உங்களுடன் வந்தவர்
இடது பக்க எஞ்சின் அணைந்துவிட்டது என்று விமானி அறிவித்தார். பயணிகளுக்கிடையே ஒரே பரபரப்பு. மூன்றாவது இருக்கையைச் சாய்த்துவிட்டுப் படுத்துக்கிடந்த பெண் நிமிர்ந்து உட்கார்ந்து ‘ஓ’ என்று தலையிலே கைவைத்து அழ ஆரம்பித்துவிட்டார். விமானப் பணிப்பெண் ஆறுதல் சொன்னார். “ஒன்றுதான் அணைந்தது. இன்னும் மூன்று எஞ்சின்கள் உள்ளன. பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அமைதியாக இருங்கள்,” என்றார். மூன்றுகூடத் தேவை இல்லை. இரண்டு எஞ்சின்கள் மட்டுமே போதும் என்று எனக்குத் தெரியும்.
பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். கடும்பச்சை சேர்ட் தரித்து அதற்குமேலே கறுப்பு கோட் அணிந்திருந்தார். நெற்றி நடுவிலே அது வீணாக இருக்கிறது என்பதுபோல ஒரு குங்குமப் பொட்டு. அவர் முகத்திலே ஒரு சலனமும் இல்லை. மாறாக செய்திவரும்போது செல்போன் ஒளிருவது போல முகம் பிரகாசம் கொண்டிருந்தது. அவரும் என்னைப்போல தொழில் விசயமாக பாரிஸ் போகிறார். முதலில்