கடிதங்கள்
ஒக்கிப் புயலில் சிக்கித் தவித்த குமரி மக்களின் அழுகை இன்றுவரை தீர்ந்தபாடில்லை. அம்மக்களின் சோகங்களை, கொடுந்துயரினை அப்படியே பதிவு செய்திருப்பதும், மக்களை மக்களாக மதிக்காமல், அறத்தைப் பேணாமல், நேர்மையைப் பெருக்காமல், நீதியைக் காணாமல் வாளாவிருக்கும் அரசின் அலட்சியத்தைக் காட்சிப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது ‘காவியக்காட்சி’ அகவுரை.
“கடலில் கோடீஸ்வரர்களாகத் தம்மைத்தாமே கருதிக் கொள்ளும் அச்சமூகம் கரைக்குத் திரும்பியதும் ஏழ்மைக்குள் வீழ்த்தப் பெறுவது சாபக்கேடு,” என்ற பதிவு வருத்தத்தை உண்டாக்கிவிட்டது.
புயல் வருமுன் எச்சரிக்கை செய்யத் தவறியதால், மீனவர்கள் கடலில் செத்துமிதக்கும் காட்சி ஈழத்தை நினைவூட்டுகிறது.
தொலைக்காட்சி நேரலையில், வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், ‘நாங்கள் எல்லோரும் கேரளாவிற்குப் போய்விடுகிறோம், அங்குதான் மக்கள் அரசாங்கம் நடக்கிறது என்ற குரலைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களும் ஒருசேர தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது நமக்கெல்லாம் தலைகுனிவே! ஒக்கிப்புயலில் காணாமல்போன மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்து, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அளிப்பதும் அவற்றின் கடமையாகும். சாலை விபத்துக்கள், ஆறுகளைக் கடக்கும்போது இறந்தால் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்குவதுபோல, கடலில் மடிந்த மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.
நிற்க ‘அசல் இந்துத்துவமும் அசட்டு இந்துத்துவமும்’ தலைப்பில் எழுதப்பட்டிருந்த அகவுரை அசலான மாற்று அரசியல் சிந்தனையை மக்களிடையே உருவாக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது.
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பொருளாதாரக் கொள்கையில் வேறுபாடு இல்லை, பணமதிப்பு நீக்கம் தவிர! இன்று பாஜக செய்துகொண்டிருப்பது பேராயக் கட்சியின் நீட்சியே. இந்திராகாந்தியின் அடியொற்றிய சில அரசியல் நிலைப்பாடுகள் பாஜகவிலும் அரங்கேறுகின்றன என்பதைப் புறந்தள்ள முடியாது. இந்திராவுக்கு முந்திய காங்கிரசின் கூட்டுத் தலைமைப் பண்பை அதிகாரப் பகிர்வு அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் எனும் ஆசிரியரின் நிலைப்பாடு பொருள் பொதிந்தவை எனில் மிகையில்லை.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
புயலின் தாக்கத்தையும் உயிரின் தாகத்தையும் ஓர் ஆவணமாகப் பதிவு செய்திருந்தது ‘காவியக்காட்சி’ என்ற தலைப்பிலான தலையங்கக் கட்டுரை.
வாழ்வெனும் சாகரத்தினுள் சாவெனும் தொழில் புரியும் எதார்த்த உழைப்பாளிகளான மீனவர்களின் இறப்பும் இழப்பும் சாளரப் பார்வையினில் விரிவாக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு வாசகனின் கண்ணீரின் சுமையையும் உணரவைத்தது.
மீனுண்ணும் மானுடத்திற்குத் தூண்டிலின் பிரசவ வேதனையைக் குடிமைச் செயல்பாட்டுக் கவலையுடன் தலையங்கம் விலாவாரியாக விவரித்தது. மீனவ சமுதாயம் ஏதோ காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இல்லை! ஆனால் அவர்களின் வலியும் வழியும் வளியும் நாம் புரிந்து அவர்களும் நம்மிலொருவர் என்பதைப் புரியும்படியும் பதியும்படியும் பதியனிடப்பட்டிருப்பது சிறப்பு. மத்திய, மாநில அரசுகளின் பதவி மோகத்தால்... நாடகங்கள் நிறைவேறுவதைப் பாமரனும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தது. புயலின் வன்மையை மக்கள் அனுபவித்தபோது, சுயமோகி அரசியல் பிம்பங்கள் தங்கள் பின்னங்கால் பிடரியில்பட ஓடியதுதான் வெட்கக்கேட்டிலும் வெட்கக்கேடு! அதைவிடுத்து நிலைமை சகஜம் ஆனபிறகு கண்காட்சிகளும் பட்சாதாபங்களும் பேட்டிகளும் திக்விஜயங்களும் ஒரு சகமனித வேதனையை அனுபவித்து ருசித்த எளிய மானுடனுக்கு இது ‘அதிகாரப்பூச்சின்’ அப்பட்டமான நாடகம் என்பது நிச்சயம் விளங்கும். அரசியல் நுட்பம் செவ்வனே அரங்கேறிய இந்தக் காவியக்காட்சிகளால் நிச்சயம் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் இன்னுமொரு கடலாக விரிந்த காட்சியும் காவியக் காட்சிகளும் அப்பப்பா... நெஞ்சே விம்முகிறது!
ஆர். ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்
2017 டிசம்பர் இதழில் ஹிலாரி மாண்டேயின் வரலாற்றுப் புதினத்தையும் வரலாற்றுப் புதினத்தின் சவால்களையும் பொதுவாக அலசி ஆராய்ந்துள்ள கட்டுரைக்கு ‘உயிர்ப்பித்தலின் கலை’ எனத் தலைப்பிட்டு சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரையே சவாலுக்குரியதுதான்.
உலக அரங்கில் எழுத்து அரங்கத்தை வலுவான ஒன்றாக மாற்றக்கூடிய ‘பெண்கள் பங்களிப்பு’ எழுத்துத் துறைக்கே மிகப்பெரிய சவால். எழுத்துக் களத்தின் வாயிலாக மகுடம் சூட்டிக்கொண்டு சாதனைக்குரியதாக்குவதென்பது அதைவிட மிகப்பெரிய சவால் புக்கர் விருதை இருமுறை பெற்ற முதல் பெண் எழுத்தாளராக வலம் வந்து தனது சாதனையால் உலக அரங்கைத் திரும்பிப் பார்க்கவைத்த பெருமைப் பெண் இனத்திற்கு மகுடம் சூட்டிய செயல் ஹிலாரி மாண்டேயைத் தனித்துவத்திற்குரியவராக்கியுள்ளது. பொதுவாக உண்மையின் உயிர்ப்பை உரைக் கல்லாக்குவதன் மூலம் இலக்கியப் படைப்பை அந்தஸ்துக்குரியதாக்கிட இயலும். வரலாற்றாசிரியன் உண்மையின் பிரதிபலிப்பான தரவுகளைக் கையாள்வதென்பது, உயிர்ப்பித்தலின் கலைக்கு மிக நெருக்கத்தை வரலாற்றுப் பிறழ்வின்றித் துல்லியத்தை அளிக்கக்கூடியதாகும்.
‘புலி உலவும் தடம்’ கதை சமூகப் பாதுகாப்பின்றி மக்களை வழிநடத்தும் மோசமான அரசியலை, சமூக அவலத்தை அங்குலம் அங்குலமாகப் புட்டுப்புட்டு வைத்துள்ள கதாசிரியருக்குப் பாராட்டைத் தெரிவிப்பதுகடமை.
இன்றைய நாடாள்பவரின் (மோடி) பகட்டுப் பேச்சில் நாடு அடிமைப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அசத்தியிருக்கிறார் ஆசிரியர். அது மட்டுமா? டி.வி. என்கிற ஊடகமானது மக்களது ரசனையை எந்தெந்த வழிகளில் சுரண்டலுக்குரிய ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விவரிப்பதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டுள்ள சிந்தனைவெளி மீது கேள்வி எழுப்பவும் தவறவில்லை. மக்களுக்குப் பயன்பட வேண்டிய ஆற்றுப்படுகை ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரமாகவும் மலக் கழிப்பிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக் கடைகள் மூலம் வாழும் காதர் பாயும் சிவபாலனும் வெவ்வேறு மதமாயிருந்தாலும் இவர்கள் பிழைப்புக்கு தோல்பதனிடும் தொழிற்சாலையின் தொழிலாளர்களால் கட்டப்பெற்றிருப்பது மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வியலைத் தொடுகோடாய் அமைத்திருப்பது கதைக்கு சிறப்பம்சத்தைத் தந்துள்ளது. அடுத்ததாக, அதிகார மையமாக நம்மை ஆளும் போலீஸின் பொறுப்பும் சமூக அக்கறையும் எங்குபோய் ஒளிந்துகொண்டன என்பதைக் கதை சுட்டிக்காட்டத் தவறவில்லை. இது சிந்தனைக்கு வளம் சேர்க்கக் கூடிய இலக்கிய வளத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பா. செல்வவிநாயகம்
சென்னை - 600 082
டிசம்பர் 2017 இதழில் தலையங்கம் அருமையிலும்அருமை. மதம் மனிதர்களுக்கானது. மனிதர் மதத்துக்கானவர்கள் அல்லர். ஆனால் மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு மதத்துக் கானதாக உள்ளது, நாட்டிற்கு அபாயகரமான தாகும். மதவெறியைத் தூண்டுவது பாவம். இதனால் இரத்த ஆறுதான் நாட்டில் ஓடும். இந்த மதவாத மத்திய அரசை
வீட்டிற்கு அனுப்ப வேண்டும். முற்போக்காளர் அனை வரும் ஒன்றுதிரண்டு இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். தவறினால் மதவாதம் மக்களைப் பலிகடா ஆக்கிவிடும்.
‘ஆண்மைமிக்க எழுத்துக்கு ஞானபீடம்’ என்னும் எம். கோபாலகிருஷ்ணனின் எழுத்தோவியம் அதிஅற்புதம். “என் எழுத்தில் தவறான ஒரு சொல்லை எழுதுகிற அந்த நொடியில் எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன்,” என்னும் கிருஷ்ண ஹோப்தியின் வாசகம் நெஞ்சத்தை வெகுவாக நெகிழ வைத்தது.
அண்மையில் காலமான மேலாண்மை பொன்னுசாமி, புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் களந்தை பீர்முகம்மது, சுகுமாரன் ஆகியோரின் பதிவுகளைப் படித்தபோது உண்மையில் கண்கள் பனித்தன. அந்த இருபெரும் எழுத்தாளர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். “இதுமாறாது என்று எதுவுமில்லை,” என்னும் பெஜவாடா வில்சனின் நேர்காணல் உள்ளத்தை வெகுவாகக் கொள்ளை கொண்டது. பெருமாள்முருகன் அவரைச் சிறப்பாக பேட்டி கண்டுள்ளார். அவருக்கு என் பாராட்டுகள். ‘காலச்சுவடு’ ஆற்றிவரும் இதழியல் பணிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.
தங்க. சங்கரபாண்டியன்
சென்னை - 600 103
அன்றாடம் வாழ்வா, சாவா என்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிச் சீரழிந்த 12 நாட்களுக்குப் பிறகு தமிழக முதல்வர் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வருகிறாரெனில் எத்துணை அலட்சியம்!
“இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா” என்று சொல்லித் தொண்டர்களை ஏமாற்றலாம்; ஆனால் கடலுக்குள் சென்ற உறவுகளின் நிலையறியாமல் கரையில் கதறிக்கொண்டிருக்கும் மீனவர்களை ஏமாற்ற முடியுமா?
தஞ்சையில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது முதல்வர் காமராஜர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்; சில நிவாரணப் பணிகளுக்குச் சட்ட விதிகளில் இடமில்லையே என்று அதிகாரிகள் சொன்னபோது, “உடனடியாக வேலை செய்யுங்கள்; விதிகளை மாற்றிக் கொள்ளலாம். மக்களுக்காகச் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்களில்லை,” என்று உரத்துக் கூறினார்.
பொன். ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றால் நம்பவே முடியவில்லை. கடற்கரைக் கிராமங்களுக்குச் சென்று இருப்பாக இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தகவல்களை அளித்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டாமா?
மோடி, அரச குடும்பத்து வாரிசா? கடற்கரை மணல் காலில் ஒட்டிக்கொண்டால் பாவமா? டில்லியில் இருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் பார்ப்பதும் இப்போது அவர் இங்கு வந்து பார்த்ததும் ஒன்றுதானே! மீனவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரம்!
தலையங்கம் ‘நிலப்பகுதியில் இவ்வளவு துயரங்கள் நிகழுமெனில்...’ எனக் குறிப்பிட்டுள்ள துயரங்களான மின்சாரம் இல்லாத, குடிநீர் இல்லாத, போக்குவரத்து இல்லாத, பால் கிடைக்காத, உணவுப் பொருள் கிடைக்காத நிலையை மாவட்ட ஆட்சியர் முதல்வருக்கு அறிவிக்கவில்லையா? ஏராளமான ரப்பர், தென்னை, வாழை மரங்கள் நாசமானது மக்களுக்கு தெரியாததா?
“ரோம் நகரம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்” என்ற செய்தியை எடப்பாடியார் மெய்ப்பித்துவிட்டார்! சந்தர்ப்பவசத்தால் முதல்வரான பழனிசாமி அதற்குத் தம்மைத் தகுதியுள்ளவராக மாற்றிக்கொள்ள வேண்டாமா? எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உதவிக்கு வரமாட்டார்கள் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கவில்லையா? எடப்பாடியாருடன் சேர்ந்தவர்கள் அடிமைப் புத்தியை உதறிவிட்டு சுயசிந்தனை உள்ளவர்களாக மாறினாலன்றி அரசியல் முகவரியை வைத்திருக்க முடியாது.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626 132
மதச்சார்பற்ற அரசியலமைப்பை ஏட்டளவில் வைத்துக்கொண்டு, செயல்பாட்டில் தற்போதைய அரசாங்கம் எதிராக நடந்து கொண்டிருக்கின்ற சூழலைத் தக்க காரணத்தோடு விளக்குவதாய் தலையங்கம் அமைந்துள்ளது. ஹாதியா வழக்குமூலம் நீதிமன்றம், மனித உரிமை அமைப்பு, மகளிர் ஆணையம் போன்றவற்றினைப் பயன்படுத்துகின்ற விதமும் குறிப்பிடப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் ஆதிரா நம்பியார் குறித்தும் மதங்கள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதும் எண்ணத்தக்கது. பல்வேறு கோணத்தில் அறம் திரைப்படம் குறித்த தன் எண்ணவோட்டங்களை அரசியல் ,திரைப்பட பின்னணி ,இயக்குநரின் ஈடுபாடு போன்றவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் முன்வைத்துள்ளமை கவனிக்கத்தக்கது.
ஒரு குறும்படம் நீண்ட விவாதப்பொருளாக மாற வேண்டிய காரணம், படத்தின் மையக்கருத்து, கதாபாத்திர கவனம், பேசப்பட்ட எதிர்வினைகள் எனப் பலவற்றைத் தக்க காரணத்தோடு எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. சூழல் நீதி என்னும் கட்டுரையில் உதயகுமாரன், முதலாளித்துவ நாடுகள் ஏழை நாடுகள்மீது செலுத்தும் அதிகாரத் திணிப்பாக சுற்றுச்சூழல் சுமைகள் இருப்பதை வெளிப்படையாக பேசியிருப்பதன் அவசியம் குறிப்பிடத்தகுந்தது. மேலும் தெற்கு நாடுகளுக்குள் நடக்கும் நடைமுறைகளைக் குறிப்பிட்டு இந்தியாவில் தெற்கே குப்பைத்திட்டங்களையும்,மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கின்ற திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்துவதின் நோக்கம் குறித்த கருத்துகள் எண்ணத்தக்கன.
கிருஷ்ண ஷோப்தி குறித்த கோபால கிருஷ்ணன் கட்டுரை அருமையான அறிமுகம் தருகின்ற கட்டுரையாக இருக்கிறது. படிப்பவருக்கு நல்ல அனுபவத்தைத் கொடுக்கிறது. 2017 இல் ஞானபீட விருது பெறுபவர் குறித்த வாழ்க்கையை சுருக்கமாக தெளிவாகச் சொல்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. கிருஷ்ண ஷோப்தி அவர்களின் பிறப்பு, படிப்பு, இலக்கிய ஈடுபாடு, முதலில் எழுதிய படைப்புகள் எனப் பல்வேறு செய்திகளைத் தந்தது அருமை. பெண்ணியம் குறித்த அவருடைய எண்ணங்கள், படைப்பு நெறிகள், 1980 இல் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் குறித்தும், மூலையில் போடப்பட்ட நூல் விருது பெற்ற சூழலும் வெளிப்படுத்தியமை நன்று. ஷோப்தி எழுதும் முறைகள், எழுதும் நேரம், பத்மபூஷன் விருதை திருப்பி கொடுத்ததின் பின்னணி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள இக்கட்டுரை வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது.
மேலாண்மை பொன்னுசாமி குறித்த அஞ்சலி பகுதியில் பீர்முகம்மது மேலாண்மையாரின் பண்புகள், எழுத்து, படைப்பு, விருது எனப் பலவற்றை அழகாகச் சொல்லியிருந்தார். புனத்தில் குஞ்ஞப்துல்லா குறித்து சுகுமாரன் எழுதியுள்ள அஞ்சலி பகுதிக்கட்டுரை புனத்தில்லாரின் பல்வேறு செய்திகளை வெளிப்படையாகப் பேசியதாக இருந்தது. சுகுமாரன் அவர்கள் எழுத்தாளரோடு கொண்டிருந்த உறவு, அவருடைய அரசியல் விலகி பதவிக்கு போட்டியிட்டது, அவருடைய பதில், மேலும் அவருடைய சமையல் திறன் போன்றவற்றைச் சுகமான அனுபவமாக கொடுத்திருந்தமை மிக நன்று. படைப்புகள், படைப்பு முறை, கோட்பாடுகளின் பார்வை போன்றவற்றை எடுத்துரைப்பதாக இருந்தது. பெஜவாடா வில்சன் அவர்களுடன் பெருமாள் முருகன் செய்த நேர்காணல் நேர்மையான பலவிடயங்களைத் தெளிவுபடுத்துவதாகவும் , அரசியலைத் தோலூரித்துக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. நகரமயமாக்கலில் துப்புரவுத் தொழிலாளர்கள் அனுபவித்த இன்னல்களையும், குடும்பங்கள் அடைந்ந பல்வேறு இழப்புகளையும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கோணத்தில் மிகச்சிறந்த, பொதுநலம் சார்ந்த நேர்காணலாக அமைந்திருந்தது பாராட்டத்தக்கது.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு
மக்களாட்சி என்று பெருமை பொங்கப் பேசிக் கொள்கிறோம்; ஆனால் இறுதிப்புகலிடம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற நீதிமன்றமும் தனிஉரிமையைக் காக்கப் போவதில்லை என்று தெரிந்தபின், எவர்மேல் குற்றம் சொல்வது? “இன்னாருக்கு இன்னபடி என்றெழுதி விடும்” நீதிதேவனின் மயக்கம் எப்போது தெளியும்? தேவை மதமா, மனிதமா என அறிவாளர்கள் சிந்தித்துப் போராட வேண்டிய தருணம் இது, என்று சுட்டிக் காட்டிய தலையங்கம், காலத்தினால் செய்த எச்சரிக்கை.
கிராமப்புற விவசாயிகளுக்காகப் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட ஒரே கட்சியான சிபிஐ(எம்), எவர்களுக்காகப் போராடியதோ அவர்களாலேயே கண்டுகொள்ளப் படாமல் இருப்பதே நகைமுரண்; மக்களைத் திரட்டும் பணியில் அக்கட்சி இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதைக் கூறும் ‘பொருளாதாரம் அரசியல் கிழமையிதழின் கணிப்பு மிகச் சரியே.
வயலட் எழுதிய ‘குறும்பட விவாதம்’ நிறையக் கேள்விகளை எழுப்பி நிற்கிறது. அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் பெண்ணின் சீற்றம், அவள் வழிமாறிப் போவதால் வடிந்து விடுமா? எந்திரமயமாய் உறவில் இணையும் காட்சிகளைத் திரையில் காட்டுவதற்கு, இயக்குனருக்கு வேறு எந்த உத்தியும் தெரியவில்லையா? இல்லை..கலைப்படம் என்றால் உள்ளதை உள்ளபடி காட்டித்தான் நிறுவமுடியுமா?
சூழல்நீதி பேசும் உதயகுமாரன், வலுத்தது மட்டுமே வாழும் என்பதை எடுத்துக்காட்டுகளோடு கூறியுள்ளார். உலகச் சட்டாம்பிள்ளை அமெரிக்கா தன் நாட்டில் கரியமிலவாயு விகிதத்தைக் குறைப்பதற்குத் தயாராகவில்லை.அவர்களுக்கு எப்போதும் தன்வீட்டுக் குப்பையை எதிர்வீட்டில் கொட்டித்தான் பழக்கம். உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் பாதிக்கப்படுவது சபிக்கப்பட்ட ஏழையரே என்பதுதான் உண்மை.
ஒரு பெரும் எழுத்தாளர் நம்ம ஊர்க்காரர் என்றுகூடத் தெரியாத கிராம மக்களோடு, ஒரு சில்லறைக்கடை வியாபாரியாக எளிமையாக வாழ்ந்து,சிகரம் தொட்ட மேலாண்மை அண்ணாச்சிக்குக் களந்தை தக்க முறையில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.நினைவாற்றல் மிக்க புனத்தில் குஞ்ஞப்துல்லா தன் இறுதிக்காலத்தில் நினைவிழப்பில் துன்புற்றார் என்று எண்ணும்போதே மனதை ஏதோ பிசைகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர் தன் உடல்நலனைப் பற்றிக் கவலை கொள்ளவே மாட்டார்களோ! எழுதிஎழுதி மாய்ந்துபோன போலந்து எழுத்தாளர் ஸ்டாசியாவும் நினைவில் வந்து போகிறார்.
தோப்பில் முகமது மீரானின் நாவலில் வரும் காட்சிகள், தொலைக்காட்சிகளிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வேடிக்கை காட்டும் “தூய்மை இந்தியா”வுக்குச் சமர்ப்பணம்.
இதழின் முத்தாய்ப்பாக ரமோன் மகசேசே விருது பெற்ற பெஜவாடா வில்சனின் கூர்நுனி சிதையாக் கூற்றுக்கள். மங்கள்யான் வெற்றியைக் காண முடிந்த நம்மால் கையால் மலம் அள்ளுவதை மாற்றப் பொறி ஒன்று கண்டுபிடிக்க முடியவில்லை. சாக்கடைக்குள் இறங்கி, பின் நிகழும் மரணங்கள் அரசாங்கத்தின் கொலைகள் என்ற குமுறலில்தான் எத்தனை கோபம். ‘சாவை எண்ண ஆரம்பித்துவிட்டோம்’ என்று அவர் சொன்னதைப் பார்த்தபின், ஒக்கிப் புயலில் சிக்கிய மீனவர்களை உடனே சென்று தேடாமல் அறுபது நாட்டிக்கல் மைலுக்குமேல் போகமுடியாது எனச் சட்டம்பேசி, பதினைந்து நாட்கள் கழித்துத் தேடி, கிடைக்கும் உடல்களின் என்ணிக்கையை ஒளிபரப்பும் அரசின் அக்கறை புரிகிறது. அன்னையின் பணிபோல் இது புனிதப்பணி என்று பீற்றுவோர்கள் ஏன் துப்புரவுப் பணி செய்யக்கூடாது? என அவர் கேட்பது, சிவன்மேல் விழுந்த பிரம்படி அல்லவா? என்றாலும் நம்புவோம் இயக்கவியல் பொய்ப்பதில்லை... மாறாது என்று எதுவும் இல்லை.
சோ. முத்துமாணிக்கம்
பழனி