கவிதை
எப்போதும் போலிருக்கவே
இப்போதும் முயல்கிறேன்
எப்போது இப்போதானால்
எப்போதுதான்
எப்போதும் போலிருப்பேன்
தாதன்குளத்தில்
வெட்டுண்ட பனைகளைத் தேடி
கால்கள்
அலைந்து சலிக்கின்றன
காரைவீடும்
காரைவீட்டுப் பிள்ளையும்
போனபிறகு
பனைகள் மட்டும் தரித்திருக்குமா?
என்றாலும் -
பதனீர் வாசனையோ
போகுமிடமெல்லாம் வருகிறது.
என்னுடனே வரும்
நிழலையும் பேரையும்போல.
இருப்பதற்கும் போவதற்கும்
இடம் வேண்டும்
இருப்பதும் போவதும்
ஒழித்து
ஓயாத் தனிமையில்
மனவூஞ்சல் ஆடுகிறது
நேற்று, முன்தினம்
போனவாரம், போனமாதமென்று
நினைவுப் புரட்டல் நடக்கிறது.
இருக்கவும்,
இல்லாமல் போகவும் முடியாமல்தான்
வாழ்வு கழிகிறது.
அவர் தேசியமென்றார்
இவர் திராவிடமென்றார்
மார்க்ஸியம் பெண்ணியம் தலித்தியமென
இஸங்கள்
பதாகைகளுடன் பறக்கின்றன.
தாதன்குளத்துக் கிளிகள்
பழம் தின்னப் போகின்றன.
கூட்டமில்லா
சோமவாரத்துக் கோவிலில்
பெண்கள் கதையளக்கிறார்கள்
பாக்கியத்து அத்தான்
பக்கோடா போட்டு வாழ்கிறார்.
வேறென்ன செய்வது?