உண்மைகள் சொன்னவர் - வண்மைகள் செய்தவர்
‘ஓயுதல் செய்யோம், தலைசாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம்; பல வண்மைகள் செய்வோம்’ என்ற பாரதியின் வரிகளைத் தனது இதழின், வாழ்வின் செயல்முறையாக நம்பி வாழ்ந்த ஞாநி ஜனவரி 15 அன்று மறைந்தார். மறைவுக்குச் சில மணி நேரங்கள் முன்புவரையிலும் ஓயாமல் செயல்பட்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் தலைசாயாமல் நின்றிருந்திருக்கிறார். உண்மை என்று தான் நம்பியவற்றை உரக்கச் சொல்லியிருக்கிறார். இந்த எல்லாச் செயல்களுக்கும் அங்கீகாரம் இருந்தது என்பதை அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த பெரும் திரள் உறுதிப்படுத்தியது. தமிழ்ச் சூழலில் இயங்கிய எந்த எழுத்தாளருக்கும் எந்தப் பத்திரிகை- ஊடகச் செயல்பாட்டாளனுக்கும் திரளாத அளவுக்கான கூட்டம் அவருக்கு விடையளிக்கக் கூடியிருந்தது. அவர்களில் பலர் ஞாநியால் நிர்தாட்சண்யமாக விமர்சிக்கப்பட்டவர்கள். பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள். இந்த முரணை மீறி அவருக்குத் திரண்ட கூட்டம் உண்மைக்கு இன்னும் விலை இருக்கிறது என்பதை நிரூபித்தது. பொருளாதாரச் செல்வாக்கிலோ சமூக அந்தஸ்திலோ சிறிய சக்தியாக இருக்கிறோமா பெரிய சக்தியாக இருக்கிறோமா இதை விட முக்கியமானது, எப்போதும் நேர்மையாக உண்மையின் பக்கமாகவும் நீதியின் பக்கமாகவும் இருப்பது. என்பதைத் தனது நிலைப்பாடாகக் கொண்டிருந்தார் ஞாநி. அந்த நிலைப்பாட்டிற்குக் கிடைத்த மரியாதை இது. சமூகச் செயல்பாட்டுத் துறையிலும் ஊடகத் துறையிலும் இந்த நிலைப்பாட்டுடன் தொடர்ந்து செயலாற்றுபவர்கள் எண்ணிக்கை இன்று மிகக் குறைவு என்பதே ஞாநியின் இழப்பை ஆழமாக உணரச் செய்கிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் புதிய சிந்தனைகளும் புதிய செயல்பாடுகளும் உருவாயின. அந்தப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் ஞாநி சங்கரன். கலை இலக்கியப் பண்பாட்டுத்துறைகளில் மாற்றத்துக்கும் புதிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்குமாக எத்தனங்கள் நிகழ்ந்தன. இலக்கியம், நிகழ்த்துக் கலைகள், இதழியல், சமூகச் செயல்பாடு ஆகிய களங்களில் புதிய ஆற்றல்கள் அறிமுகமாயின. பொதுப் புத்திக்கும் வெகுசன ரசனைக்கும் சமூக உணர்வின்மைக்கும் அரசியல் இழிநிலைக்கும் மாற்றுகளை முன்னெடுத்த ஆளுமைகள் தெரிய வந்தனர். அவர்களில் ஒருவராக ஞாநியும் இருந்தார். புதிய மானுட மதிப்பீடுகளுக்காக வேட்கை கொண்டிருந்த அந்தத் தலைமுறையின் பிரதிநிதியாக இருந்தார். அந்தச் சூழலின் பாதிப்பைப் பெற்று உருவானவராக மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்பவராகவும் சூழலைப் பாதிப்பவராகவும் இருந்தவர் ஞாநி.
ஒரு காலகட்டத்தில் பொதுச் சமூகத்துக்குள் மாற்று மதிப்பீடுகளுடன் புகுந்த இளைஞர்களுக்கு இருந்த எல்லாக் கரிசனங்களும் ஞாநியிடம் இருந்தன. அவற்றை அவர் தனது வாழ்க்கையின் இன்றியமையாத இயல்புகளாக ஏற்றுக்கொண்டார். அதை இறுதிவரை பின்பற்றினார். வெகுசன இதழியலுக்கு மாறான வெகுமக்கள் இதழியலை முன்வைத்தார். வெறும் கேளிக்கையாக நடத்தப்பட்ட நாடக அரங்கில் அர்த்தமுள்ள நாடகங்களை நிகழ்த்தினார். பொழுதுபோக்குத் தொடர்களை ஒளிபரப்பும் தொலைக் காட்சியில் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் தொடர்களை அளித்தார். வெற்றான அரசியல் அரட்டை நடக்கும் மேடைகளில் பொருள் பொதிந்த அரசியலைப் பேசினார். சமூக அரங்குகளில் கற்பனையான முடிவுகளை மறுத்து நடைமுறைக்குப் பொருந்தும் கருத்துகளை வெளிப்படுத்தினார். இவை அனைத்தையும் எந்த அமைப்பின் சார்பாகவும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நின்றே செயலாக்கினார். மாற்று மதிப்பீடுகளுடன் அவரைப் போலவே முன்வந்த தலைமுறையின் பிரதிநிதிகள் பின்தங்கிச் சென்றபோதும், திசை மாறிப் போனபோதும், சமர் செய்த நிலைமைகளுடன் சரணடைந்தபோதும் சமரசம் செய்துகொள்ளாமல் பிடிவாதமாக முன் நடந்தார். ஒருவகையில் நமது காலத்தின் ஓய்வறியாக் கருத்துப் போராளியாக அவரைக் கருதலாம். சமூக நன்மைக்கு எதிரான எல்லாக் கருத்துகளுடனும் முரண்பட்டார். அதன் மூலம் அவர் அடைந்த இழப்புகள் மிக அதிகம். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். இன்று இந்த இயல்பு மிக அரிது. இந்த இயல்பின் ஒப்பற்ற அடையாளமாக ஒருவேளை ஞாநியை சுட்டிக் காட்ட நேரும்.
நவீன பண்பாட்டு வாழ்க்கையின் விழுமியங்களாகக் கருதப்படும் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து பேசியவர்; செயலாற்றியவர் ஞாநி. பேச்சால் மட்டுமல்லாமல் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் அவற்றை நிலைநிறுத்தினார். மத, மொழி, சாதிய, அரசியல், பண்பாட்டு அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர். பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், விளிம்புநிலையினர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களுக்கு ஆதரவாகப் பேசவும் செயல்படவும் செய்தவர். எந்த நிலையிலும் தனது சரியான கருத்துகளை விட்டுக்கொடுக்க முன்வராதவர். பிழையான கருத்துகளைச் சொன்னவர் நண்பராக இருந்தாலும் சுட்டிக் காட்டி விமர்சித்தார். தனது கருத்துகளைச் சொல்லச் சுதந்திரமான வாய்ப்பு அமையாதபோது பெரும் இதழ்களிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் விலகினார். தனது நலத்தை விடத் தனது உண்மை மகத்தானது என்ற நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார். சலுகைகளை விடத் தனது உரிமை முக்கியமானது என்பதைத் தனது வாழ்க்கை மூலம் நிறுவினார். மேற்சொன்ன விழுமியங்களை வாழ்க்கையில் பின்பற்றியதன் வாயிலாகவே அவர் முன்னுதாரணமாக விளங்கினார். அவரது மறைவுக்காக வருந்தியவர்களில் பெரும்பான்மையினர் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த முன்னுதாரண நிலைக்குச் சான்று.
அவர் அறிமுகமான தலைமுறையின் உடன்பாடான குணங்களின் மொத்தப் பிரதிநிதியாக ஞாநியைச் சுட்டலாம். இலக்கியத்தில் தீவிரமான விருப்பம், கலைத் துறைகளுடனான பரிச்சயம், சக மனிதர்களுடனான ஓயாத உரையாடல், புதிய கருத்துகளுடனும் தொழில்நுட்பங்களுடனும் நெருக்கம் போன்ற சுதந்திரமான போக்கை அவர் இறுதிநாள்வரை கொண்டிருந்தார். எதுவும் தனக்கு அந்நியமல்ல என்ற உணர்வுடன் வாழ்ந்தார். எந்தச் செயல்பாடும் தனியானது அல்ல; வாழ்க்கையின் மொத்தத்தைக் கொண்டது என்ற பார்வை அவரிடம் இருந்தது. அதனாலேயே அவர் எதைப் பற்றியும் சிந்திக்கவும் கருத்துச் சொல்லவும் முற்பட்டார். இலக்கியமும் கலையும் ஊடகமும் சமூகச் செயல்பாடுகளும் வாழ்க்கையின் பகுதிகள் என்று உறுதியாக இருந்தார். அவரது பல்துறை இயக்கம் அதையே காட்டுகிறது. அவரது இயக்கத்திலிருந்த அரசியல் குறிப்பிடத்தகுந்தது. சமகாலத்தில் அரிதானது. தனிமைப்படுத்தும் அரசியலை அல்ல; ஒன்றிணைக்கும் அரசியலையே அவர் முன்வைத்தார். தனது கருத்துக்கு எதிரான கருத்துக் கொண்டிருந்தவர்களுடனும் அவர்களால் சமூக மேம்பாட்டுக்கு ஆதரவாகச் செயல்பட முடியும் என்றால் இணைந்துகொண்டார். இந்த ஒன்றிணைக்கும் அரசியல் குணம் அவர் நமது பொதுவெளிக்கு அளித்திருக்கும் மகத்தான பங்களிப்பு.
எழுத்தாளர், நாடகச் செயல்பாட்டாளர், ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் உட்படப் பலதுறைகளிலும் ஞாநி பங்கேற்றிருக்கிறார். தன்னளவில் அந்தத் துறைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து அவரை நமது காலத்தின் பொதுச் சான்றோர் - - (public intellectual) என்று அழைக்கலாம். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்ற சிறிதும் பெரிதுமான எல்லா அரசியல், கலாச்சார, சமூக நிகழ்வுகளைப் பற்றியும் ஞாநி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவை சார்ந்த போராட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். தொடர்ந்து அவற்றை முன்வைத்து உரையாடி இருக்கிறார். சமூக நன்மைக்காக அணி சேர்ந்திருக்கிறார்; அணி சேர்த்திருக்கிறார். இவை பொது நலத்தில் அக்கறை கொண்ட ஓர் அறிவுஜீவியின் பொறுப்பு. அதைத் தமிழ்ச் சூழலில் செய்தவர் அவர். அறிவுஜீவி, கருத்தாளர் ஆகிய சொற்கள் கேலிக்குரியவையாக மாறியிருக்கும் நமது சூழலில் அந்தச் சொற்களுக்குரிய ஆளுமையின் கடமையை நிறைவேற்றியவர் ஞாநி.
“ஓர் அறிவுஜீவி என்பவன் பின்னொதுக்கப்பட்டவர்கள், அதிகார மையங்களில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களின் சார்பானவனாகவே இருப்பான். அப்படி இருப்பது அவ்வளவு எளிதானதல்ல. அறிவுஜீவியாக இருப்பவன் அடிப்படையில் சமாதானவாதியோ சமரசவாதியோ அல்ல. உயிரோட்டமான விமர்சன உணர்வே அவனுடைய ஆற்றல். அந்த ஆற்றல் காரணமாக எளிய சூத்திரங்களை அவன் புறக்கணிக்கிறான். வலிமை வாய்ந்த ஆட்சியாளர்களும் மரபுவாதிகளும் சொல்லும் வார்த்தைகளுக்கும் செய்யும் செயல்களுக்கும் ஆமாம் போடாமலிருக்கிறான். அவனுடைய மறுப்பு அவனுக்குள்ளேயே ஒடுங்கிவிடும் ஒன்றாக இருக்கக் கூடாது. தன்னுடைய நிலைப்பாட்டைப் பொதுச் சமூகத்தின் முன்னால் தயக்கமின்றிச் சொல்லக் கூடியவனாக அவன் இருக்க வேண்டும்.” இது எட்வர்ட் செய்த் பொதுச் சான்றோருக்கு அளித்திருக்கும் இலக்கணம். நிகழ்காலத் தமிழ்ச் சூழலில் இந்த இலக்கணத்தின் நிகரற்ற எடுத்துக்காட்டு ஞாநி என்பதில் சந்தேகமில்லை.