41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
15.01.2018 அன்று மறைந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநியின் மறைவுக்கு
அஞ்சலி செலுத்தி இக்கட்டுரையைத் தொடங்குவது முறை.
ஜனவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதிமுடிய வாசகர்கள் தங்கள் வாசிப்பைக் கொண்டாடும் விதமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்த செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேனிலைப் பள்ளிவளாகத்தில் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வருடக் கடைசியான டிசம்பரில் தமிழகம் ஏதாவதொரு நெருக்கடியைச் சந்தித்துக்கொள்ளும். இம்முறை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம். அந்த நெருக்கடி 2018இலும் தொடர்ந்தது.
காலச்சுவடு அரங்கு 62 புதிய பதிப்புகளுடன் வாசகர்களைச் சந்தித்தது. உலக கிளாசிக் வரிசையில் ஏழு மொழிபெயர்ப்பு நாவல்கள். அவற்றில் நான்கு நாவல்களும் அவற்றின் மொழிகளும் தமிழுக்கு முதன்முதலாக வந்தவை. ‘ஜெயலலிதா மனமும் மாயையும்’, ‘கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்’ என்ற இரு நூல்களை விலையடக்கப் பதிப்புகளாக இந்த ஆண்டு காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
நான்கு நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு, ஆய்வு நூல்கள், நினைவோடை, சமஸ்கிருத கதைகளுடன் வல்லமை வெளியீடும் அதில் அடங்கும்.
தமிழுக்குப் புது எழுத்தாளரான தமிழ்ப்பிரபா எழுதிய ‘பேட்டை’ நாவல் இந்த ஆண்டு வாசகர்களிடையே சிறப்புக் கவனம் பெற்றது மகிழ்ச்சியும் வியப்பும் அளித்தது.
பெருமாள் முருகன் மீண்டும் இலக்கிய உலகிற்கு வந்த இரண்டாவது ஆண்டைக் கொண்டாடும்விதமாக ‘மாதொருபாகன்’ நாவல் இம்முறை விற்பனையில் முதலிடம்.
ரோகிணிமணியின் கைவண்ணத்தில் உருவான காட்சிப்பொருள் இம்முறை காலச்சுவடு அரங்கைச் சிறப்புற வைத்தது.
காலச்சுவடு பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை வாசகர்களுக்காகச் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது.
11ஆம் தேதி மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தியுடன் வாசகர் சந்திப்பு, மறுநாள் தாமரைச் செல்வியின் ‘வன்னியாச்சி’ நூல் வெளியீடு.
13ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு தியடோர் பாஸ்கரனுடன் வாசகர் சந்திப்பு. இந்த ஆண்டு அவரது ‘இந்திய நாயினங்கள்’ நூல் புதுவரவு. 12.30 அளவில் நாஞ்சில் நாடனுடன் வாசகர் சந்திப்பு.
மாலை 6.30 மணிக்கு எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதியுடன் வாசகர் சந்திப்பு. மாலை 7.00 மணிக்குக் கவிஞரும் எழுத்தாளருமான சுகுமாரனின் வாசகர் சந்திப்பு. மேலும் அவர் எழுதி இந்த ஆண்டு வெளிவந்த ‘பெருவலி’ நாவலின் சில பகுதிகளை முழுநேர நாடகக் கலைஞர்கள் ஜானகியும் சாரதியும் நடித்துக் காட்டினார்கள்.
பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு விமலாதித்த மாமல்லனின் வாசகர் சந்திப்பு. அவரது ‘புனைவு என்னும் புதிர்’ நூல் இவ்வாண்டு புதுவரவு.
மறுநாள் மாலை 6.30 மணிக்கு போகன் சங்கரின் வாசகர் சந்திப்பு. அவரது ‘சிறிய எண்கள் உறங்கும் அறை’ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் ஜானகி, மோகனின் நடிப்பில் சிறப்புக் கவனம் பெற்றன.
16ஆம் தேதி மாலை 5.30 மணிக்குக் கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. கன்னடத்தில் மம்தா சாஹரும், மலையாளத்தில் அனிதா தம்பியும் கவிதைகளைக் கருத்துடனும் நளினத்துடனும் வாசித்தனர். மாலை 6.30 மணியளவில் சசிகலா பாபுவுடனான வாசகர் சந்திப்பு, ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஏழுபேர் கொண்ட பதிப்பாளர்குழு வருகை, ஜானகி, மோகன், சாரதி ஆகியோரின் கவிதை நிகழ்த்துதல் என காலச்சுவடு அரங்கம் களைகட்டியது.
17ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ‘உலகம் பலவிதம் ம.வே. திருஞானசம்பந்தம்பிள்ளை 1885 - 1955’ நூல் வெளியீடு.
மறுநாள் மகசேசே விருதுபெற்ற கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணாவுடனான வாசகர் சந்திப்பு. ‘பொறம்போக்கு...’ பாடலை வாசகருக்காகக் காலச்சுவடு அரங்கில் கிருஷ்ணா பாடி முடித்ததும் ‘சபாக்களில் மட்டுமே கேட்க முடிஞ்சத சாமான்யனும் கேக்க வச்சுட்டான்யா,’ என ஒருவர் சொல்லிச் சென்றது அரங்கில் எதிரொலித்தது.
19ஆம் தேதி எம்.எஸ். என்றழைக்கப்படும் மறைந்த மொழிபெயர்ப்பாளர் எம். சிவசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு. எம்.எஸ்ஸின் உருவப்படம் திறப்பு நீதிபதி ஆர். மகாதேவன் அவர்கள். இதில் வாசகர்களும் காலச்சுவடு அன்பர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மறுநாள் 6.15 மணிக்கு ‘பேட்டை’ நாவலாசிரியர் தமிழ்ப்பிரபாவுடனான வாசகர் சந்திப்பு.
21ஆம் தேதி காலை 11.30 மணிக்குப் பெருமாள் முருகனுடன் வாசகர் சந்திப்பு.
இம்முறை அரங்குகளின் அமைப்பு வரிசையை ரோபோ மூலம் சொல்லும் வசதியை பபாசி ஏற்பாடு செய்திருந்தது ஒரு புது முயற்சி. புத்தகக் கண்காட்சி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு, சிற்றரங்கில் ஓர் இலக்கிய நிகழ்வு, 1000/- ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கான பரிசு என பல நிகழ்வுகள் சிறப்பானவை. புத்தகக் கண்காட்சி அரங்கு, சிற்றரங்கு ஆகியவற்றைத் தாண்டி உணவுக்கென அமைக்கப்பெற்ற அரங்கும் சிறப்புக் கவனம் பெற்றது. கடந்தமுறை 10 ரூபாய்க்கு விற்ற டில்லி அப்பளம் இம்முறை 20 ரூபாய். கடந்தமுறை 15 ரூபாய்க்கு விற்ற தினைப்பயாசம் இம்முறை 30 ரூபாய். மற்ற உணவுப்பண்டங்களின் விலையும் இரு மடங்கு உயர்வுடனேயே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவுக்கான அரங்கில் சுகாதாரமான முறையை பபாசி இன்னும் தீவிரப்படுத்தலாம்.
விடியல் பதிப்பகம் இம்முறை வாசகர்களிடையே சிறப்புக்கவனம் பெற்றது. விடியல் வெளியீடான ‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ புத்தகம் விற்பனையில் முதலிடம் பெற்றது. அவர்களது வெளியீடான ஜான் பெர்க்கின்ஸின் ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ நூலை வாசகர்கள் தேடி அலைந்ததைப் பார்க்க முடிந்தது.
தேனீக்கூட்டம் படையெடுப்பதுபோல் இந்தப் பதின்மூன்று நாட்களும் திரண்டு வந்த கூட்டம் நூல்களைக் கட்டுகளாக அள்ளிச்சென்றது கண்கொள்ளாக் காட்சி. அரங்கங்கள் தங்கள் திரைச்சீலைகளை மூட பள்ளிவளாகத்துக்கு வெளியே கடைசி வாசகனுக்காகக் கடைபரப்பிக் காத்துக்கொண்டிருந்தன ரோட்டோரப் புத்தகக் கடைகள்.