி காட்டுகிறது. ஒரு சில ஆங்கிலப் பத்திரிகைகள் நடந்த சம்பவத்தின் உண்மையை உணர்ந்து காத்திரமாகவே செய்திகளை வெளியிட்டதையும் பாராட்டியே ஆக வேண்டும்.
சில குறிப்பிட்ட ஊடகங்கள் குறிப்பிடுவதைப் போல இது சாதிக் கலவரமோ சாதி மோதலோ அன்று. திட்டமிடப்பட்டுத் தலித்துகள்மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய வன்முறை. முன்பு நடைபெற்ற வேறு எந்த, தலித்துகள்மீதான வன்முறைச் சம்பவங்களோடும் இதை ஒப்பிட முடியவில்லை. ஒப்பிடவும் கூடாது. தமிழகத்தில் தலித்துகளின் ரத்தம் தோய்ந்த வரலாறுகளைப் பார்க்கும்போது, கொடியங்குளம் தொடங்கி கடலூர் மாவட்டம் புளியூர், தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம், திண்டுக்கல் மாவட்டம் பரளிப்புதூர் ஆகிய ஊர்களில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவ்வரிசையில் இப்போது இந்த வன்முறையும் சேர்ந்துள்ளது. இவ்வன்முறைகளுக்குக் காரணம் ஊடகங்கள் சொல்வதைப் போல சாதி கடந்த திருமணம் அன்று. மாறாகச் சாதி ஆதரவாளர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் தலித்துகள்மீது தாக்குதல் நடத்துவதற்கு அத்திருமணம் ஓர் ஊக்கப்புள்ளி. அவ்வளவுதான்.
இப்பகுதிகளில் முன்னர் செயல்பட்ட நக்சல்பாரி அமைப்பின் மூலமாக தீண்டாமை, சாதிக் கொடுமை ஒழிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இம்மூன்று ஊர்களிலும் உள்ள தலித்துகள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். இடைநிலைச் சாதியினரின் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை பார்க்காமல் கோவை, திருப்பூர், பெங்களூரு, ஓசூர் முதலான ஊர்களுக்குச் சென்று உழைத்துப் பொருளீட்டி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என ஒரு மத்தியத்தர வாழ்க்கைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டது, முக்கியமாக நல்ல ஆடை அணிகலன்களை அணிந்தது போன்றவை வன்னியர்களின் கண்களை உறுத்தியிருக்கின்றன. இது அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம்.
தலித்துகள் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சாதிக் கொடுமைகள் மற்றும் இழிவுகள், தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். சாதியற்ற சமத்துவத்தை வலியுறுத்தும் அமைப்புகளிலும் இயக்கங்களிலும் ஒன்றாக அணி திரளுகிறார்கள். ஜனநாயக முறையில் தங்கள் உரிமைகளை அடையும் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க தலித் கட்சிகளில் இணைகிறார்கள். தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்கள். சாதி ஒழிய வேண்டுமானால் அகமணமுறை ஒழிந்து சாதி கடந்த திருமணங்கள் நடை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆதிக்கசாதியினரைச் சார்ந்திராமல் பொருட்படுத்தத்தக்க அளவில் தலித்துகள் பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு தலித்துகள் எழுச்சியுறும்போது, தங்கள் ஆளுகையின் பிடி நழுவிப் போவதையும், சாதிப் பெருமை அழிவதையும் சமத்துவம் மலர்வதையும் சாதி கடந்த திருமணங்கள் நடப்பதையும் ஏற்றுக்கொள்ள இயலாதபோது இடை நிலைச் சாதியினரால் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை அசைத்துப் பார்க்கும் செயல்கள் அவை.
தர்மபுரி வன்முறை தொடர்பாக வாரப்பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியைப் படிக்க நேர்ந்தது. அதன் சாரம்சம் இதுதான். தர்மபுரி மாவட்டத் தலித் இளைஞர்கள் வன்னியர் சாதிப் பெண்களை மயக்கிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். பிறகு கட்டப் பஞ்சாயத்து செய்து பெண் வீட்டாரிடம் இலட்சக்கணக்கில் பணம்பெற்றுக் கொண்டு பெண்ணை ஒப்படைத்துவிடுவார்கள். இதை இவர்கள் ஒரு தொழிலாகவே செய்கிறார்கள் என்று அங்கிருக்கக்கூடிய ஆதிக்கசாதியினர் சொல்கிறார்களாம். தலித்துகளை வக்கற்றவர்கள், ஏமாற்றுபவர்கள், உழைக்காத சோம்பேறிகள், என்றெல்லாம் இழிவுபடுத்திப் பிரச்சினைக்குக் காரணம் காதல்தான் எனச் சொல்லாமல் சொல்லி, ஒருபக்கச் சார்பான செய்திகளை வெளியிடும் இது போன்ற பத்திரிகைகள் தங்கள் நடுநிலைமையைக் கிள்ளிப்பார்த்துக் கொள்ள வேண்டும். சற்றேறக்குறைய இதே கருத்தை இதே வாசகத்தைக் கொண்ட அறிக்கை ஒன்று, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் இரா. மணிகண்டன் என்பவரால் வெளியிடப்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மூன்று மாதங்களுக்கு முன்னர் கோவையில் கலப்புத் திருமணங் களுக்கு எதிராக மாநாடு நடத்தித் தீர்மானங்களை இயற்றியவர் இவர். மேலும் கலப்புத் திருமண எதிர்ப்புப் பொதுக்கூட்டம் அடுத்த வருடம் பிப்ரவரி பதினான்காம் தேதியன்று தர்மபுரியில் நடைபெறும் என அறிக்கைவேறு வெளியிட்டிருப்பவர். இவர் போன்ற நச்சுகளை வளரவிடக் கூடாது.
“வன்னியன் ஆளணும்; இதுவே வன்னிய மந்திரம்” என மேடைக்கு மேடை முழங்கும் ‘அம்பேத்கர் சுடர்’ ஐயா மருத்துவர் ராமதாஸும் அவருடைய வலக்கை, இடக்கையான மாவீரன் காடுவெட்டி குருவும் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். ஒன்று, நடந்த வன்முறைக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தொடர்பில்லை. இரண்டு, இரு சமூகத்திற்கும் பல வருடங்களாகவே பகை உண்டு. மூன்று, வருவாய் அலுவலர் வீரணன் சொல்லி, அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கும் என்பதற்காகத் தங்கள் வீடுகளைத் தாங்களே கொளுத்திக்கொண்டார்கள். முதலாவதாக, சம்பவம் நடந்த அன்று திரண்டு வந்த ஆயிரம் பேருக்குத் தலைமை தாங்கியவர் தர்மபுரி மாவட்ட பாமகவின் இளைஞரணி அமைப்பாளரான மதியழகன் என்பவர். மேலும் அந்தக் கும்பலில் இருந்தவர்கள் நாயக்கன்கொட்டாயைச் சுற்றி இருக்கக்கூடிய இருபத்துமூன்று ஊர்களிலிருந்தும் வந்திருந்த பாமகவைச் சார்ந்த/சாராத வன்னியர்கள். இங்கு இயல்பாகவே இன்னொரு சந்தேகம் எழுகிறது. நாக ராஜன் தற்கொலை செய்துகொண்ட இரண்டுமணி நேரத்தில் மேற்கூறிய கிராமங்களிலிருந்து ஆயிரம் பேர் ஒன்றுதிரண்டது எங்ஙனம், ஆயுதங்களை எப்படிச் சேகரித்தனர், சுமார் இருநூறு லிட்டர் பெட்ரோல் எங்கே வாங்கப்பட்டது, எஸ். கொட்டாவூரிலும் சீராளப்பட்டியிலும் சாலையின் குறுக்கே மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது எப்படி, வன்முறையைத் திட்டமிட்டுவிட்டுப் பிறகு நாகராஜன் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டப்பட்டாரா? இவை போன்ற கேள்விகளுக்கு ராமதாஸும் விடை தேட முயல்வது நல்லது. இரண்டாவதாக வெவ்வேறு சாதிக் காதல் மட்டும் காரணமல்ல, இருசமூகத்தினரிடையே முன்பகை பின்பகை உண்டு என்ற உண்மையையாவது இராமதாஸ் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. இடைநிலைச் சாதியினரின் தலித்துகள்மீதான இந்த முன்பகை காலங்காலமாக இருந்து வருவது. அதற்கான காரணங்கள் ஏற்கெனவே சுட்டப்பட்டவை. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள வன்னியர்கள் அனுபவித்து வந்த நிலங்களை வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றித் தலித் மக்களுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கிறது. அவற்றில்தான் தற்போது வீடுகளைக் கட்டிக்கொண்டு நத்தம் மற்றும் அண்ணாநகர் மக்கள் வசித்து வருகிறார்கள். தலித்துகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அனுபவித்துவரும் ஆதிக்கசாதியினருக்கு, நிலமற்ற தலித்துகளுக்கு தங்கள் நிலத்தைப் பட்டாக்களாக வழங்கியது முப்பதாண்டுப் பகையை மட்டுமன்று தொடரும் பகையும்கூட.
மூன்றாவதாகத் தங்கள் வீடுகளைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள் எனச் சொல்வது மிகவும் நகைப்புக்குரிய விஷயம். மறுபடியும் திருமணம் செய்து வைப்பார்கள் என்பதற்காக ஒருவன் தன் மனைவியையோ, ஒருத்தித் தன் கணவனையோ கொலைசெய்துவிடுவதற்கு ஒப்பானது ராமதாஸின் சிறு பிள்ளைத்தனமான பேச்சு. எண்பதுகளின் பிற்பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடி, போராட்ட வடிவங்கள் உடன்பாடு இல்லையெனினும் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த ராமதாஸ், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்மீது கொண்டிருக்கும் சாதி அடிப்படைவாதத்தைப் பார்த்தால் சற்று ஆயாசமாகவே இருக்கிறது.
காடுவெட்டி குரு, கொங்கு வேளாளர் இரா. மணிகண்டன் போன்றோரின் சாதிவெறிப் பேச்சுக்கு சிறு கண்டனமும் தெரிவிக்காத அரசியல் கட்சிகள், தலித்துகள்மீது வன்முறை நிகழ்த்தப்படும்போது சிறு அறிக்கையுடன் முடித்துக்கொள்கின்றன. சாதிக்கு எதிரான நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் எடுக்காததற்குக் காரணம் தேர்தல் அரசியல்தான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெற்றிபெற வலுவாக இருப்பவை சாதியும் சாதி அமைப்புகளும்தாம். எனவே அவை ஒவ்வொன்றும் உள்ளுக்குள் சாதியக் கட்டமைப்பைக் காக்கின்றவையாகவே இருக்கின்றன. ஆக சமூகத்தில் சாதியும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் வரையில் சமூகநீதி என்பது தலித்துகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும்.
சில அரசியல் கட்சிகள் மூன்றாம் கட்ட தலைவர்களையே நத்தம் பகுதிகளுக்கு அனுப்பின. ஈழம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு ஆகியவை சார்ந்து போராடும் வைகோ தலித் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது. ராஜபக்ஷக்குக் கருப்புக்கொடிக் காட்டப் பல மாநிலங்களைக் கடந்து சென்றவருக்கு தர்மபுரி வருவது கடினமான செயலாக இருக்க முடியாது. “என் உறவுகளே, என் சொந்தங்களே, என் சகோதரிகளே” என முஷ்டி உயர்த்திப் பேசும் செந்தமிழன் சீமான் அவர்கள் இதை எழுதும்வரை சிறு வார்த்தையையும் உதிர்க்கவில்லை. புதிய தமிழகம் பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்களைத் தலித்துகள் என்று அழைக்கவே கூடாது என சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். தமிழ்த் தேசிய அமைப்புகள் இதை எழுதும்வரை கனத்த மௌனத்தையே சாதிக்கின்றன. பெ. மணியரசனைத் தவிர வேறு யாரும் களத்திற்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை. சாதி ஒழிப்பைப் பேசாத, தீண்டாமையை எதிர்க்காத, தலித்துகளின் நலனை உள்ளடக்காத தமிழ்த் தேசியம் உவப்பானதல்ல. தலித்துகள் அல்லாதவருக்கான தமிழ்த் தேசி யத்தைக் கட்டமைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் தங்கள் செயல்திட்டத்தில் இதைப் பரிசீலிக்க வேண்டும்.
o
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கம் போன்றவை பாதிக்கப்பட்ட களத்தில் நின்றவை. மாதர் சங்கமும் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கமும் மக்களுக்குத் துணிகள், போர்வைகள் உணவுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து அவர்கள் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தலித் மக்களின் நம்பிக்கைத் தலைவராக இருக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பில் நத்தம் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் எனத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலங்களில் பலமுறை பாமக ராமதாஸ் அவர்களோடு இணைந்தும் விலகியும் வந்துள்ளார். சமூக அமைதி வேண்டியும் நல்லிணக்கம் கருதியும் சாதி ஒழிப்புக்காக ராமதாஸ் போராடினால் அவருடன் சேர்ந்து போராடத் தயார் எனத் திருமாவளவன் கூறிய கருத்து விமர்சிக்கப்பட்டாலும், அரசியலைக் கூர்ந்து நோக்கும்போது சரியெனவேபடுகிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் ஆரோக்கியத்தைப் பற்றி மேலும் மேலும் பேசுவது பயனில்லை. நோய்வாய்ப்பட்டவர்களிடம் நோய் தீர்க்கும் முறைகள் பற்றியும் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது பற்றியும் பேசுவதுதான் சரியானது. சாதி ஆதரவாளர்களிடம் தான் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேச வேண்டும்.
ஈழம், மூவர் தூக்கு தண்டனை, எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை, முல்லைப்பெரியாறு, பரமக்குடி, தாமிரபரணிப் படுகொலை என எல்லாப் பிரச்சினைக்கும் வலியச் சென்று போராடும் திருமாவளவன், தலித் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்போது மட்டும் அரசியல் அனாதைபோல தனித்துவிடப்படுகிறார். அரசியலிலும் தீண்டாமை இருப்பதை அவர் உணரவேண்டிய தருணம் இது. மோசமான அரசியலில் பழைய அணுகுமுறைகள் செல்லத்தக்கவை அல்ல. தலித் இளைஞர்களை இன்னும் கூடுதலான புரிதலோடு அரசியல்மயப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பெரும்பான்மையான தேசிய, மாநில, மாவட்டக் கட்சிகள் எல்லாமே கட்டப் பஞ்சாயத்துக் கட்சிகள்தாம். ஆனால் தலித் கட்சிகளை மட்டும் அப்படி அடையாளப்படுத்துவது நரித்தனமான அரசியல் சூழ்ச்சி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இவ்வன்முறை குறித்தான புகைப்படங்களும் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. சாதியத்தின் கொடூரத்தையும் அரசியல் தலைவர்களின் அசல் முகத்தையும் அம்மக்களுக்கு உதவிய அமைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உண்மையை அறிந்து அளித்த தீர்மானங்களும் பரிந்துரைகளும் அரசு எந்திரங்களை விரைந்து நிவாரணப்பணி செய்ய முடுக்கின என்பது உண்மையே. சாதிப் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் நலனுக்கும் தனிமனிதச் சுதந்தரத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் பாதகம் விளைவிக்கும் சமூகத்தின் தீயசக்திகளை இனி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம், அவற்றுக்கு ஆரோக்கியமான மாற்று என்ன, எங்கிருந்து ஆரம்பிப்பது எனப் பலவாறான கேள்விகள் நம் முன்னே எழுகின்றன. முதலில் அவற்றுக்குத் தனித்தனியாக விடை தேடுவோம். பிறகு ஒன்றிணைவோம். அதுவரை சுடரின் வெளிச்சத்தில் இவ்வாறான வன்முறைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.