கவிதை
மொழிதல்
மாளாத் துக்கத்தின்
தீரா மௌன ஓலம் என்
கவிதையின் அடிநாதம்
கருணை உயிர்ச் சூழல் விகசிப்பின்
இயற்கை வியப்பு
இன்னொருவர் தம் கவிதையின்
சுனைக் கீதமாகலாம்
அநீதிக் கெதிரான வாள் வீச்சின்
பளபளப்பாகச் சிலர் கவிதை
மின்னல் தெறிக்கலாம்
எதுவாயினும் உயிரின்
பெருமூச்சையே
கவிதையென மொழி கேட்கிறது.
இரவு
நிலமிசையில் இரவு மலர்ந்தது
காற்றில் ஏறி மெதுவாக
மிதந்துவரும் புத்தனின் புன்முறுவல்
என் உதடு அடைந்து அமர்ந்ததும்
பல்லாண்டுகளாகத் தொடரும்
உறக்க நதியில் மெல்ல மூழ்கினேன்
நாளையும் இரவு மலர்ந்தது.
ஒன்று
இதைத் தொட்டு அது
அதைத் தொட்டு இது
எதைத் தொட்டும்
ஒன்று தான்